தேடுதல்

Vatican News
புனித வெள்ளி வழிபாட்டில் மறையுரை வழங்கும் கர்தினால் காந்தலமெஸ்ஸா புனித வெள்ளி வழிபாட்டில் மறையுரை வழங்கும் கர்தினால் காந்தலமெஸ்ஸா  (Vatican Media)

புனித வெள்ளி - கர்தினால் காந்தலமெஸ்ஸா மறையுரை

திருஅவையில் காயப்பட்டிருக்கும் உடன்பிறந்த நிலையை குணமாக்க, திருஅவையின் மேய்ப்புப் பணியாளர்கள் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள்

உலக அமைதி எவ்வாறு நம்மிடமிருந்து துவங்கவேண்டுமோ, அதேவண்ணம், உலகில் நிலவவேண்டிய உடன்பிறந்த நிலை, நமக்கு அருகில் ஆரம்பமாகவேண்டும் என்று, பாப்பிறை இல்லத்தின் மறையுரையாளரான கர்தினால் இரானியேரோ காந்தலமெஸ்ஸா (Raniero Cantalamessa) அவர்கள் கூறினார்.

உடன்பிறந்த நிலை நம்மிடமிருந்து ஆரம்பமாக...

ஏப்ரல் 2, புனித வெள்ளியன்று மாலை 6 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்திய கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் திருச்சிலுவை வணக்க வழிபாட்டில், கர்தினால்  காந்தலமெஸ்ஸா அவர்கள் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.

உடன்பிறந்த நிலை, நம்மிடமிருந்து, அதாவது, கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து துவங்கவேண்டும் என்று கூறிய கர்தினால் காந்தலமெஸ்ஸா அவர்கள், இன்றைய நிலையில் திருஅவைக்குள் காயப்பட்டிருக்கும் உடன்பிறந்த நிலையை குணமாக்க, திருஅவையின் மேய்ப்புப் பணியாளர்கள் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உடன்பிறந்த நிலையின் பல்வேறு பரிமாணங்கள்

உடன்பிறந்த நிலையின் பல்வேறு பரிமாணங்களை, தன் மறையுரையில் விளக்க முற்பட்ட  கர்தினால்  காந்தலமெஸ்ஸா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'அனைவரும் உடன்பிறந்தோர்' திருமடலில், உடன்பிறந்த நிலை குறித்து கூறப்பட்டுள்ள கருத்துக்களைச் சுட்டிக்காட்டினார்.

இன்று நாம் கொண்டாடும் சிலுவை என்ற மறையுண்மை, உடன்பிறந்த நிலையை அடித்தளமாகக் கொண்டது என்றும், கிறிஸ்து மயமான இந்த அடித்தளம், கல்வாரியில் நிறுவப்பட்டது என்றும் கர்தினால்  காந்தலமெஸ்ஸா அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

கல்வாரி சிலுவையைத் தொடர்ந்து வந்த பாஸ்கா மறைப்பொருளின் வழியே, ‘சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்று’ (உரோமையர் 8:29) தந்தையாம் இறைவன் விரும்பினார் என்பதை, கர்தினால் காந்தலமெஸ்ஸா அவர்கள் எடுத்துரைத்தார்.

நான்கு குழுவிலும் இணையாத இயேசு

இயேசு வாழ்ந்த காலத்தில், அவரைச் சுற்றியிருந்த பரிசேயர், சதுசேயர், ஏரோதியர் மற்றும் தீவிரவாதத்தினர் என்ற நான்கு குழுவிலும் அவர் இணையாமல், அனைவரையும் இறைவனின் பிள்ளைகளாக, உடன்பிறந்தோராக மாற்றுவதற்காக உழைத்தார் என்று கூறிய கர்தினால் காந்தலமெஸ்ஸா அவர்கள், கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த வழியைப் பின்பற்ற அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

துவக்க கால கிறிஸ்தவரிடையே நிலவிய உடன்பிறந்த உணர்வு பலரையும் ஈர்த்தது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் காந்தலமெஸ்ஸா அவர்கள், இன்றைய திருஅவையில், மக்களை வழிநடத்துவோர் அந்த உடன்பிறந்த நிலையின் வழியே மக்களை இறைவனிடம் அழைத்துச் செல்கின்றனரா என்ற ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்ற அழைப்புடன் தன் மறையுரையை நிறைவு செய்தார்.

02 April 2021, 22:23