தேடுதல்

"தங்க வங்கமான" பங்களாதேஷ் நாட்டுக்கு திருத்தந்தையின் செய்தி

ஷேக் முஜிபுர் இரஹ்மான் அவர்கள் பிறந்ததன் நூறாம் ஆண்டையும், நாடு விடுதலையடைந்த 50ம் ஆண்டையும் இணைத்து கொண்டாடும் பங்களாதேஷ் நாட்டிற்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பங்களாதேஷ் நாட்டிற்கு அடித்தளமிட்ட ஷேக் முஜிபுர் இரஹ்மான் அவர்கள், ஞானமும், பரந்துவிரிந்த கண்ணோட்டமும் கொண்ட, சந்திப்பு, மற்றும், உரையாடல் கலாச்சாரத்தை வளர்த்தவர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பங்களாதேஷ் நாட்டிற்கு அனுப்பியுள்ள ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

பங்களாதேஷ் நாட்டின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் முஜிபுர் இரஹ்மான் அவர்கள் பிறந்ததன் நூறாம் ஆண்டையும், அந்நாடு விடுதலையடைந்த 50ம் ஆண்டையும் இணைத்து, மார்ச் 17ம் தேதி முதல் 26ம் தேதி முடிய அந்நாட்டில் நடைபெற்றுவரும் கொண்டாட்டங்களையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின், அரசுத்தலைவர், பிரதமர், மற்றும், மக்களுக்கு, காணொளிச் செய்தியொன்றை, மார்ச் 24, இப்புதனன்று அனுப்பிவைத்தார்.

"தங்க வங்கம்" (Sonar Bangla) என்றழைக்கப்படும் பங்களாதேஷ் நாடு, இயற்கை அழகையும், இன்றைய காலத்தின் முன்னேற்றங்களையும் ஒருங்கிணைக்க முயலும் அதே வேளையில், அந்நாட்டில் நிலவும் பல்வேறு கலாச்சாரங்களையும், மொழிகளையும் வளர்க்கமுயல்கிறது என்பதை, இச்செய்தியின் துவக்கத்தில் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தில்தான் ஒவ்வொருவரும் சுதந்திரமாக, அமைதியாக, பாதுகாப்பாக வாழமுடியும் என்பதை, இந்நாட்டிற்கு அடித்தளமிட்ட ஷேக் முஜிபுர் இரஹ்மான் அவர்கள் நன்கு அறிந்திருந்ததால், நீதியான, மனித உடன்பிறந்த உணர்வுடன் திகழும் நாட்டை உருவாக்க விழைந்தார் என்று திருத்தந்தை இக்காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

இளம் வயதுடைய பங்களாதேஷ் நாட்டின் மீது தானும், தனக்கு முந்தைய திருத்தந்தையரும், தனி அன்பும், அக்கறையும் கொண்டிருந்தனர் என்பதையும், பங்களாதேஷ் நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நல்லுறவுகள் செழித்து வளரும் என்று தான் நம்புவதாகவும், இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அந்நாட்டில் வளர்ந்து வரும் பல்சமய உரையாடலை தான் நேரில் கண்டு மகிழ்ந்ததாகக் கூறியுள்ளார்.

தங்கள் விடுதலையின் ஐம்பதாம் ஆண்டைக் கொண்டாடும் பங்களாதேஷ் நாட்டு மக்கள், உண்மையான உரையாடல் மற்றும் பன்முகக் கலாச்சாரத்தின் மீது உண்மையான மதிப்பு ஆகிய முயற்சிகள் வழியே, நலமான அரசியல் வாழ்வை உருவாக்குவர் என்று தான் நம்புவதாக திருத்தந்தை இக்காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

இளமை மிகுந்த பங்களாதேஷ் நாட்டின் வளமையான எதிர்காலத்தை உருவாக்குவதில், இளையோர் முழு மூச்சுடன் உழைக்குமாறு தான் ஊக்கப்படுத்துவதாகவும், அந்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள புலம்பெயர்ந்தோர், மற்றும் வறியோர் ஆகியோருக்கு, தாராள மனதுடன் உதவிகள் புரிய தான் விண்ணப்பிப்பதாகவும் கூறி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இக்காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 March 2021, 15:19