தேடுதல்

Vatican News
புனித பேதுரு பெருங்கோவிலின் முகப்பு புனித பேதுரு பெருங்கோவிலின் முகப்பு 

வத்திக்கான் பொருளாதாரச் சரிவைத் தடுக்கும் முடிவுகள்

கர்தினால்களின் ஊதியத்தில் 10 விழுக்காடு, துறைத்தலைவர்களின் ஊதியத்தில் 8 விழுக்காடு, மற்றும், திருப்பீடத்தில் பணியாற்றும் அருள்பணியாளர்கள் மற்றும் துறவியரின் ஊதியங்களில் 3 விழுக்காடு குறைக்கப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"நீடித்து நிலைத்திருக்கும் எதிர்காலப் பொருளாதாரத்திற்குத் தேவையான முடிவுகள் இன்று தேவைப்படுகின்றன, அவற்றில், ஊழியரின் ஊதியங்களும் ஒன்று" என்ற சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 24, இப்புதனன்று, தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கியுள்ள 'motu proprio' ஆணையை வெளியிட்டுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு, திருப்பீடத்தில் பணியாற்றும் கர்தினால்கள் துவங்கி, ஒவ்வொரு துறையின் தலைவர்கள், செயலர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஊதியங்களில் கட்டுப்பாடுகளைக் கொணரும் ஆணையை திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.

கர்தினால்கள் பெற்றுவரும் ஊதியத்தில் 10 விழுக்காடு, துறைத்தலைவர்கள் மற்றும் செயலர்கள் பெற்றுவரும் ஊதியத்தில் 8 விழுக்காடு, மற்றும், திருப்பீடத்தில் பணியாற்றும் அனைத்து அருள்பணியாளர்கள் மற்றும் துறவியரின் ஊதியங்களில் 3 விழுக்காடு குறைக்கப்படும் என்று இவ்வாணையில் கூறப்பட்டுள்ளது.

ஊழியர்கள் பணியாற்றியுள்ள ஆண்டுகள் எண்ணிக்கையின் அடிப்படையில், இதுவரை வழங்கப்பட்டு வந்த ஊதிய உயர்வு, 2023ம் ஆண்டு முடிய நிறுத்தப்படும் என்றும், இந்த முடிவு, கீழ்நிலையில் பணியாற்றும் பொதுநிலையினரைப் பாதிக்காது என்றும் இவ்வாணையின் வழியே தெளிவாக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வத்திக்கான் நாடும், திருப்பீடமும் சந்தித்துவரும் பொருளாதார பின்னடைவையும், குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்றினால், உலகெங்கும் உருவாகியுள்ள பொருளாதாரச் சரிவையும் கருத்தில்கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக திருத்தந்தை இவ்வாணையில் விளக்கிக் கூறியுள்ளார்.

2021ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்றும், இந்த கட்டுப்பாடுகள், 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முடிய பின்பற்றப்படும் என்றும், இந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.

24 March 2021, 15:45