தேடுதல்

பல்சமயத்தவருடன் திருத்தந்தை பல்சமயத்தவருடன் திருத்தந்தை 

ஊர் நகரில் பல்சமயத்தினருடன் திருத்தந்தையின் இறைவேண்டல்

கடத்தப்பட்டுள்ள மனிதர்களை விடுவிப்பதிலும், பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதிலும், எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு இறைவா நீர் உதவியருளும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

எல்லாம் வல்ல இறைவா, எங்களைப் படைத்தவரே, நீர் எம் மனிதகுல குடும்பத்தையும், உம் அனைத்து கைவேலைப்பாடுகளையும் அன்புகூர்கிறீர்: 

யூதர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என ஆபிரகாமின் குழந்தைகளாகிய நாங்கள் ஏனைய மதத்தவருடனும், நல்மனம் கொண்ட அனைவருடனும் இணைந்து, இந்நாட்டின் உன்னத குடிமகனான ஆபிரகாமை, எங்கள் அனைவரது நம்பிக்கையின் பொதுவானத் தந்தையாக தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.

உமக்கு முற்றிலுமாக கீழ்ப்படிந்து, தன் குடும்பத்தையும், இனத்தையும், சொந்த நிலத்தையும் விட்டுவிட்டு தனக்குத் தெரியாத ஓர் இடத்தை நோக்கி பயணத்தைத் துவக்கி, நம்பிக்கையின் மனிதராகச் செயல்பட்ட ஆபிரகாமின் எடுத்துக்காட்டிற்காக இறைவா உமக்கு நன்றியுரைக்கிறோம்.

மனத்துணிவு, தாக்குப்பிடித்து நிற்றல், ஆவியின் வல்லமை, தாராள மனப்பான்மை, விருந்தோம்பல் ஆகியவற்றில், நம்பிக்கையின் பொது தந்தையாகிய ஆபிரகாமின் வழியாக எமக்கு வழங்கிய எடுத்துக்காட்டிற்காக, இறைவா உமக்கு நன்றிகூறுகின்றோம்.

உம் கட்டளைக்கு கீழ்ப்படிந்தவராக, தன் ஒரே மகனையே பலிகொடுக்க தயாராக இருந்த ஆபிரகாமின் வீரத்துவ நம்பிக்கைக்காக, இறைவா, உமக்கு சிறப்பான விதத்தில் நன்றிகூறுகின்றோம். ஒரே மகனையே பலிகொடுக்க நீர் வைத்த சோதனை, மிகவும் கடினமானது, இருப்பினும் அதிலிருந்தும் ஆபிரகாம் வெற்றி வீரராக வெளிவந்தார். ஏனெனில், கருணை நிறைந்தவரும், எதையும் முற்றிலும் புதிதாகத் துவக்குவதற்கு வாய்ப்பளிப்பவருமான உம்மில் அவர் முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார்.

எம் தந்தை ஆபிரகாமை நீர் ஆசிர்வதித்து, அவரையே அனைத்து மக்களுக்கும் ஓர் ஆசீராக வழங்கியதற்காக இறைவா உமக்கு நன்றி நவில்கின்றோம்.

இறைவா, உமக்கும் எம் சகோதரர் சகோதரிகளுக்கும் எங்களைத்  திறக்க உதவும் அதேவேளை,  ஒவ்வொரு செயல்பாட்டிலும் நீர் உமது வாக்குறுதிகளை விசுவாசமாக இருந்து செயல்படுத்துவதை கண்டுணரவும், எம் நற்செயல்களில் மிகுதியாக வெளிப்படவும் வல்ல உறுதியான நம்பிக்கையை எமக்கு அருளுமாறு, ஆபிரகாமின் ஆண்டவரும், எம் கடவுளுமாகிய உம்மை நோக்கி இறைஞ்சுகிறோம்.

அனைவருக்கும், குறிப்பாக, புலம்பெயர்ந்தோர், குடிபெயர்ந்தோர், கைம்பெண்கள், கைவிடப்பட்டோர், ஏழைகள், நோயுற்றோர் என அனைவர் மீதும், உம் அன்புடன் கூடிய அக்கறையின் சான்றுகளாக எங்களை மாற்றியருளும்.

            ஒருவரையொருவர் மன்னிப்பதற்கு எங்கள் இதயங்களைத் திறந்தருளும். அதன் வழியாக எம்மை, ஒப்புரவின் கருவிகளாகவும், நீதியும் உடன்பிறந்த உணர்வும் உடைய சமுதாயத்தைக் கட்டியெழுப்புபவர்களாகவும் மாற்றியருளும், இறைவா.

இறந்துபோன அனைவரையும், குறிப்பாக, போருக்கும், வன்முறைக்கும் பலியானவர்களையும், உம் அமைதியின் இல்லத்திற்குள் வரவேற்று  அவர்களை ஒளிர்வித்தருளும்.

கடத்தப்பட்டுள்ள மனிதர்களை விடுவிப்பதிலும், சிறப்பான விதத்தில், பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதிலும், அரசு அதிகாரத்தில் இருப்போர் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இறைவா நீர் உதவியருளும்.

நீர் உம் நன்மைத்தனத்திலும், தாராள மனத்திலும் எங்கள் அனைவருக்கும் வழங்கிய பொதுவான இல்லமாகிய இவ்வுலகை பராமரிக்க எமக்கு உதவியருளும்.

இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, எம் கரங்களுக்கு வலுவூட்டியருளும். கட்டாயச் சுழலில் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் விட்டுவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள், மாண்புடனும் பாதுகாப்புடனும் நாடு திரும்பி,  வளமையும், அமைதியும் நிறைந்த புதியதொரு வாழ்வை நோக்கி நடைபோட  நாங்கள் உதவிட  தேவைப்படும் பலத்தை எமக்கு வழங்கியருளும். ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2021, 11:55