தேடுதல்

Vatican News

திருத்தந்தை : இறைநம்பிக்கையை கொணரும் ஈராக் பயணம்

திருத்தந்தை : ஈராக் நாட்டில் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருக்கும் மறைசாட்சிகள், ஈராக் மக்கள் தங்கள் அன்பில் நிலைத்திருக்க உதவுவார்களாக

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவனிடம் மன்னிப்பையும் ஒப்புரவையும் இறைஞ்சும் ஒரு திருப்பயணியாக, ஈராக் நாட்டில் இதயங்களின் ஆறுதலையும், காயங்கள் குணப்படுத்தலையும் வேண்டி, அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதியின் திருப்பயணியாக வருகிறேன்

மார்ச் 5, இவ்வெள்ளிக்கிழமையன்று காலை, ஈராக் நாட்டை நோக்கி, தன் திருத்தூதுப் பயணத்தை துவங்க உள்ள நிலையில், இவ்வியாழனன்று ஈராக் நாட்டு மக்களுக்கென காணொளிச் செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகப் பழமையானதாகவும், நாகரீகத்தின் மிக உயர்ந்த தொட்டிலாகவும் இருக்கும் இந்நாட்டிற்கு சென்று, அங்குள்ள மக்களை முகமுகமாக சந்திக்க ஆவல் கொண்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.

யூதம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற மூன்று மதங்களின் தந்தையாகிய ஆபிரகாமின் அடையாளத்துடன் ஈராக் நாட்டிற்கு வரும் தான், ஏனைய மதங்களின் உடன்பிறப்புகளோடு இணைந்து நடக்கவும், செபிக்கவும், அமைதியின் திருப்பயணியாக உடன்பிறந்த நிலையைத் தேடி வருவதாகத் தன் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மறைசாட்சிகளின் உதவியுடன்...

பல்வேறு துயர்களின் மத்தியிலும் விசுவாசத்திற்கு சான்றாக தொடர்ந்து வாழும் ஈராக் கிறிஸ்தவர்கள் குறித்து தான் பெருமைப்படுவதாக தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாட்டில் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருக்கும் மறைசாட்சிகள், ஈராக் மக்கள் அன்பில் நிலைத்திருக்க உதவுவார்களாக என்ற ஆவலை வெளியிட்டுள்ளார்.

வீடுகள், கோவில்கள் அனைத்தும், பல்வேறு வழிகளில் சேதமடைந்துள்ள ஈராக் நாட்டிற்கும், மத்திய கிழக்குப்பகுதிக்கும், அகில உலக திருஅவையின் பாசமிகு கரிசனையை தான் தாங்கி வருவதாகவும், திருத்தந்தை, தன் செய்தியில் கூறியுள்ளார்.

நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து செல்ல...

தீமைகள் பெருகிவரும் சுழல்களில், அவற்றைக் கண்டு, நம்பிக்கையிழக்காமல், அனைத்தையும் விட்டுவிட்டு செல்லவேண்டிய நிலையிலும், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு தொடர்ந்து சென்ற ஆபிரகாம் போல், வானத்தில் காணும் விண்மீன்களில் நமக்குரிய வாக்குறுதிகளைக் காண்போம் என, ஈராக் கிறிஸ்தவர்களை நோக்கி, தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை.

இந்நாட்டில் பல்வேறு துன்பங்களை அடைந்தாலும், நொறுங்கிப்போகாமல் இருக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யாசிதி இனத்தவர் ஆகிய அனைவருக்கும் இறைவனின் நம்பிக்கையை தாங்கி வருவதாகக் கூறும் திருத்தந்தையின் செய்தி, அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றிய யோனாவின் முன்னறிவிப்புகள் மீண்டும் நினிவே நகரிலிருந்து எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன என்பதையும், ஆபிரகாமின் பயணத்தையும் நினைவில் கொண்டவர்களாக, இந்த பெருந்தொற்று காலத்தில் ஒருவருக்கொருவர் உதவிசெய்து, உடன்பிறந்த நிலையை பலப்படுத்தி, அமைதியின் வருங்காலத்தை கட்டியெழுப்புவோம் எனற விண்ணப்பத்துடன் நிறைவு பெறுகிறது. 

04 March 2021, 15:35