தேடுதல்

Vatican News
திருத்தந்தை, பிரான்ஸ், அரசுத்தலைவர் மக்ரோன் (2018.06.26) திருத்தந்தை, பிரான்ஸ், அரசுத்தலைவர் மக்ரோன் (2018.06.26)  (Vatican Media)

பிரான்ஸ் அரசுத்தலைவருடன் தொலைப்பேசி உரையாடல்

திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம், மத்தியக் கிழக்குப் பகுதிக்கு, உண்மையிலேயே ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது – பிரெஞ்சு அரசுத்தலைவர் மக்ரோன்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடவுளிடம் திரும்பி வருவதற்கு சாக்குப்போக்குச் சொல்லாமல், அவரிடம் நெருங்கிச் செல்வதற்குச் சரியான காலம், தவக்காலம் என்பதை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 23, இச்செவ்வாயன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறுஞ்செய்திகளை வெளியிட்டுள்ளார்.

“ஆண்டவரே, நான் உம்மிடம் பிறகு வருகிறேன், இன்று என்னால் வரமுடியாது, நாளை நான் இறைவேண்டல் செய்யவும், மற்றவருக்கு ஏதாவது செய்யவும் துவங்குவேன் என்று எத்தனையோ முறை, நாம் ஆண்டவரிடம் கூறியிருக்கிறோம். இவ்வுலக வாழ்வில் நாம் ஆற்றுவதற்கு எப்போதும் காரியங்கள் உள்ளன, ஆயினும், இப்போதே கடவுளிடம் திரும்பிச் செல்வதற்கு ஏற்ற காலம் இதுவே” என்ற சொற்கள், தவக்காலம் (#Lent) என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் பதிவாகியுள்ளன

தவக்காலம் (#Lent) என்ற ஹாஷ்டாக்குடன் வெளியான திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “ஆண்டவரிடம் மனந்திரும்பிச் செல்லும் காலங்களையும், வழிகளையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற மாயையில், இந்த அருளின் காலத்தை வீணாக்காமல் இருப்போம்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.  

திருத்தந்தை, பிரான்ஸ் அரசுத்தலைவர்

கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியை, தான் தொடங்கியதன் எட்டாம் ஆண்டு நிறைவுக்கு, பிரான்ஸ் நாட்டு அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் அவர்கள் அனுப்பியிருந்த நல்வாழ்த்துச் செய்திக்கு, தொலைப்பேசி வழியாக நன்றி கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 21, இஞ்ஞாயிறன்று, அரசுத்தலைவர் மக்ரோன் அவர்களுடன், ஏறத்தாழ நாற்பது நிமிடங்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொலைப்பேசியில் உரையாடினார் என்று, பிரான்ஸ் அரசுத்தலைவரின் Élysée மாளிகையின் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த உரையாடலில், இவ்விரு தலைவர்களும், கோவிட்-19 தொற்றுநோய் ஒழிந்தபின்னர் உலகம் எதிர்கொள்ளும் சவால்கள், திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளைப் பாதித்துள்ள, பல்வேறு விவகாரங்கள் இடம்பெற்றன என்று, அந்த அலுவலகம் அறிவித்துள்ளது.

திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம், மத்தியக் கிழக்குப் பகுதிக்கு, உண்மையிலேயே ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது என்று, அரசுத்தலைவர் மக்ரோன் அவர்கள், திருத்தந்தையிடம் கூறியுள்ளார்.

இந்த தொலைப்பேசி உரையாடல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின்பேரில் இடம்பெற்றது என்றும், அரசுத்தலைவர் மக்ரோன் அவர்கள், 2017ம் ஆண்டு அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின்னர், இவ்விரு தலைவர்களும்   ஐந்தாவது முறையாக மேற்கொண்டுள்ள உரையாடல் இது, என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் Nice பேராலயம் பயங்கரவாதத்தால் தாக்கப்பட்டபின்னர், அதே ஆண்டு அக்டோபர் 30ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவர் மக்ரோன் அவர்களுடன், தொலைப்பேசியில் உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

23 March 2021, 15:48