தேடுதல்

Vatican News
புனித யோசேப்பு புனித யோசேப்பு  (©MPIX.TURE - stock.adobe.com)

புனித யோசேப்பு, இறைத்திட்டத்தை ஏற்பதில் மிகச்சிறந்த எடுத்துக்காட

தங்களுக்கென்று கடவுள் வகுத்துள்ள கனவுகளை உண்மையாக்குவதற்கு, தெளிந்துதேர்வுசெய்யும் இளையோருக்கு, புனித யோசேப்பு உதவுவாராக – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனித யோசேப்பு பெருவிழாவான, மார்ச் 19, இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்ட, 58வது உலக இறையழைத்தல் நாள் செய்தி, இவ்வெள்ளியன்று கத்தோலிக்கத் திருஅவையில் துவங்கியுள்ள “அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு”, புனித யோசேப்பு ஆண்டு ஆகிய மூன்றையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறுஞ்செய்திகளை வெளியிட்டுள்ளார்.

“புனித யோசேப்பு, கடவுளின் திட்டத்தை ஏற்பதில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.  அனைவருக்கும், குறிப்பாக, தங்களுக்காக கடவுள் வகுத்துள்ள கனவுகளை உண்மையாக்குவதற்கு, தெளிந்துதேர்வுசெய்யும் இளையோருக்கு புனித யோசேப்பு உதவுவாராக” என்ற சொற்கள், இறையழைத்தல்கள் (#Vocations) என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் பதிவாகியுள்ளன.

திருத்தந்தையின் 58வது உலக இறையழைத்தல் நாள் செய்தியை வலைத்தளத்தில் வாசிப்பதற்கு உதவியாக, வலைத்தள முகவரியும், அந்த முதல் டுவிட்டர் செய்தியோடு இணைக்கப்பட்டுள்ளது.

புனித யோசேப்பு ஆண்டு

நல்ல தந்தையாக இருப்பது என்பது, தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல், அனைத்தையும் வழங்குவதாகும். எதையும் பதிலுக்குத் திருப்பிக் கேட்காமல்,  மன்னிப்பதாகும், பொறுமையோடும், நம்பிக்கையோடும் காத்திருப்பதாகும். இவ்வாறு வாழ்வதென்பது, விண்ணகத்தில் இருக்கும் "நல்ல தந்தை"யின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுவதாகும். அனைத்துத் தந்தையரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக! என்ற சொற்கள், புனித யோசேப்பு ஆண்டை மையப்படுத்தி, திருத்தந்தை வெளியிட்டுள்ள  டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

குடும்ப ஆண்டு டுவிட்டர்

மேலும், “அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டை“ மையப்படுத்தி, அன்பின் மகிழ்வு (#AmorisLaetitia) என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “ஒவ்வொரு குடும்பமும், தனது இல்லத்தில் நாசரேத்து திருக்குடும்பத்தின் உயிருள்ள பிரசன்னத்தை உணரவேண்டும் என்று இறைவேண்டல் செய்கிறேன். சோதனைகள், மற்றும், துன்பங்களில்கூட மகிழ்வின் ஊற்றாக இருக்கும், உண்மையான, மற்றும், மனத்தாராளம் நிறைந்த அன்பால், அவர்கள், சிறு குடும்பங்களை நிரப்புவார்களாக” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. 

19 March 2021, 12:31