தேடுதல்

Vatican News
மார்ச் 25 - ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்புத் திருநாள் மார்ச் 25 - ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்புத் திருநாள் 

மார்ச் 25ம் தேதி திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்திகள்

"மரியா நம்மை இறைவனோடு பிணைக்கும் பாலம் மட்டும் அல்ல, நம்மைச் சந்திக்க இறைவன் உருவாக்கிக்கொண்ட பாதையும் அவரே. இந்தப் பாதையின் வழியே நாமும் இறைவனை அடையவேண்டும்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பங்களாதேஷ் நாட்டில் ரோஹிங்கியா முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்கள் மற்றும் இதனால் பாதிக்கப்பட்டோரை மனதில் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 25 இவ்வியாழனன்று, தன் முதல் டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்தார்.

ஆங்கிலத்திலும், இத்தாலிய மொழியிலும் மட்டுமே வெளியான இந்த டுவிட்டர் பதிவில், "ரோஹிங்கியா முகாம் தீ விபத்தில் பலியானவர்கள் மற்றும் காணாமல் போயிருப்போருக்காக செபிக்கிறேன். இம்மக்களை வரவேற்று, புகலிடம் அளித்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்காகவும் இறைவேண்டல் செய்கிறேன்" என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

மார்ச் 25, இவ்வியாழனன்று, ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்புத் திருநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் செய்தியில், "மரியா நம்மை இறைவனோடு பிணைக்கும் பாலம் மட்டும் அல்ல, நம்மைச் சந்திக்க இறைவன் உருவாக்கிக்கொண்ட பாதையும் அவரே. இந்தப் பாதையின் வழியே நாமும் இறைவனை அடையவேண்டும்" என்ற சொற்களை பதிவு செய்திருந்தார்.

அத்துடன், இத்தாலிய கவிஞர் டான்டே அவர்கள் மரணமடைந்ததன் 7ம் நூற்றாண்டு நிறைவு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை வெளியிட்ட “Candor lucis aeternae” திருத்தூது மடலின் இறுதி வரிகளை ஒரு டுவிட்டர் பதிவாக வெளியிட்டு, அத்துடன், இந்தத் திருத்தூது மடலை வாசிக்க உதவியாக, அந்த இணையத்தள முகவரியையும் வழங்கியுள்ளார்.

மேலும், மார்ச் 25 இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்புத் திருநாளன்று, அன்னை மரியாவின் 'ஆம்' என்ற பதிலுரையை மையப்படுத்தி, நாம் அனைவரும் வாழ்வுக்கும், இறைவனின் திருவுளத்திற்கும் 'ஆம்' என்று சொல்ல அழைக்கப்பட்டுள்ளோம் என்ற எண்ணத்தை, தன் 4வது டுவிட்டர் செய்தியாக திருத்தந்தை வெளியிட்டிருந்தார்.

25 March 2021, 15:23