தேடுதல்

ஈராக் திருத்தூதுப் பயணத்தின் போது, நோயுற்ற சிறுவனை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் ஈராக் திருத்தூதுப் பயணத்தின் போது, நோயுற்ற சிறுவனை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

ஈராக் திருத்தூதுப் பயணம் – ஆறு டுவிட்டர் செய்திகள்

"நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் ஈராக்கியர்களுக்கு நான் சொல்லவிழைவது இதுதான்: நீங்கள், ஆபிரகாமைப்போல், அனைத்தையும் விட்டுவிட்டீர்கள், அவரைப்போலவே, நம்பிக்கையையும், எதிர்நோக்கையும் கொண்டிருங்கள்."

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 10, இப்புதனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய புதன் மறைக்கல்வி உரையில், மார்ச் 5ம் தேதி முதல் 8ம் தேதி முடிய அவர் மேற்கொண்ட ஈராக் நாட்டு திருத்தூதுப் பயணத்தைக் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதைத் தொடர்ந்து, அப்பகிர்வில் கூறிய எண்ணங்களை, 6 டுவிட்டர் செய்திகளாக வெளியிட்டார்.

இவற்றில், முதல் இரு டுவிட்டர் செய்திகள், @pontifex என்ற அவரது டுவிட்டர் பக்கத்தில், வழக்கமாக வெளியாகும் எட்டு மொழிகளில் பதிவாகியிருந்தன. இறுதி நான்கு டுவிட்டர் செய்திகள், ஈராக் நாட்டிற்கென சிறப்பான விதத்தில் வெளியானதால், அவை, இத்தாலியம், ஆங்கிலம், அரேபியம் ஆகிய மூன்று மொழிகளில் மட்டும் வெளியாயின.

"போருக்கு பதிலாக அமைவது, மற்றொரு போர் அல்ல. ஆயுதங்களுக்கு பதிலாக அமைவது, மேலும் பல ஆயுதங்கள் அல்ல. உடன்பிறந்த நிலையே பதிலாக அமைகிறது. இது, ஈராக் நாட்டிற்கு மட்டுமல்ல, மோதல்களில் ஈடுபட்டுள்ள பல பகுதிகளுக்கும், இறுதியில், இவ்வுலகம் முழுமைக்கும் இதுவே சவாலாக அமைகிறது" என்ற சொற்களை, மார்ச் 10, புதனன்று, தன் முதல் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார் திருத்தந்தை.

"ஈராக் நாட்டிற்காகவும், மத்தியக் கிழக்குப் பகுதிக்காவும் இறைவேண்டலைத் தொடர்வோம். அழிவுகளுக்கு மத்தியிலும், அந்நாட்டின் அடையாளமாக விளங்கும் பேரீச்ச மரம், வளர்ந்து, கனிதருகிறது. அதேபோல், உடன்பிறந்த நிலையும் உள்ளது. ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி, அது வளர்ந்து, கனிதருகிறது" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் 2வது டுவிட்டர் செய்தியில் வெளியிட்டார்.

இப்புதன் காலையில் வெளியான இவ்விரு டுவிட்டர் செய்திகளைத் தொடர்ந்து, பிற்பகலிலும், மாலையிலும், மேலும் நான்கு டுவிட்டர் செய்திகள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், ஆங்கிலம், இத்தாலியம் மற்றும் அரேபியம் ஆகிய மூன்று மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்டன.

ஈராக் நாட்டின் அரசுத்தலைவர், Barham Salih, ஷியா இஸ்மாம் பிரிவின் தலைவர், பெரும் அயதொல்லா அல்-சிஸ்தானி, குர்திஸ்தான் தலைவர், பிரதமர், அரசு அதிகாரிகள், முதுபெரும் தந்தையர், ஆயர்கள் என, தனிப்பட்ட மனிதர்களுக்கும், குழுக்களுக்கும் தன் நன்றியை தெரிவித்து, திருத்தந்தை, மேலும் மூன்று செய்திகளை வெளியிட்டிருந்தார்.

இப்புதன் மாலையில் திருத்தந்தை வெளியிட்ட இறுதி டுவிட்டர் செய்தியில், அந்நாட்டிலிருந்து வெளியேறியவர்களைக் குறித்து தன் கருத்துக்களை வெளியிட்டிருந்தார் திருத்தந்தை.

"நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் பல ஈராக்கியர்களை எண்ணிப்பார்க்கிறேன். அவர்களுக்கு நான் சொல்லவிழைவது இதுதான்: நீங்கள், ஆபிரகாமைப்போல், அனைத்தையும் விட்டுவிட்டீர்கள், அவரைப்போலவே, நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் கொண்டிருங்கள். நீங்கள் இருக்கும் இடங்களில் நட்பையும், உடன்பிறந்த நிலையையும் உருவாக்குங்கள். முடிந்தால், நீங்கள் ஈராக் நாட்டிற்குத் திரும்புங்கள்" என்ற விண்ணப்பம், திருத்தந்தை வெளியிட்ட 6வது டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 11, இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், தவக்காலத்தையும், குணம் பெறுதலையும் இணைத்து தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

"நாம் அனைவரும் ஆன்மீகக் குறைபாடுகளைக் கொண்டுள்ளோம். இவற்றை, நம் முயற்சியால் குணமாக்க இயலாது. நமக்கு இயேசுவின் குணமளித்தல் தேவை. நமது காயங்களை அவரிடம் காட்டி, 'இயேசுவே, என் பாவம், மற்றும் துயர்களோடு, உமது பிரசன்னத்தில் இருக்கிறேன். நீர் என்னை விடுவிக்க இயலும். என் இதயத்தை குணப்படுத்தும்' என்று சொல்வோம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

11 March 2021, 12:47