தேடுதல்

பிலிப்பீன்சில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு பிலிப்பீன்சில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு 

தவக்காலத்தில் நம் இதயங்கள் எதை நோக்கிச் செல்கின்றன?

பிலிப்பீன்ஸில் கிறிஸ்தவம் பரவத்தொடங்கியதன் 500ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 14, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றுவார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தவக்காலத்தில் நம் இதயங்கள் எதைநோக்கிச் செல்லவேண்டும் என்பது பற்றிய தன் எண்ணங்களை, தவக்காலம், (#Lent) என்ற ‘ஹாஷ்டாக்’குடன், மார்ச் 13, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளார்,  திருத்தந்தை பிரான்சிஸ்.

“நம் இதயங்கள் எதை நோக்கிச் செலுத்தப்படுகின்றன என்பதை தெளிந்துதேர்வு செய்யும் காலம் தவக்காலம். என் வாழ்வின் வழித்தடம், கடவுளை நோக்கியா அல்லது, என்னை நோக்கியா, எதை நோக்கி நடத்திச் செல்கின்றது? என, நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

பிலிப்பீன்சில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ம் ஆண்டு

மேலும், பிலிப்பீன்ஸ் நாட்டில் கிறிஸ்தவம் பரவத்தொடங்கியதன் 500ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 14, இஞ்ஞாயிறு, உரோம் நேரம், காலை பத்து மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பீன்சில் திருத்தந்தை பிரான்சிஸ்
பிலிப்பீன்சில் திருத்தந்தை பிரான்சிஸ்

1521ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி, பிலிப்பீன்ஸ் நாட்டின் Limasawa தீவில், முதன்முதலில் திருப்பலி நிறைவேற்றப்பட்டதன் 500ம் ஆண்டைக் கொண்டாடும் விதமாக, அந்நாட்டு ஆயர்கள், 2012ம் ஆண்டிலிருந்து, ஒன்பது ஆண்டுகள், ஆன்மீகத் தயாரிப்பு ஒன்றையும் ஆரம்பித்தனர்.

இதற்கிடையே, 1521ம் ஆண்டில், இஸ்பெயின் நாட்டு மறைப்பணியாளர்கள், Cebu உயர்மறைமாவட்டத்தில், முதன்முதலில் திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றியதன் 500ம் ஆண்டு நிகழ்வுகள், 2021ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சிறப்பிக்கப்படும் என்று,  பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Pablo Virgilio David அவர்கள் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவில் கத்தோலிக்கரை அதிகமாகக் கொண்டிருக்கும் பிலிப்பீன்ஸ் நாடு, 7641 தீவுகளைக் கொண்டதாகும். இந்நாட்டின் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள், ஏறத்தாழ நூறு நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்துவருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2021, 15:00