தேடுதல்

கோவிட்-19 ஊரடங்கில் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் கோவிட்-19 ஊரடங்கில் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  

உலகை ஒன்றிணைத்த இறைவேண்டலின் நினைவுகள்

கொரோனா பெருந்தொற்று இவ்வுலகினின்று மறைவதற்கு, நாம் எல்லாரும் ஒன்றிணைந்து, நம்பிக்கையோடு செபிப்போம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா:வத்திக்கான் செய்திகள்

ஓராண்டுக்கு மேலாக, உலகினர் அனைவரையும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கியிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று ஒழியவேண்டும் என்று, நாம் அனைவரும், நம்பிக்கையோடு தொடர்ந்து கடவுளிடம் மன்றாடுவோம் என்று, மார்ச் 27, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தி வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

2020ம் ஆண்டு சனவரியில், இத்தாலியைத் தாக்கத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று அதிகமாகப் பரவியதையடுத்து, அவ்வாண்டு மார்ச் மாதத்தில் கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் இருந்தவேளையில், அதே மார்ச் மாதம் 27ம் தேதி மாலையில், காலியான புனித பேதுரு வளாகத்தில், அத்தொற்றுநோய் ஒழியவேண்டும் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்பு ஊர்பி எத் ஓர்பி இறைவேண்டல் நிகழ்வு ஒன்றை மேற்கொண்டார்.

அந்நிகழ்வின் ஓராண்டு இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்ததை மையப்படுத்தி தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ள திருத்தந்தை, தம் திருத்தூதர்களோடு இயேசு கடலில் படகுப்பயணம் மேற்கொண்டபோது, பெரும் புயல் அடித்ததால் அஞ்சிய அவர்களிடம்,   “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” (மாற்.4:35-41) என்று, அவர் கூறியதைக் குறிப்பிட்டுள்ளார்.

நாம் அனைவரும் அதே படகில், வலுவற்ற, மற்றும், குழப்பநிலையில் இருக்கிறோம் என்பதை உணர்கின்றோம், அதேநேரம், நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து படகைச் செலுத்துவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்வது மிகவும் முக்கியம், மற்றும், அது மிகவும் தேவைப்படுகின்றது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று இவ்வுலகினின்று மறைவதற்கு, நாம் எல்லாரும் ஒன்றிணைந்து இறைவனை வேண்டுவோம் என்ற ‘ஹாஷ்டாக்’குகள், மற்றும், திருத்தந்தையின் இந்த விண்ணப்பங்களை இணையதளத்தில் வாசிப்பதற்கு உதவியாக, முகவரியும் (#PrayTogether #Covid-19 https://e.va/statioorbisen), இந்த டுவிட்டர் செய்தியோடு இணைக்கப்பட்டுள்ளன.

குருத்தோலை ஞாயிறு

மேலும், மார்ச் 28, இஞ்ஞாயிறு உரோம் நேரம், காலை 10.30 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில், ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு திருப்பலியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நிறைவேற்றுவார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்குட்பட்டு, புனித வார திருவழிபாட்டு நிகழ்வுகள் அனைத்தும், மிகக் குறைவான மக்களின் பங்கேற்புடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வோர் ஆண்டும், குருத்து ஞாயிறன்று, உலகெங்கும், மறைமாவட்ட அளவில் சிறப்பிக்கப்படும் இளையோர் நாள் கொண்டாட்டம், இவ்வாண்டு, நவம்பர் 21, அனைத்துலகிற்கும் அரசராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருநாளன்று சிறப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

27 March 2021, 15:14