தேடுதல்

Vatican News
FIDESCO அமைப்பினர்  சந்திப்பு FIDESCO அமைப்பினர் சந்திப்பு  (Vatican Media)

பிறரன்பு பணிகள், கடவுளின் இரக்கத்தை வெளிப்படுத்த வாய்ப்பு

FIDESCO எனப்படும், கத்தோலிக்க அரசு-சாரா உலகளாவிய ஒருமைப்பாட்டு அமைப்பு, 1981ம் ஆண்டில், உலகின் தெற்கு பகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவுவதற்கென்று ஆரம்பிக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம்மில் எதிரொலிக்கும் வறியோரின் அழுகுரல், அவர்களில் கிறிஸ்துவின் காயங்களைத் தொடவும், சிறந்ததோர் உலகை உருவாக்கவும், இறையாட்சியை அமைக்கவும் நம்மை உந்தித்தள்ளுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் உலகளாவிய கத்தோலிக்க அமைப்பினரிடம் கூறினார்.

FIDESCO எனப்படும், உலகளாவிய கத்தோலிக்க ஒருமைப்பாட்டு அமைப்பின் பொறுப்பாளர்கள், தன்னார்வலர்கள் என, அதன் 45 பிரதிநிதிகளை, மார்ச் 20, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் வறிய நாடுகளில் மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு, கடந்த நாற்பது ஆண்டுகளாக, அந்த அமைப்பினர் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

திருஅவைக்கும், வளர்ச்சித்திட்டங்களுக்கும் உதவுவதற்கென்று உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் நாற்பதாவது ஆண்டு நிறைவையொட்டி, தன்னை சந்தித்த இந்த அமைப்பினரின் பணிகளை ஊக்குவித்த திருத்தந்தை, இவர்கள், அர்ப்பணத்தோடு ஆற்றும் பணிகள், உலகிற்கும், கலாச்சாரங்களுக்கும் திறந்த மனதாய் இருப்பதற்கு மட்டுமல்ல,  கடவுளின் இரக்கத்தை வெளிப்படுத்துவதற்கும், ஒரு வாய்ப்பாக அமையவேண்டும் என்று, வலியுறுத்திக் கூறினார்.

இந்த தவக்காலத்தில், இந்த அமைப்பினர், உரோம் மாநகருக்கு மேற்கொண்டுள்ள ஆன்மீகப் பயணம், அவர்களின் பிறரன்புப் பணிகளை, கூடுதல் ஆர்வத்தோடும், மகிழ்வோடும் ஆற்ற உதவும் என்று, தான் நம்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை, தனிமை, மனச்சோர்வு, ஏமாற்றம் போன்ற, மிகவும் துயர்நிறைந்த நேரங்களில், நமக்கு அதிகம் தேவைப்படும், மனித உடன்பிறந்த உணர்வின் நற்செய்தியை, வியப்பு, ஈர்ப்பு, ஆர்வம் ஆகியவற்றுடன் எப்போதும் வாழுமாறு, கேட்டுக்கொண்டார்.

ஒருவர், கடவுளால் அன்புகூரப்பட தன்னை அனுமதிப்பதும், அவரே தன்னை வெளிப்படுத்தியிருக்கும் அன்பால் அவரை அன்புகூர்வதும், மற்றவரின் நலனுக்காகப் பணியாற்றும் வழிகளைத் தேடச் செய்கின்றன என்றுரைத்த திருத்தந்தை, FIDESCO அமைப்பினரும், இதேவழியில் தங்களை ஈடுபடுத்தி, வேறு நாடுகளுக்கும் சென்று பல ஆண்டுகளாகப் பணியாற்றிவருவதைப் பாராட்டிப் பேசினார்.    

FIDESCO அமைப்பின் தலைவர்களும், தன்னார்வலர்களும், கடந்த நாற்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு மனிதரின் பொருளாதாரத் தேவைகளுக்கு மட்டுமின்றி, அவர்கள் சமுதாயத்தில் ஒருங்கிணைக்கப்படுவதற்கும், அவர்களின் அறிவு, கலாச்சாரம், மற்றும், ஆன்மீக வளர்ச்சிக்கும், அவர்களின் மனித மாண்பு காக்கப்படுவதற்கும் பணியாற்றி, கிறிஸ்துவுக்குச் சாட்சிகளாக வாழ்ந்துவருகின்றனர் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புகழ்ந்து பேசினார்.

உலகின் தெற்கு பகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவுவதற்கென்று, FIDESCO அமைப்பு, 1981ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படும் கத்தோலிக்க அரசு-சாரா அமைப்பான FIDESCO, தற்போது, பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, போர்த்துக்கல், ஹாலந்து, ஆஸ்ட்ரியா, போலந்து, அமெரிக்க ஐக்கிய நாடு, ஆஸ்திரேலியா, காங்கோ குடியரசு, ருவாண்டா போன்ற நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டிருக்கின்றது.

20 March 2021, 13:50