தேடுதல்

Vatican News
இனவெறிக்கு எதிராக தென் கொரிய மக்களின் போராட்டம் இனவெறிக்கு எதிராக தென் கொரிய மக்களின் போராட்டம்  (ANSA)

மார்ச் 1 - 'பாகுபாடுகள் முற்றிலும் அற்ற உலக நாள்'

செயற்கை நுண்ணறிவு குறித்து திருப்பீட வாழ்வுக் கழகத்துடன் பல்வேறு அமைப்புகள் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் முதலாண்டு நிறைவு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசிகள் போடப்படுவதில், அரசுகள், தொழில் நிறுவனங்கள், அனைத்துலக அமைப்புக்கள் அனைத்தும், ஒத்துழைத்து தீர்வு காணவேண்டும் என விண்ணப்பிப்பதாக கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'பாகுபாடுகள் முற்றிலும் அற்ற உலக நாள்', மார்ச் முதல் தேதி, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும், குறிப்பாக, இந்நோய் எளிதில் தாக்கப்படும் ஆபத்திலிருக்கும், மற்றும் உதவியை நாடியிருக்கும் அனைவருக்கும், இத்தடுப்பு மருந்து கிடைப்பது உறுதி செய்யப்படவேண்டும் என கூறியுள்ளார்.

தவக்காலத்தையொட்டி, திருத்தந்தை, இத்திங்களன்று வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், நம்மைக் காப்பாற்றிக்கொள்ள, மற்றவர்களை சிலுவையில் அறைவதில் நாம் அனைவரும், திறமைபெற்றவர்களாக உள்ளோம், ஆனால், தீமைகளை, பிறர் முதுகின்மேல் சுமத்தாமல், தானே சிலுவையில் அறையப்பட கையளித்து, நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக இயேசு இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும், இஞ்ஞாயிறன்று நான்கு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செயற்கை நுண்ணறிவு குறித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி திருப்பீட வாழ்வுக் கழகத்துடன் இணைந்து பல்வேறு அமைப்புகள் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தம் குறித்து, தன் முதல் டுவிட்டர் செய்தியில் நினைவூட்டினார்.

நல்மனம் கொண்ட மக்களின் ஒத்துழைப்புடன், பொதுநலன் ஊக்குவிக்கப்பட்டு, நன்னெறியுடன்கூடிய செயற்கை நுண்ணறிவுகள் முன்னேற்றப்பட வேண்டும் என அச்செய்தியில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்ட ஏனைய மூன்று டுவிட்டர் செய்திகளும், அவரின் நண்பகல் மூவேளை செப உரையை ஒட்டியதாக, இயேசுவின் தோற்ற மாற்றம் தரும் செய்தி, நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள 317 மாணவிகளின் விடுதலைக்கு அழைப்பு, அரிய வகை நோய்களால் துன்புறும் குழந்தைகளுக்கு செபம் போன்றவைகளைப் பற்றியதாக இருந்தன.

01 March 2021, 14:34