தேடுதல்

Vatican News
புனித அல்போன்ஸ் மரிய லிகோரி புனித அல்போன்ஸ் மரிய லிகோரி 

புனித அல்போன்ஸ் லிகோரி, மறைவல்லுனர், 150ம் ஆண்டு

புனித அல்போன்ஸ் மரிய லிகோரி, சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில், இரக்கத்தின் போதகராக விளங்கினார் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனித அல்போன்ஸ் மரிய லிகோரியார், திருஅவையின் மறைவல்லுனர் என்று அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவையொட்டி, உலக மீட்பர் துறவு சபையின் தலைவர், மற்றும், உரோம் அல்போன்சியார் கல்வி நிறுவனத்தின் பொது தலைமை நெறியாளருமான, அருள்பணி Michael Brehl அவர்களுக்கு, மார்ச் 23, இச்செவ்வாயன்று, செய்தி ஒன்றை, அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

150 ஆண்டுகளுக்கு முன்னர், 1871ம் ஆண்டு, மார்ச் 23ம் தேதியன்று, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்கள், உலக மீட்பர் துறவு சபையைத் தொடங்கிய, புனித அல்போன்ஸ் மரிய லிகோரி அவர்களை, திருஅவையின் மறைவல்லுனர் என்று அறிவித்தார்.

இப்புனிதரை, திருஅவையின் மறைவல்லுனராக அறிவித்த அறிக்கையில், அக்காலத்தில் நிலவிய கடுமையான விதிமுறைகளுக்கு எதிராக, உறுதியான கருத்துக்களை வழங்கியதன் வழியாக, இப்புனிதர் வெளிப்படுத்திய அறநெறி, மற்றும், ஆன்மீகம் சிறப்பாக குறிப்பிடப்பட்டு இருந்தது என்று, திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

ஆன்மீக வழிகாட்டிகள், மற்றும், அறநெறியாளர்களின் பாதுகாவலர், இன்னும், நற்செய்தி களப்பணிக்கு, திருஅவை முழுவதற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் புனித அல்போன்ஸ், மறைவல்லுனராக அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டை மகிழ்ச்சியோடு சிறப்பிக்கும் இவ்வேளையில், இப்புனிதர், இன்றும், இறைத்தந்தையிடம் நாம் நெருக்கமாகச் செல்லும் முக்கிய பாதையைச் சுட்டிக்காட்டி வருகிறார், ஏனெனில் கடவுள் நமக்கு வழங்கும் மீட்பு, அவரின் இரக்கத்தின் வேலையாகும் என்று, திருத்தந்தை கூறியுள்ளார்.

எதார்த்தநிலைக்கு செவிமடுத்தல்

புனித அல்போன்சியார் பரிந்துரைத்த இறையியல் சிந்தனைகள், ஆன்மீகத்தில் மிகவும் கைவிடப்பட்ட மனிதர்களின் பலவீனங்களுக்குச் செவிமடுத்து, அவர்களை, அறநெறி வாழ்வுக்குப் பயிற்றுவிக்க உதவுகின்றன என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

புனித அல்போன்சியாரின் வாழ்க்கையை தன் செய்தியில் விவரித்துள்ள திருத்தந்தை, அறநெறி இறையியல், கொள்கைகள், விதிமுறைகள், ஆகியவற்றை அமைப்பது குறித்த சிந்தனைகளில் மட்டுமல்ல, கருத்தியல்களைக் கடந்து, வாழ்வின் எதார்த்தத்திற்கு இட்டுச்செல்லவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமுதாயத்தின் விளிம்புநிலையில் இருந்த மக்களுக்கு இப்புனிதர் ஆற்றிய மறைப்பணி, அம்மக்களைத் தேடிச்சென்று அவர்களுக்கு ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றியது, புதிதாக நிறுவியிருந்த உலக மீட்பர் சபைக்குத் தலைவராக இருந்தது, தலத்திருஅவையின் ஆயர் பொறுப்புகள் போன்ற அனைத்தும், அவரை ஒரு இரக்கத்தின் தந்தையாகவும், போதகராகவும் மாற்றியது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

திருஅவையின் பக்குவப்பட்ட மனச்சான்றுகள்

அறநெறி இறையியலைப் புதுப்பித்தவரான புனித அல்போன்சின் வாழ்வுமுறையைப் பின்பற்றி, நாமும், மிகவும் புறக்கணிக்கப்பட்ட மக்கள், மீட்பின் பாதையில் செல்வதற்கு ஆன்மீக அளவில் உதவிசெய்யவேண்டும் என்று, திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்புனிதரின் முன்மாதிரிகையைப் பின்பற்றி, அறநெறி இறையியலாளர்கள், மறைப்பணியாளர்கள், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுபவர்கள் ஆகிய அனைவரும், இறைமக்கள் எதிர்கொள்ளும் உண்மையான துன்பங்களைப் புரிந்துகொள்ளும்பொருட்டு, அவர்களின் கண்ணோட்டத்தில் வாழ்வை நோக்கி, அவர்களின் காயங்களைக் குணப்படுத்த உதவவும், அவர்கள் வாழ்வோடு தொடர்புகொள்ளவும் வேண்டும் என்று, திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.  

ஒவ்வொரு நாளும் சிறிய தொழிற்சாலையில் நீ கொலைசெய்கின்ற "உன் சகோதரன் எங்கே?" (தொ.நூ.4:9) என்றும், பாலியல் தொழில் வலையமைப்பில் பயன்படுத்தப்படுபவர், பிச்சையெடுக்கப் பயன்படுத்தப்படும் சிறார், முறைப்படி ஆவணங்களைக் கொண்டிராமல் வேலைசெய்பவர்... போன்றோரில் உன் அடிமைப்படுத்தப்பட்ட சகோதரன் எங்கே? என்றும், கடவுளின் குரல் கேட்கப்படுவதற்கு அறநெறி இறையியல் உதவவேண்டும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

புனித அல்போன்ஸ் மரிய லிகோரி

புனித அல்போன்ஸ் மரிய லிகோரி இத்தாலியின் நேப்பிள்ஸ் நகருக்கு அருகிலுள்ள மரியனெல்லா என்ற ஊரில், 1696ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பிறந்தார். 16 வயதில் சட்டம் பயின்று வழக்கறிஞரான இவர், தனது 27வது வயதில் தனது வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு செபத்திலும் பிறரன்புப் பணிகளிலும் ஈடுபட்டார். இவர், 1732ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி, உலக மீட்பர் சபையைத் தொடங்கினார். 1775ம் ஆண்டில் தனது 79வது வயதில் செவித்திறனையும், கண்பார்வையையும் இழந்தார். இவர் 1787ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி இறைபதம் சேர்ந்தார்.

23 March 2021, 15:44