தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன், உக்ரைன் நாட்டுப் பிரதமர் Denys Shmyhal திருத்தந்தையுடன், உக்ரைன் நாட்டுப் பிரதமர் Denys Shmyhal   (AFP or licensors)

திருத்தந்தையைச் சந்தித்த உக்ரைன் நாட்டுப் பிரதமர்

பிலிப்பீன்ஸ் நாட்டின் கர்தினால் Jose Fuerte Advincula அவர்களை, மணிலா உயர் மறைமாவட்டத்தின் பேராயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

உக்ரைன் நாட்டுப் பிரதமர், Denys Shmyhal அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மார்ச் 25, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

உக்ரைன் நாட்டின், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவுடன் திருப்பீடம் சென்ற பிரதமர், Denys Shmyhal அவர்கள், திருத்தந்தையை தனியே சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

உக்ரைன் நாட்டுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டின் கல்வி மற்றும், நலவாழ்வுத் துறைகளில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் ஆகியவை குறித்த நிறைவானச் சூழலைக் குறித்து, இச்சந்திப்புகளில் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

உக்ரைன் நாட்டு பிரதமருடன் நிகழ்ந்த இச்சந்திப்பைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டிலுள்ள Taizé குழுமத்தின் தலைவர், சகோதரர் Alois அவர்களையும் இவ்வியாழனன்று காலை, திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், பிலிப்பீன்ஸ் நாட்டின் Capiz உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிவரும் கர்தினால் Jose Fuerte Advincula அவர்களை, மணிலா உயர் மறைமாவட்டத்தின் பேராயராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.

2011ம் ஆண்டு முதல், 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, மணிலா பேராயராகப் பணியாற்றிவந்த கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது, மணிலா உயர் மறைமாவட்டத்திற்கு கர்தினால் Fuerte அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

25 March 2021, 15:18