கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், குறிப்பாக, இஞ்ஞாயிறு காலையில் இந்தோனேசியாவின் Makassar பேராலயம் முன்பு இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளோர் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டு அவர்களுக்காக செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்த்திய குருத்தோலை ஞாயிறு திருப்பலியின் இறுதியில் நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தோனேசியாவில், மார்ச் 28, இஞ்ஞாயிறன்று காலையில், Makassar பேராலயத்தின் முன்பாக இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்காக செபித்தார்.
இந்தோனேசியாவின் Makassar நகர் பேராலய வளாகத்தினுள், அதன் ஒருபக்க வாசல் வழியாக நுழைய முயன்ற இருவர் தடுக்கப்பட்டபோது, அவர்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இரு சக்கர வாகனத்தில் வந்து, குருத்தோலைத் திருப்பலியின் இறுதியில் கோவில் வளாகத்தினுள் நுழைய முயன்ற இரு தற்கொலைப் படையினர், கோவில் காவலர்களால் தடுக்கப்பட்டபோது, குண்டு வெடித்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
இத்தாக்குதல் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்ட இந்தோனேசிய மத விவகாரத்துறை அமைச்சர் Yaqut Cholil Qoumas அவர்கள், மக்களுக்கு தீங்கைக் கொணரும் இத்தகைய தாக்குதல்களை எந்த மதங்களும் நியாயப்படுத்தப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளதுடன், அனைத்து மத வழிபாடுகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிச் செய்யுமாறு காவல்துறைக்கு கட்டளையிட்டுள்ளார்.