தேடுதல்

மார்ச் மாத செபக்கருத்து - ஒப்புரவு அருளடையாளம்

மக்களை வதைப்பவர்களாக இல்லாமல், பரிவுள்ளம் கொண்டவர்களாய் இருக்கும் அருள்பணியாளர்களை, இறைவன், தன் திருஅவைக்கு வழங்க செபிப்போம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒப்புரவு அருளடையாளத்தில் பரிவும் அன்பும் கொண்ட கடவுளை நாம் சந்திக்கிறோம் என்பதையும், இந்த அருளடையாளத்தால் நாம் மகிழ்வடைகிறோம் என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் மாதத்திற்கென வெளியிட்ட இறைவேண்டல் கருத்தில், வலியுறுத்திக் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாதமும், திருத்தந்தையின் இறைவேண்டல் கருத்துக்களை வெளியிட்டுவரும் இறைவேண்டல் திருத்தூதுப் பணிக்குழு, மார்ச் 2, இச்செவ்வாய் மாலையில், The Pope Video காணொளி வழியே, திருத்தந்தையின் மார்ச் மாத இறைவேண்டல் கருத்தை வெளியிட்டுள்ளது.

பரிவுள்ளம் கொண்ட அருள்பணியாளர்கள் தேவை

மன்னிப்பையும், கடவுளின் அளவற்ற இரக்கத்தையும், ஒப்புரவு அருளடையாளத்தில், இன்னும் ஆழமாக உணர்வதற்கும், மக்களை வதைப்பவர்களாக இல்லாமல், பரிவுள்ளம் கொண்டவர்களாய் இருக்கும் அருள்பணியாளர்களை, இறைவன், தன் திருஅவைக்கு வழங்கவும் செபிப்போம் என்ற கருத்தை, மார்ச் மாத இறைவேண்டல் கருத்தாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இந்தக் கருத்தை, திருத்தந்தை, இஸ்பானிய மொழியில் விளக்கிக்கூறும் வேளையில், திருத்தந்தை அவர்கள், ஒப்புரவு அருளடையாளத்தை பெறுதல், ஒரு சிலருக்கு ஒப்புரவு அருளடையாளத்தை வழங்குதல், மற்றும், ஒரு சில அருள்பணியாளர்கள் ஒப்புரவு அருளடையாளத்தை வழங்குதல் ஆகிய காட்சிகள் இந்தக் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நம் தவறுகளுக்கு முன்னதாக நாம்…

கடவுளின் இதயத்தில், நம் தவறுகளுக்கு முன்னதாக நாம் இடம்பெறுகிறோம் என்பதையும், இந்த அருளடையாளத்தில், நாம் தீர்ப்பு வழங்கும் ஒரு நீதிபதிக்கு முன்பாக நிற்பதில்லை, மாறாக, நம்மை வரவேற்று மன்னிக்கும் ஒரு தந்தையைச் சந்திக்கச் செல்கிறோம் என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த மாத இறைவேண்டல் கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நம் பாவ அறிக்கை அல்ல, மாறாக, நமக்கு எப்போதும் தேவையான இறையன்பை பெறுவதே, ஒப்புரவு அருளடையாளத்தின் மையமாக விளங்குகிறது என்பதையும் திருத்தந்தை தன் இறைவேண்டல் கருத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணொளியில் திருத்தந்தை பகிர்ந்துள்ள கருத்துக்கள்:

  • நான் ஒப்புரவு அருளடையாளத்திற்கு செல்லும்போது, என் ஆன்மாவைக் குணமாக்கச் செல்கிறேன். அவல நிலையிலிருந்து, பரிவுள்ள நிலைக்குச் செல்கிறேன். இன்னும் ஆழமான ஆன்மீக நலம் பெற்றுத் திரும்புகிறேன்.
  • நம் பாவத்தை அறிக்கையிடுவது அல்ல, மாறாக, நமக்கு எப்போதும் தேவையான இறையன்பை பெறுவதே, ஒப்புரவு அருளடையாளத்தின் மையமாக விளங்குகிறது.
  • நமக்காகக் காத்திருந்து, நமக்குச் செவிமடுத்து, நம்மை மன்னிக்கும் இயேசுவே, ஒப்புரவு அருளடையாளத்தின் மையமாக இருக்கிறார்.
  • இதை நினைவுகூர்வோம்: கடவுளின் இதயத்தில், நம் தவறுகளுக்கு முன்னதாக நாம் இடம்பெறுகிறோம்.
  • மன்னிப்பையும், கடவுளின் அளவற்ற இரக்கத்தையும், ஒப்புரவு அருளடையாளத்தில், இன்னும் ஆழமாக உணர்வதற்கும், மக்களை வதைப்போராக இல்லாமல், பரிவுள்ளம் கொண்ட அருள்பணியாளர்களை இறைவன் தன் திருஅவைக்கு வழங்கவும் செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 March 2021, 15:20