தேடுதல்

தமிழகத்தில் தண்ணீரின் நிலை தமிழகத்தில் தண்ணீரின் நிலை 

தண்ணீரை வீணாக்கவோ, மாசுபடுத்தவோ வேண்டாம்

தண்ணீர், வர்த்தகப் பொருள் அல்ல. தாகமாய் இருப்போருக்குத் தண்ணீர் வழங்குவதற்கு, நம் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தண்ணீர் வீணாக்கப்படாமலும், மாசுபடுத்தப்படாமலும் இருப்பதற்கென்று, மக்களின் வாழ்க்கைத்தரம் மாறவேண்டும் என்றும், மனிதரின் அடிப்படை உரிமையான தண்ணீர், அனைவருக்கும் கிடைப்பதற்கு உறுதிசெய்யப்படவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

மார்ச் 22, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட உலக தண்ணீர் நாளில், மெய்நிகர் கூட்டம் ஒன்றை நடத்திய, FAO எனப்படும், ஐ.நா.வின் உலக உணவு மற்றும், வேளாண்மை அமைப்புக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பிய காணொளிச் செய்தியில், தண்ணீரின் முக்கியத்துவம் பற்றிய திருத்தந்தையின் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

பாதுகாப்பான, மற்றும், சுத்தமான குடிநீர், இன்றுவரை அனைவருக்கும் கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, “சகோதரி தண்ணீரை”ப் பயன்படுத்துவதில், பொறுப்புணர்வும், அக்கறையும் அவசியம் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

தண்ணீர், வர்த்தகப் பொருள் அல்ல என்றும், தாகமாய் இருப்போருக்குத் தண்ணீர் வழங்குவதற்கு, நம் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, தண்ணீரின் மதிப்பை உணர்தல் என்ற, இவ்வாண்டின் உலக தண்ணீர் நாளின் கருப்பொருளையும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

தண்ணீரின்றி, வாழ்வோ, நகர்ப்புற மையங்களோ, வேளாண்மையோ, காடுகளோ, விலங்கினங்களோ எதுவுமே, இருக்க முடியாது என்பதை நாம் அறிந்திருந்தும், இந்த முக்கிய வாழ்வாதாரத்திற்குத் தேவையான பராமரிப்பும், கவனமும் இன்னும் செலுத்தப்படவில்லை என்ற திருத்தந்தையின் கருத்தையும், அச்செய்தியில் கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

1993ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22ம் தேதியன்று, உலக தண்ணீர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாள், இன்றும் உலக அளவில், சுத்தமான குடிநீர் வசதியின்றி வாழ்கின்ற, 220 கோடி மக்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

23 March 2021, 15:53