தேடுதல்

வறியோருக்கு அவசர மருத்துவ உதவி வழங்க வத்திக்கானில் வாங்கப்பட்ட வாகனத்தை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை வறியோருக்கு அவசர மருத்துவ உதவி வழங்க வத்திக்கானில் வாங்கப்பட்ட வாகனத்தை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை 

வறியோரின் வறுமையில் வாழ்ந்துவரும் புனித வார இயேசு

வறியோரையும், படைப்பினையும் அன்புகூர்ந்து பராமரித்து பாதுகாத்த அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் பெயரை தேர்ந்தெடுத்ததன் வழியாக, தன் நோக்கங்களை தெளிவாக வெளிப்படுத்திய திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித வாரத்தில் நாம் ஆழமாக தியானிக்கும் இறைவனின் பாடுகள், ஏழைகளிலும், புறந்தள்ளப்பட்டுள்ளோரிலும், நோயுற்றோரிலும், பசியால் வாடுவோரிலும், இயேசுவோடு சிலுவையின் மறையுண்மையை சுமப்போரிலும் பிரசன்னமாயிருக்கின்றன என, மார்ச் 29, இத்திங்களன்று வெளியான டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

துன்புறும் இயேசு, துயருறும் மக்களில் தன் இருப்பைக் கொண்டுள்ளார் என்பதை வலியுறுத்திபுனித வார துவக்கத்தில் தன் சிந்தனைகளை டுவிட்டர் செய்தி வழியாக பகிர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழைகள், நோயுற்றோர் என பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் குறித்த நம் பொறுப்புணர்வுகளை ஆழமாக இந்நாட்களில் சிந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.

2016ம் ஆண்டு சிறப்பிக்கப்பட்ட இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில், ஒவ்வோர் ஆண்டும், வழிபாட்டு ஆண்டின் பொதுக்காலத்தின் 33வது ஞாயிறன்று, உலக வறியோர் நாள்' சிறப்பிக்கப்படும் என அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் திருஅவையை வழிநடத்தும் பணியை துவக்கிய நாளிலிருந்தே, ஏழைகள் மீது அக்கறை காட்டவேண்டும் என்று, மீண்டும், மீண்டும், அழைப்பு விடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வறியோர் மீது வாஞ்சையுடன் செயல்படவேண்டும், படைப்பினை பராமரித்து, அன்புகூர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பதை தன் வாழ்வில் கடைப்பிடித்த அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் பெயரை தேர்ந்தெடுத்ததன் வழியாக, தன் தலைமைப்பணியின் நோக்கங்களை தெளிவாக வெளிப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், மனித பேராசைகளுக்கும், மனிதரிடையே இடைவெளிகளை அதிகரிக்கும் பொருளாதார கொள்கைகளுக்கும் சவால்கள் விடுத்து வருகிறார்.

அமைதியின் அண்ணல், அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களைப்போல், மனிதகுல அமைதிக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புனித வாரத்தில், ஏழைகளிலும், நோயுற்றோரிலும் இயேசுவின் பிரசன்னத்தை கண்டுகொண்டு, அவர்களுக்கு உதவி, அமைதியின் வழிகளாக செயல்பட, இத்திங்கள்கிழமை டுவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 March 2021, 14:14