தேடுதல்

பானமாவில் கொரோனா தடுப்பூசிகள் பானமாவில் கொரோனா தடுப்பூசிகள்  

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பானமாவிற்கு திருத்தந்தை ஆசீர்

பானமா நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவத் துவங்கியதிலிருந்து, இதுவரை 6,046 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர், இதில் 111 பேர் நலப்பணியாளர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பானமா நாட்டு மக்களோடு திருத்தந்தையின் அருகாமையையும் ஆசீரையும் வெளியிட்டு, திருத்தந்தையின் பெயரால், அந்நாட்டு மக்களுக்கு, செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

பானமா நாட்டு மக்களுக்கு தன் ஆன்மீக நெருக்கத்தை வெளியிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதலைக் கொணரும் நோக்கத்தில் பணிபுரியும் அனைத்து அமைப்புகளுக்கும், மக்களுக்கும், தன் ஆசீரை வழங்குவதாகவும் அச்செய்தியில் கூறியுள்ளார்.

இந்நோயால் உயிரிழந்துள்ளவர்களை இறைவனின் முடிவற்ற இரக்கத்தில் ஒப்படைப்பதாகவும், அவர்களை அன்னை மரியாவின் பரிந்துரைக்கு முன்வைப்பதாகவும் கூறும் திருத்தந்தையின் செய்தி, பானமா நகர் பேராயர் José Domingo Ulloa அவர்களால் பானமா மக்களுக்கு வாசித்தளிக்கப்பட்டது.

பானமா நாட்டு நலப்பணியாளர்களின் மனிதாபிமானப் பணிகளையும், அவர்களின் நாட்டுப்பற்றையும் பாராட்டிய பேராயர் Ulloa அவர்கள், உயிர்களைக் காப்பாற்றுவதிலும், நோயாளிகளைப் பராமரிப்பதிலும், பானமா நலப்பணியாளர்கள் ஆற்றியுள்ள பணி, விலை மதிக்கப்பட முடியாதது என்று கூறினார்.

பானமா நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவத் துவங்கியதிலிருந்து, இதுவரை 6,046 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர், இதில் 111 பேர் நலப்பணியாளர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 March 2021, 14:12