தேடுதல்

Vatican News
திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

"நம் தினசரி அன்பு" மெய்நிகர் கூட்டத்திற்கு திருத்தந்தை செய்தி

பெருந்தொற்று காலத்தில் உருவாகியுள்ள, பல்வேறு உளவியல், பொருளாதார மற்றும், நலவாழ்வு தொடர்புடைய துயரங்கள், குடும்பப் பிணைப்பிலும், கடுமையான சோதனைகளை ஏற்படுத்தியுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மார்ச் 19, இவ்வெள்ளியன்று துவங்கியுள்ள "அன்பின் மகிழ்வு குடும்ப" ஆண்டையொட்டி, உரோம் மறைமாவட்டம், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் பாப்பிறை இறையியல் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீட அவை, இவ்வெள்ளியன்று மெய்நிகர் கூட்டம் ஒன்றை நடத்தியது.

"நம் தினசரி அன்பு" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்குபெற்ற உறுப்பினர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பின் மகிழ்வு திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்டதன் நோக்கத்தை விளக்கியுள்ளதோடு, அதனை மீண்டும் மீண்டும் வாசித்து, தியானிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இக்காலத்தில், மிக அதிகமாகவே மாறியுள்ள கலாச்சார சூழலில், குடும்பம் பற்றிய புதிய கண்ணோட்டம், இன்றையத் திருஅவைக்குத் தேவைப்படுகின்றது என்றும், இந்த மடலின் மதிப்பு மற்றும், அது வலியுறுத்தும் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் போதாது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

குடும்பத்தின் அழகிற்குப் பாதுகாவலர்களாகவும், அதன் காயங்கள் மற்றும், பலவீனங்களைப் பரிவன்புடன் பராமரிப்பவர்களாகவும் இல்லாமல், அந்த மடலை வாசிப்பதால் மட்டும் எந்தப் பலனும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, குடும்பத்திற்கு ஆற்றும் திருப்பணியில் இரு முக்கிய அம்சங்கள் அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

நற்செய்தி அறிவிப்பில் நேர்மை, கனிவோடு உடன்பயணித்தல் ஆகிய இரண்டு அம்சங்கள், குடும்பத்திற்கு ஆற்றும் மறைப்பணியில் கவனம் செலுத்தப்படவேண்டியவை என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, மக்களோடு உடன்பயணித்து நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்றும், அவர்களின் மகிழ்ச்சியில் நம் பணியை வைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு பணியாற்றுவதன் வழியாக, குடும்பங்கள், தங்களின் அழைப்பிற்கும், பணிக்கும்  பதிலுறுக்கும் வழியில் செல்ல உதவும் என்றும், தங்களின் பிணைப்பின் அழகையும், மூவொரு கடவுளின் அன்பில் தங்களின் அடித்தளம் அமைந்துள்ளது என்பதையும் அவை உணரும் என்றும், திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.   

இந்த பெருந்தொற்று காலத்தில் உருவாகியுள்ள, பல்வேறு உளவியல், பொருளாதார மற்றும், நலவாழ்வு தொடர்புடைய துயரங்கள், குடும்பப் பிணைப்பிலும், கடுமையான சோதனைகளை ஏற்படுத்தியுள்ளன, எனவே குடும்பங்களை ஆதரிப்போம், அதன் அழகைப் பாதுகாப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, இந்த மெய்நிகர் கூட்டத்தின் பணிகளை நாசரேத்து திருக்குடும்பத்திடம் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், அன்பின் மகிழ்வு (Amoris Laetitia) திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, மார்ச் 19ம் தேதி, இவ்வெள்ளியன்று அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டு துவக்கப்பட்டுள்ளது.  இந்த குடும்ப ஆண்டு, 2022ம் ஆண்டு, ஜூன் 26ம் தேதி, உரோம் நகரில் நடைபெறவிருக்கும் 10வது உலக குடும்ப மாநாட்டுடன் நிறைவடையும்.

19 March 2021, 12:35