தேடுதல்

Vatican News

திருத்தூதுப் பயண ஏற்பாடுகளுக்கு நன்றியுரை

திருத்தந்தை: உங்களோடு இருந்த இந்த நாட்களில், உங்களின் துயரங்களுக்கு செவிமடுத்த அதேவேளை, எதிர்நோக்கு, மற்றும் ஆறுதலின் வார்த்தைகளுக்கும் செவிமடுத்தேன்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஏர்பில் நகரின் Franso Hariri அரங்கில், ஈராக் திருப்பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக இடம்பெற்ற திருப்பலியின் முடிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரையின் சுருக்கம்:

கீழை வழிபாட்டுமுறை அசீரிய திருஅவையின் முதுபெரும் தந்தை மூன்றாம்  Mar Gewargis அவர்களுக்கு என் பாசமிகு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரோடு இணைந்து இந்நாட்டின் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளின் அங்கத்தினர்களையும் அரவணைக்கிறேன். பல கிறிஸ்தவர்கள், தங்கள் இரத்தத்தை இந்நாட்டில் சிந்தியுள்ளனர். அந்த மறைசாட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து வானிலிருந்து ஒளிவிடுகிறனர். மேலும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடக்க நமக்கு அழைப்புவிடுக்கின்றனர். இந்த திருப்பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகளைக் கவனித்த அனைவருக்கும் இவ்வேளையில் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். சிறப்பான விதத்தில் குர்தி இன மக்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். அரசு அதிகாரிகள், தன்னார்வத் தொண்டர்கள் அனைவருக்கும், என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களோடு இருந்த இந்த வேளைகளில், உங்களின் துயரங்களுக்கு செவிமடுத்த அதேவேளை, எதிர்நோக்கையும், ஆறுதலையும் வழங்கிய வார்த்தைகளுக்கும் செவிமடுத்தேன். இந்த நம்பிக்கையின் வார்த்தைகள் பிறப்பதற்கு, பல்வேறு பிறரன்பு அமைப்புகள், மற்றும் கிறிஸ்தவ சபைகளின் பணிகள் காரணமாக இருந்துள்ளன. இவ்வேளையில், குறிப்பாக, ROACO அமைப்பையும், அதனோடு பணிபுரியும் குழுக்களையும், நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

நான் உரோம் நகருக்கு திரும்பிச் செல்லவேண்டிய நேரம் நெருங்கிவருகின்றது. இருப்பினும், ஈராக் நாடு எப்போதும் என் இதயத்தின் அருகிலேயே இருக்கும். எவரையும் பாகுபாட்டுடன் நடத்தாமல், எவரையும் ஒதுக்கி வைக்காமல், வளமும் அமைதியும் நிறைந்த நாட்டின் வருங்காலத்திற்காக அனைவரும் ஒண்றிணைந்து உழைக்கவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். இந்த நாட்டிற்கு என் இறைவேண்டல் உண்டு என்று உறுதி கூறுகிறேன். அமைதி, மற்றும் நன்மைத்தனத்தின் சேவைக்காக, ஒருமைப்பாடு, மற்றும் உடன்பிறந்த உணர்வுடன் அனைத்து மத சமுதாயங்களின் அங்கத்தினர்களும் ஒன்றிணைந்து உழைத்திட நான் இறைவேண்டல் செய்கிறேன். இறைவன் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக. இறைவன் ஈராக்கை ஆசிர்வதிக்கட்டும். இறைவன் உங்களோடு இருப்பாராக.

08 March 2021, 11:34