தேடுதல்

புனித திருத்தந்தை வித்தாலியன் புனித திருத்தந்தை வித்தாலியன் 

திருத்தந்தையர் வரலாறு - முரண்பாடுகள் விலகும் காலம்

திருத்தந்தை முதலாம் மார்ட்டினைப்போல் திருத்தந்தை முதலாம் யூஜின் அவர்களையும் கொடுமைப்படுத்தி, தீயிலிட்டு வறுத்தெடுக்க உள்ளதாக எதிரிகள் அறிவித்தனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்கள், பேரரசரால் சிறைபிடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, நாடுகடத்தப்பட்டு, உயிரிழந்தது குறித்து கடந்த இரு வாரங்களாகக் கண்டோம். 653ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி, உரோம்நகரில் இருந்து இழுத்துச் செல்லப்பட்ட திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்கள், வெளிநாட்டிலேயே 655ம் ஆண்டு செப்டம்பரில் உயிரிழந்தார். இந்தக் காலக்கட்டத்தில், முதல் ஓராண்டு இரண்டு மாதங்கள், திருஅவையின் தலைமைப்பீடம் காலியாகவே இருந்தது. தலைமை அருள்பணியாளர்,  தலைமைத் திருத்தொண்டர், மற்றும் சில அதிகாரிகளின் உதவியுடனேயே நிர்வாகம் தொடர்ந்தது. 654ம் ஆண்டு ஆகஸ்ட் பத்தாம் நாள், அதாவது, திருத்தந்தை முதலாம் மார்ட்டின் அவர்கள் உயிரிழப்பதற்கு ஓராண்டிற்கு முன்னர், புதிய திருத்தந்தை ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். நாடு கடத்தப்பட்ட திருத்தந்தை  தன் பணிகளை ஆற்ற அனுமதிக்கப்படாத நிலையில், புதிய திருத்தந்தை ஒருவரை தேர்வுசெய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகியது. இவ்வாறு தேர்வுசெய்யப்பட்டவரே, திருத்தந்தை முதலாம் யூஜின்.

உரோம் நகரைச் சேர்ந்த இப்புனிதத் திருத்தந்தை, பழகுவதற்கு எளிமையானவர், புனிதத்துவம் நிறைந்தவர், மற்றும் தாராள மனதுடையவர் என வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 654ம் ஆண்டு தான் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், கான்ஸ்தாந்திநோபிள் பேரரசருக்கு அதைத் தெரிவிக்கவும், அவரது ஒப்புதல் பெறவும், பிரதிநிதிகள் குழு ஒன்றை அனுப்பினார், திருத்தந்தை முதலாம் யூஜின். அங்கு சென்று திரும்பிய குழு, கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தை  பீட்டர், மற்றும் பேரரசர் கான்ஸ்டான்சிடமிருந்து இரு கடிதங்களைப் பெற்றுத் திரும்பியது. திருமறைப் படிப்பினைகளில், கான்ஸ்தாந்திநோபிள் திருஅவையின் வழிகாட்டுதலை உரோமைய திருஅவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதே, அக்கடிதங்களின் சாரம். குறிப்பிட்ட ஒருநாளில், அக்கடிதங்கள், புனித மேரி மேஜர் பெருங்கோவிலில், அருள்பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வாசித்தளிக்கப்பட, பொதுமக்கள் கொதித்தெழுந்தனர். கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தையின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என, திருத்தந்தை முதலாம் யூஜின் அவர்கள், வாக்குறுதி அளிக்கும்வரை, அவரை, கோவிலைவிட்டு வெளியேற விடமாட்டோம் என மக்கள் அறிவித்தனர். இதனால் கோபமுற்ற கான்ஸ்தாந்திநோபிள்; Byzantine வழிபாட்டுமுறை அதிகாரிகள், முந்தைய திருத்தந்தை முதலாம் மார்ட்டினை கொடுமைப்படுத்தியதுபோல், திருத்தந்தை முதலாம் யூஜின் அவர்களையும் கொடுமைப்படுத்த உள்ளதாக சூளுரைத்தனர். திருத்தந்தை முதலாம் யூஜின் தீயிலிட்டு வறுத்தெடுக்கப்படுவார் என அறிவித்தனர். ஆனால், நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே. இந்த பிரச்சனை நடந்து கொண்டிருக்கும்போதே, படைதிரண்டு வந்த இஸ்லாமியர்கள், 655ம் ஆண்டு பேரரசர் கான்ஸ்டான்ஸை ஒரு போரில் தோற்கடித்தனர். போரில் கவனம் செலுத்தியதால், திருத்தந்தையை பழிவாங்க முடியாமல் போய்விட்டது பேரரசருக்கு. திருத்தந்தை முதலாம் யூஜின் அவர்கள் 657ம் ஆண்டு ஜுன் மாதம் 2ந்தேதி இறைபதம் அடைந்தபோது, புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டார். இவர் தன் பாப்பிறை பணிக்காலத்தில் உலகின் பலபகுதிகளைச் சேர்ந்த 21 ஆயர்களை திருநிலைப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.

அடுத்து வந்த திருத்தந்தை வித்தாலியன் (Vitalian) அவர்கள், 657ம் ஆண்டு முதல், 672ம் ஆண்டுவரை, திருஅவையை வழிநடத்திச் சென்றார். இவர் மிகவும் திறமையான நிர்வாகியாக செயல்பட்டார் என வரலாற்று நூல்களிலிருந்து அறிகிறோம். பேரரசர் இரண்டாம் கான்ஸ்டான்சுடனும் கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தையுடனும் நட்பு பாராட்ட விரும்பிய திருத்தந்தை வித்தாலியன் அவர்கள், தான் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை இருவருக்குமே அனுப்பியதுடன், விரோதப் போக்குகளை கைவிடுமாறு அழைப்புவிடுத்தார். நட்பு பாராட்ட விரும்பிய பேரரசர், விலை உயர்ந்த இரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க மேலட்டை கொண்ட நற்செய்தியின் கையெழுத்து பிரதிகளின் தொகுப்பு நூலை திருத்தந்தைக்கு பரிசாக அனுப்பி வைத்தார். அதேவேளை, கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும் தந்தைக்கும்  திருத்தந்தைக்கும் இடையே ஓரளவு ஏற்புடைமையும் இடம் பெற்றது. கான்ஸ்தாந்திநோபிள் திருஅவையின் அன்றைய வரலாற்றில், 638ம் ஆண்டிற்குப் பின்வந்த 5 திருத்தந்தையர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்காது. ஏனெனில், திருஅவை படிப்பினைகளைப் போதித்ததில், இரு திருஅவைகளுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், திருத்தந்தையர்கள் செவரினுஸ்> நான்காம் ஜான், தியோதோர், முதலாம் மார்ட்டின், முதலாம் யூஜின் ஆகியோர், திருஅவைத் தலைவர்களாக கான்ஸ்தாந்திநோபிள் திருஅவை ஏட்டில் ஏற்கப்படவில்லை. ஆனால், கான்ஸ்தாந்திநோபிள் பேரரசருடனும், தலத்திருஅவையுடனும் இணக்கமாகச் செல்ல விரும்பிய திருத்தந்தை வித்தாலியன் அவர்கள்  பெயர் இடம்பெற்றது.

அதுமட்டுமல்ல, பேரரசர் இரண்டாம் கான்ஸ்டான்ஸ் அவர்கள், உரோம் நகருக்கு வந்தபோது, திருத்தந்தை வித்தாலியன் அவர்கள், ஆறாம் மைல்கல் தூரம்வரை தன் பரிவாரங்களோடு சென்று, பேரரசரை புனித பேதுரு பெருங்கோவிலுக்கு அழைத்துவந்தார். ஞாயிறு திருப்பலியில் தன் அரசவை அங்கத்தினர்களோடு கலந்துகொண்ட பேரரசர், திருத்தந்தைக்கு, தங்கத்தினாலான பாலியம் ஒன்றையும் பரிசளித்தார். திருத்தந்தையோடு விருந்திலும் கலந்துகொண்டார் பேரரசர். அங்கிருந்து சிசிலி தீவு சென்ற பேரரசர், அங்கு புரட்சி செய்த மக்களை மிக கொடூரமாக அடக்கி ஆள முயன்றதாகவும், 668ம் ஆண்டு சீராகியூசில் (Syracuse) அவர் கொல்லப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. பேரரசர் இரண்டாம் கான்ஸ்டான்சின் மறைவுக்குப்பின், ஆட்சியை கைப்பற்றுவதில் போட்டி நிலவியது. ஆனால், திருத்தந்தை வித்தாலியன் அவர்கள்,  இளவரசர் நான்காம் கான்ஸ்டன்டைன் போகோனாத்துஸ் (Constantine Pogonatus) என்பவருக்கு ஆதரவு அளித்து, அவரைப் பேரரசராக முடிசூட்ட உதவினார்.

திருத்தந்தை வித்தாலியன் அவர்கள்,  இங்கிலாந்து திருஅவையின் வளர்ச்சியிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். இவர் காலத்தில் இங்கிலாந்து திருஅவைக்கும் ஏனைய பகுதிகளின் திருஅவைகளுக்கும் இடையே, திருவிழாக் கொண்டாட்டங்கள் குறித்த கால அட்டவணையில் மிக நெருங்கிய உடன்பாடு காணப்பட்டது எனலாம். அதேவேளை, இத்தாலியின் ரவென்னா (Ravenna) பேராயருக்கும், திருத்தந்தைக்கும் இடையே, முரண்பாடு ஏற்ப்பட்டது. தனி சுதந்திரத்துடன் செயல்பட்டு வந்த ரவென்னா திருஅவையை, உரோமை திருஅவையின் கீழ் கொணர ஆணையிட்டார், திருத்தந்தை வித்தாலியன். அதை மறுத்த ரவென்னா பேராயர் Maurus அவர்கள், திருஅவையிலிருந்து விலக்கிவைக்கப்பட்டார். இதனால் ரவென்னா திருஅவை, உரோமையத் தலைமைப் பீடத்திலிருந்து பிரிந்து, 682ம் ஆண்டு வரை செயல்பட்டு வந்தது. திருத்தந்தை வித்தாலியன் அவர்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்த பேரரசர் 4ம் Constantine தான், பின்னர், ரவென்னா தலத்திருஅவையை, உரோமின் கீழ் கொண்டுவந்தார்.

கீழை வழிபாட்டுமுறை திருஅவையில் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்ட இருவர், அதற்கு பின்னர் திருமணம் புரிந்ததால், அவர்கள் திருத்தொண்டர் நிலையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என கடுமையான கட்டளை பிறப்பித்தார், திருத்தந்தை வித்தாலியன். கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளில் முரண்பாடுகள் ஏற்பட்டபோது, தலைமை நீதிபதியாக நின்று பல்வேறு தீர்ப்புக்களைச் செயல்படுத்தியவர், திருத்தந்தை வித்தாலியன். ஐந்து ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திய புனித வித்தாலியன் அவர்கள், 672ம் ஆண்டு, சனவரி 27ம் தேதி உயிரிழந்தபோது, அவரது உடல், புனித பேதுரு பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது.

இவருக்குப்பின் வந்த திருத்தந்தையர்கள் Adeodatus, Donus, Agatho, இரண்டாம் லியோ ஆகியோர், 4 ஆண்டுகள், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள், ஓராண்டு என, குறுகிய காலமே பதவியிலிருந்தனர். இவர்கள் குறித்து வரும் வாரம் காண்போம்.

03 March 2021, 15:10