தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ், Grand Ayatollah al-Sistani திருத்தந்தை பிரான்சிஸ், Grand Ayatollah al-Sistani  

திருத்தந்தை, Grand Ayatollah al-Sistani சந்திப்பு

ஈராக், மத்தியகிழக்கு, மற்றும், உலகம் முழுவதற்கும், வருங்காலத்தில், அமைதி மற்றும், மனித உடன்பிறந்த உணர்வை, கடவுள் அருளுமாறு, தொடர்ந்து செபிக்கின்றேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டில், தனது இரண்டாவது நாள் பயண நிகழ்வுகளை, மார்ச் 06, இச்சனிக்கிழமை, உள்ளூர் நேரம் காலை 6.50 மணிக்கு ஆரம்பித்தார். முதல் நிகழ்வாக, பாக்தாத் நகரிலிருந்து, நஜாஃப் நகருக்கு 45 நிமிடங்கள் விமானப் பயணம் செய்து அந்நகரை அடைந்த திருத்தந்தையை, அந்நகர் ஆளுனர் வரவேற்றார். நஜாஃப் நகரம், இஸ்லாமிய மத குரு, Caliph Hārūn al-Rashīd அவர்களால், 791ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்நகரம், பழங்கால பபிலோனியாவிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்திலும், விவிலிய ஊர் நகரத்திற்கு வடக்கே நானூறு கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இந்நகரம், பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே, பெரும்பாலும் வளர்ச்சியடைந்தது. இந்நகரிலுள்ள அலி மசூதியில்தான், இஸ்லாம் உலகில் மிகவும் மதிக்கப்படுபவரில் ஒருவரும், ஷியா இஸ்லாம் பிரிவின் முதல் குருவுமான, Ali ibn Abi Talib அவர்களின் கல்லறை உள்ளது. அலி மசூதி, இஸ்லாம் உலகில் மிகப்பெரும் புனித இடங்களில் ஒன்றாகும். இந்த மசூதி, நூற்றாண்டுகளாக, பலமுறை அழிக்கப்பட்டு, பின்னர், 1623ம் ஆண்டில் கட்டிமுடிக்கப்பட்டது. இமாம் ʿAlī எனவும் அழைக்கப்படும் இவர், இறைவாக்கினர் முகமதுவின் மருமகன், மற்றும், இஸ்லாமுக்கு முதன்முதலில் மனம் மாறியவர். நஜாஃப் நகரம், ஷியா (Shia Islam), இஸ்லாம் பிரிவினருக்கு மெக்கா, மெதினா ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது புனித நகரமாகும். இது, உலகிலுள்ள ஷியா இஸ்லாம் பிரிவினரின் ஆன்மீகத் தலைநகரம், மற்றும், ஈராக்கில், Shi'ite பிரிவின் அரசியல் மையமுமாகும். ஷியா பிரிவின் பெரியகுரு Ayatollah Sayyid Ali Al-Husayni Al-Sistani அவர்களின் இல்லம், அலி மசூதிக்கு அருகில் உள்ளது. ஈராக் மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டிற்கு மேல் இருக்கின்ற ஷியா பிரிவினரின் தலைவர் இவர். இவர், 2004ம் ஆண்டில் ஈராக்கில் சுதந்திரத் தேர்தல்கள் நடைபெற ஆதரவளித்ததன் வழியாக, நாட்டில் சனநாயக அரசு முதன்முதலில் அமைக்கப்பட உதவினார். ஐஎஸ் இஸ்லாமிய அரசுக்கு எதிராகப் போராட ஈராக்கியர்கள் ஒன்றிணையுமாறு, 2014ம் ஆண்டில் இவர் அழைப்பு விடுத்தார்.

திருத்தந்தை, பெரிய குரு Ayatollah

இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம், காலை ஒன்பது மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Grand Ayatollah al-Sistani அவர்களின் இல்லத்தில், மரியாதை நிமித்தமாக, அவரைச் சந்தித்துப் பேசினார். ஏறத்தாழ 45 நிமிடங்கள் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ஈராக், மத்தியகிழக்குப் பகுதி மற்றும், முழு மனிதக் குடும்பத்தின் நன்மைக்காக, ஒருவர் ஒருவரை மதித்தல் மற்றும், உரையாடலை பேணி வளர்ப்பதன் வழியாக, மதக் குழுமங்களுக்கு இடையே ஒத்துழைப்பும், நட்புணர்வும் மிகவும் முக்கியம் என்பதை திருத்தந்தை வலியுறுத்தினார். Grand Ayatollah அவர்களிடமிருந்து திருத்தந்தை விடைபெறும்போது, அன்புக்குரிய ஈராக் பூமி, மத்தியகிழக்குப் பகுதி மற்றும், உலகம் முழுவதற்கும், வருங்காலத்தில், அமைதி மற்றும், மனித உடன்பிறந்த உணர்வை, அனைவரையும் படைத்த கடவுள் அருளுமாறு, தான் தொடர்ந்து மன்றாடுகிறேன் என்று கூறினார். Grand Ayatollah al-Sistani அவர்கள், அண்மை ஆண்டுகளில், வன்முறை மற்றும், பல துன்பங்களால் நசுக்கப்பட்ட மிகவும் நலிந்த மக்களின் சார்பாக, ஷியா பிரிவினரோடு இணைந்து குரல் கொடுத்து வருவது, மற்றும், மனித வாழ்வின் புனிதம் காக்கப்படவும், ஈராக் மக்களின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருவதற்கும் நன்றி சொல்வதற்காக, திருத்தந்தை, Ayatollah அவர்களைச் சந்தித்தார் என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது. மேலும், திருத்தந்தை, இவரைச் சந்திப்பதற்குமுன், அவரது மகன் Mohammed Rida அவர்களைச் சந்தித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2021, 14:19