தேடுதல்

2020ம் ஆண்டு புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதை 2020ம் ஆண்டு புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதை 

திருத்தந்தையின் புனித வார திருவழிபாட்டு நிகழ்வுகள்

கோவிட்-19 பெருந்தொற்று விதிமுறைகளுக்குட்பட்டு, புனித வார திருவழிபாட்டு நிகழ்வுகள் அனைத்தும், மிகக் குறைவான மக்களின் பங்கேற்புடன் நடைபெறும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 28, வருகிற ஞாயிறன்று ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறு சிறப்பிக்கப்படுவதைத் தொடர்ந்துவரும் புனித வாரத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் புனித வார திருவழிபாட்டு நிகழ்வுகளை, திருப்பீடத்தின் திருவழிபாட்டுத்துறை வெளியிட்டுள்ளது.

மார்ச் 28, ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறன்று, காலை 10.30 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை நிறைவேற்றும் திருப்பலி இடம்பெறும்.

ஏப்ரல் 1, புனித வியாழன் காலை 10.00 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை திருத்தந்தை தலைமையேற்று நடத்துவார். அன்று மாலை, 6 மணிக்கு, புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெறும் ஆண்டவருடைய இறுதி விருந்து திருப்பலியை, கர்தினால்கள் அவையின் தலைவர், கர்தினால் Giovanni Battista Re அவர்கள் தலைமையேற்று நடத்துவார்.

ஏப்ரல் 2, புனித வெள்ளியன்று மாலை 6 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெறும் ஆண்டவருடைய பாடுகள் திருவழிபாட்டையும், மாலை 9 மணிக்கு புனித பேதுரு வளாகத்தில் நடைபெறும் சிலுவைப்பாதை பக்தி முயற்சியையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துவார்.

ஏப்ரல் 3 சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு நடைபெறும் ஆண்டவருடைய உயிர்ப்புப்பெருவிழா திருவிழிப்பு வழிபாடு, ஏப்ரல் 4, உயிர்ப்புப்பெருவிழா ஞாயிறன்று காலை 10 மணிக்கு நடைபெறும் திருப்பலி, அதைத் தொடர்ந்து நடைபெறும் Urbi et Orbi உயிர்ப்புவிழாச் செய்தி மற்றும் ஆசீர் ஆகிய அனைத்து நிகழ்வுகளும், புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெறும் என்றும், இவை அனைத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்குட்பட்டு, புனித வார திருவழிபாட்டு நிகழ்வுகள் அனைத்தும், மிகக் குறைவான மக்களின் பங்கேற்புடன் நடைபெறும் என்று திருப்பீடச் செய்தித்துறை அறிவித்துள்ளது.

மேலும், ஒவ்வோர் ஆண்டும், ஆண்டவருடைய பாடுகளின் குருத்து ஞாயிறன்று, உலகெங்கும், மறைமாவட்ட அளவில் சிறப்பிக்கப்படும் இளையோர் நாள் கொண்டாட்டம், இவ்வாண்டு, நவம்பர் 21, அனைத்துலகிற்கும் அரசராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருநாளன்று சிறப்பிக்கப்படும் என்று வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 March 2021, 15:32