தேடுதல்

Vatican News

குர்திஸ்தானின் கரகோஷ் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்

சகோதரத்துவ கொலைகளைவிட உடன்பிறந்த உணர்வு மிகவும் நிலைத்திருப்பது, மற்றும், வலிமையானது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஈராக்கிய குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதியின் மோசூல் நகரில் நடைபெற்ற நிகழ்வுக்குப்பின், அங்கிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற கரகோஷ் நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். கரகோஷ் அமல மரியா ஆலயத்தில், அப்பகுதி கிறிஸ்தவ சமுதாயத்தைச் சந்தித்தார் திருத்தந்தை. அப்போது இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் பகல் 11.30 மணியாகவும், இந்திய-இலங்கை நேரம் இஞ்ஞாயிறு பிற்பகல் 2 மணியாகவும் இருந்தது. இந்நிகழ்வில் பொதுநிலை விசுவாசி ஒருவரும், அருள்பணியாளர் ஒருவரும் சான்று பகர்ந்தனர். இரு சிறார், திருத்தந்தைக்கு மலர்கள் அளித்து வரவேற்றனர். முதுபெரும்தந்தை யூனென் அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின் திருத்தந்தையும் கரகோஷ் நகர் கிறிஸ்தவர்களுக்கு உரையாற்றினார். இந்த ஆலயத்தில் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையையும் வழங்கி, ஆசீர் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வின் இறுதியில், ஓர் அழகான அன்னை மரியா திருப்படம் திருத்தந்தைக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. குழுமப் பிணைப்பை மீண்டும் கட்டியெழுப்புங்கள் என்று கரகோஷ் மக்களிடம் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். கரகோஷ் அமல மரியா ஆலயத்திலிருந்து, 63 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, எர்பில் புனித பேதுரு அருள்பணித்துவ பயிற்சி கல்லூரிக்குக் காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு மதிய உணவை அருந்திய திருத்தந்தை, அந்த கல்லூரிக்கு, புனித யோசேப் திருஉருவம் ஒன்றைப் பரிசாகவும் அளித்தார்.

கரகோஷில் திருத்தந்தை
கரகோஷில் திருத்தந்தை

இஞ்ஞாயிறு பிற்பகல் 3.10 மணிக்கு, எர்பில் நகரின் பிரான்சோ ஹரிரி அரங்கத்திற்குச் சென்று திருப்பலி நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். அத்திருப்பலிக்குப்பின் பாக்தாத் நகருக்கு, ஒரு மணி 5 நிமிடங்கள் விமானப் பயணம் மேற்கொண்டார். இத்துடன் இஞ்ஞாயிறு தின பயண நிகழ்வுகள் முற்றுப்பெற்றன. மார்ச் 08, இத்திங்கள் காலையில் ஈராக் மக்களிடமிருந்து விடைபெற்று உரோம் நகருக்குப் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்துடன் திருத்தந்தையின் 33வது வெளிநாட்டுத் திருப்பயணம் நிறைவுக்கு வரும். ஈராக் நாட்டிற்கு கடவுள் அமைதியை அருள்வாராக. மதம், பயங்கரவாதத்திற்குப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்போம் என்று, நல்மனம்கொண்ட அனைவரும் கடவுளில் நம்பிக்கை வைத்துச் சொல்வோம். சகோதரத்துவ கொலைகளைவிட உடன்பிறந்த உணர்வு மிகவும் நிலைத்திருப்பது, மற்றும், வலிமையுள்ளது. வன்முறைக் கரங்களுக்குப் பலியானவர்களை கடவுளின் பாதத்தில் அர்ப்பணிப்போம், இறைவா, அனைவரும் உம் இரக்கத்தின் வல்லமையால் தொடப்பட்டு, மனம் வருந்துவார்களாக.... போன்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருத்தூதுப் பயண நாள்களில், தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். நாமும் ஈராக்கில் அமைதியும், உடன்பிறந்த அன்பும் மலர கடவுளை இறைஞ்சுவோம்.

07 March 2021, 15:23