தேடுதல்

ஈராக் திருத்தூதுப் பயணம் நன்முறையில் நடைபெற செபியுங்கள்

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், ஈராக் நாட்டிற்குச் செல்லத் திட்டமிட்டப் பயணம், இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்டது. அந்நாட்டு மக்களை, இரண்டு முறை ஏமாற்றம் அடையச்செய்வது சரியல்ல – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"இறைவனுக்கு விருப்பமானால், நாளை மறுநாள், வெள்ளியன்று நான் ஈராக் நாட்டிற்கு, ஒரு திருப்பயணியாக, மூன்று நாள்கள் செல்கிறேன். இந்தப் பயணம் நல்ல முறையில் நடந்து, தகுந்த பலன்களை வழங்க இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள்" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 3, இப்புதனன்று கூறினார்.

தன் நூலக அறையிலிருந்து புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த உரையின் இறுதியில், தன் ஈராக் திருத்தூதுப் பயணத்தைப் பற்றி குறிப்பிட்டுப் பேசுகையில், துவக்கத்தில், ஆபிரகாம் வாழ்ந்த நாட்டில் வேரூன்றி வளர்ந்துள்ள திருஅவையின் மக்களை, தான் சந்திக்கச் செல்வதாகக் கூறினார்.

மிக நீண்ட காலமாக, துன்பங்களைத் தாங்கி, கிறிஸ்தவ மறையின் சாட்சிகளாக வாழ்ந்துவரும் ஈராக் மக்களைச் சந்திப்பதை ஓர் அரிய வாய்ப்பாக, தான் கருதுவதாக, திருத்தந்தை குறிப்பிட்டார்.

ஏற்கனவே, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், அந்நாட்டிற்குச் செல்லத் திட்டமிட்டு, அந்தப் பயணம் இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களை, இரண்டு முறை ஏமாற்றம் அடையச் செய்வது சரியல்ல என்று கூறினார்.

யூபிலி ஆண்டுக்கு முன் ஈராக் செல்ல விழைந்த திருத்தந்தை

2000மாம் ஆண்டு, கத்தோலிக்கத் திருஅவையில் பெரும் யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்படுவதற்கு, ஒரு சில மாதங்களுக்கு முன்னதாக, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் ஈராக் நாட்டிற்குச் செல்ல விழைந்தார்.

"விவிலியத்தில், இறைவனின் வார்த்தைக்கு முதன்முதலாக செவிமடுத்த ஆபிரகாம் வாழ்ந்த, கல்தேயரின் ஊர் என்ற நகருக்கு நான் செல்ல விழைகிறேன்" என்று திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், தன் விருப்பத்தை வெளியிட்டிருந்தாலும், இறுதி நேரத்தில், அவரது பயணம் நிறுத்தப்பட்டது.

விவிலியத்துடன் தொடர்புடைய பல்வேறு நாடுகளின் ஒருங்கிணைந்த பகுதி, புனித பூமி என்று கருதப்படுகிறது என்பதும், இந்த நாடுகளில், இதுவரை, ஈராக் நாட்டிற்கு மட்டும், திருத்தந்தையர் யாரும் செல்லமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 March 2021, 12:33