தேடுதல்

Vatican News

குர்திஸ்தானின் மோசூல் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்

ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாத அமைப்பால், மோசூல் நகரில் மட்டும், முப்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான்

ஈராக்கின் நினிவே மாவட்டத்தின் தலைநகரான மோசூலில், ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாத அரசால் அழிக்கப்பட்ட பகுதியில், ஈராக், மற்றும், மத்திய கிழக்கு முழுவதிலும் போர்களுக்குப் பலியான அனைவருக்காகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபித்தார். மோசூலின் Hosh al-Bieaa மையத்தில் நடைபெற்ற செப நிகழ்வில், முதலில், மோசூல் பேராயர் Najeeb Michaeel அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர், கத்தோலிக்க அருள்பணியாளர் Raid (Emmanuel) Adel Kallo அவர்களும், மோசூல் குடும்பங்களின் சமுதாய மற்றும், கலாச்சார அவையின் தலைவரான சுன்னி இஸ்லாம் பிரிவைச் சார்ந்த Gutayba Aagha அவர்களும்,  திருத்தந்தையிடம் சான்று பகர்ந்தனர். அமைதி, நீதி, நல்லிணக்க வாழ்வுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார். திருத்தந்தை செபித்த, Hosh al-Bieeya ஆலய வளாகம், பழங்கால கிறிஸ்தவ சமுதாயங்களின் நான்கு கிறிஸ்தவ ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்ட இடமாகும். மோசூல் நகரில் மட்டும், முப்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன. அவை இன்னும் மீள்கட்டமைக்கப்படவில்லை. திருத்தந்தையின் வருகையின் நினைவாக, இங்கு புதிய ஆலயத்திற்கு அடிக்கல் மந்திரிக்கப்பட்டது. அந்த கல்லில் அராபிய மற்றும், ஆங்கிலத்தில், “நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன” (உரோ.10:15). அமைதி மற்றும், உடன்பிறந்த அன்பின் தூதராக, மோசூல் நகரம், மற்றும், நினிவே சமவெளிக்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக... கிறிஸ்தவர்கள் கட்டாயமாகப் புலம்பெயர்ந்த (2003-2017), இந்த இடத்தில், அமைதி, நீதி, பரபரப்பற்ற நல்லிணக்கம், மனிதகுல உடன்பிறந்த உணர்வு ஆகியவை பரப்பப்பட திருத்தந்தை இறைவேண்டல் எழுப்பினார்” என்ற சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

மோசூல்
மோசூல்

மோசூல் ஆக்ரமிப்பு

2014ம் ஆண்டு ஜூன் மற்றும், 2017ம் ஆண்டு ஜூலை மாதங்களுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், மோசூல் நகரம், ஐஎஸ் இஸ்லாமிய அரசால் ஆக்ரமிக்கப்பட்டு, அந்த அரசு திட்டமிட்டு அழிவுகளையும் நடத்தியது. அச்சமயத்தில், ஒரு இலட்சத்து இருபதாயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மோசூலை விட்டு வெளியேறினர். 2004ம் ஆண்டில் இம்மக்கள் தொகை, 18,46,500மாக இருந்தது. இறைவாக்கினர் யோனாவின் கல்லறை (‛Awn ad-dīn, Nabī Yūnis), நினிவே சுவர்களின் ஒரு பகுதி, நூலகத்தில் இருந்த அரிய கையெழுத்துப் பிரதிகள், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், தொல்பொருள் ஆய்வுக் கண்டுபிடிப்புகள், எண்ணற்ற உருவச்சிலைகள், உட்பட எண்ணற்ற ஆலயங்கள், ஐஎஸ் அமைப்பால் அழிக்கப்பட்டன.

07 March 2021, 15:13