தேடுதல்

Vatican News
இளையோருடன் திருத்தந்தை (05.03.21) இளையோருடன் திருத்தந்தை (05.03.21)  (ANSA)

படைப்பைப் பாதுகாப்பது குறித்து இளையோருக்கு கல்வி

படைப்பைப் பாதுகாப்பது, உற்பத்தி மற்றும், நுகர்வுத்தன்மையில் புதிய நடைமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவை பற்றி இளையோருக்குக் கற்றுக்கொடுக்கப்படவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம் பூமிக்கோளத்தை அச்சுறுத்திவரும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக, உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனில், உலக அளவில் வளர்ச்சித்  திட்டங்களுக்கு கையாளப்படும் முறைகள் பற்றிய விரிவான ஆய்வுகள் இடம்பெற வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

"காலநிலை மாற்றம், மற்றும், ஏழ்மை: நன்னெறி கோட்பாடுகள், மற்றும், அறிவியல் பொறுப்புணர்வு" என்ற தலைப்பில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின், யுனெஸ்கோ அமைப்பு நடத்திய மெய்நிகர் கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வளர்ச்சி என்ற பெயரில், சுற்றுச்சூழலில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும், உருக்குலைவுகளைச் சரிசெய்வதற்கு, இந்தப் பரிசோதனைகள் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இவ்வாறு செயல்படவில்லையெனில், மிக வறியநிலையில் உள்ளோர், காலநிலை மாற்றத்தால் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்வர் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில், அரசுகள் மட்டுமன்றி, அரசு-சாரா அமைப்புகளும், தனியார்களும், சமுதாயமும், கல்வி நிறுவனங்களும், பழங்குடி இன மக்களும் ஈடுபடுமாறு அழைப்புவிடுப்பதாக, திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கும், கடுமையான ஏழ்மைநிலையை அகற்றுவதற்கும் எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சிகள், ஒன்றையொன்று சார்ந்து இருப்பவை என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து மக்களையும், முழு மனிதரையும், மையப்படுத்தி இடம்பெறும் புதியமுறை வளர்ச்சித்திட்டங்கள் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

படைப்பைப் பாதுகாப்பதிலும், மற்றவரை மதிப்பதிலும், உற்பத்தி மற்றும், நுகர்வுத்தன்மையில் புதிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதிலும், இளையோருக்குக் கற்றுக்கொடுக்கப்படவேண்டியது மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

காலநிலை மாற்றம், வறுமை ஆகியவற்றைக் குறைப்பதற்கு, காலத்தைக் கடத்தாமல், உலக அளவில் உடனடியாகத் தீர்வு காணப்படுவதற்கு இதுவே நேரம் என்றும், இந்த முய.ற்சியில், சிலரின் ஆதாயத்தை நோக்காமல், அனைத்து மனிதர்களையும் நினைத்துப் பார்ப்பதற்கு, தற்போதைய நலவாழ்வு நெருக்கடி உணர்த்தியுள்ளது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

ஐ.நா.வின் யுனெஸ்கோ எனப்படும், கல்வி, அறிவியல், மற்றும், கலாச்சார அமைப்பின் தலைமை இயக்குனர் Audrey AZ0ULAY அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய இச்செய்தியை, யுனெஸ்கோ அமைப்பில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும், அருள்பணி Francesco Follo அவர்கள், அந்த மெய்நிகர் கூட்டத்தில் வழங்கினார்.

30 March 2021, 15:02