தேடுதல்

எர்பில் Franso Hariri அரங்கத்தில் திருப்பலி

கிறிஸ்து வாழ்கிறார், அவர் இங்கே, இந்த அவரது புனித இறைமக்களில் செயல்படுகிறார் - எர்பில் Franso Hariri அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்த பிரான்சிஸ் அவர்கள், ஈராக் திருத்தூதுப்பயணத்தின் இறுதி நிகழ்வாக, மார்ச் 07, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் மாலை நான்கு மணிக்கு, எர்பில் நகரின் Franso Hariri அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றினார். அந்த அரங்கத்தில், பத்தாயிரத்திற்கு மேற்பட்ட விசுவாசிகள், வத்திக்கான் மற்றும், ஈராக் நாடுகளின் கொடிகளை ஆட்டிக்கொண்டு, திருத்தந்தையே நீவீர் வாழ்க என்று உரக்க சப்தமிட்டுக்கொண்டும், குலவை ஒலிகளை எழுப்பிக்கொண்டும், ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தனர். இதுவரை ஈராக்கில் குண்டுதுளைக்காத கறுப்புநிற காரில் எல்லா இடங்களுக்கும் சென்ற திருத்தந்தை, இந்த அரங்கத்தில் முதன் முறையாக திறந்த காரில் விசுவாசிகள் மத்தியில் வலம் வந்தார். ஏராளமான இளையோர் திருத்தந்தையின் இந்த வாகனத்தோடே ஓடி வந்ததைக் காண முடிந்தது. ஈராக்கிய குர்திஸ்தான் பகுதியின் தலைநகரமான எர்பில் நகரத்தின் நிலைமை, ஈராக்கின் மற்ற பகுதிகளிலிருந்து மாறுபட்டது என்பதையே இது காட்டியது என்று செய்திகள் கூறுகின்றன.[ Photo Embed: Franso Hariri அரங்கத்தில் திருப்பலி]

இத்தாலிய மொழியில் திருத்தந்தை நிறைவேற்றிய இத்திருப்பலியில், கல்தேய, குர்தி, மற்றும், அரபு மொழிகளில் வாசகங்கள் வாசிக்கப்பட்டன. இத்திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து, கடவுளின் வல்லமை மற்றும், ஞானம் என்ற தலைப்பில் மறையுரையாற்றினார். ஈராக் திருத்தூதுப் பயணத்தில் முதன்முறையாக திறந்த அரங்கில் நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலியின் இறுதியில், எர்பில் பேராயர் பாஷர் மாத்தி வார்தா அவர்கள், திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார். அதற்குப்பின். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அனைவரையும் வாழ்த்தினார். ஈராக்கின் வடக்கேயுள்ள எர்பில் நகரில் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை, ஈராக் திருஅவை உயிர்த்துடிப்புடன் உள்ளதை என்னால் நேரில் பார்க்க முடிகிறது என்றும், கிறிஸ்து வாழ்கிறார், அவர் இங்கே, இந்த அவரது புனித இறைமக்களில் செயல்படுகிறார்  என்றும், உள்ளம் நெகிழ்ந்து கூறினார். “Salām, salām, salām அதாவது அமைதி, அமைதி, அமைதி! என்றும், Shukraan அதாவது உங்களுக்கு நன்றி என்றும், உங்கள் அனைவரையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக, ஈராக்கை கடவுள் ஆசிர்வதிப்பாராக, Allah ma'akum அதாவது கடவுள் உங்களோடு இருப்பாராக!” என்றும் திருத்தந்தை வாழ்த்தினார். இத்திருப்பலியே, திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப்பயணத்தின் இறுதி நிகழ்வாகும். 84 வயது நிரம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்திய கிழக்குப் பகுதியில், விவிலியத்தோடு தொடர்புடைய நாடுகளில், திருத்தந்தையர் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளாத நாடாக இருந்த ஈராக்கிற்கும் சென்று, அக்குறையையும் நிவர்த்தி செய்துள்ளார். 2020ம் ஆண்டு நவம்பரில், தாய்லாந்து மற்றும், ஜப்பான் நாடுகளுக்குச் சென்றபின், கடந்த 15 மாதங்களாக, வெளிநாட்டு திருத்தூதுப் பயணம் எதையும் மேற்கொள்ளாமல் இருந்தார். உலக அளவில் அனைவரையும் உலுக்கியுள்ள, கோவிட்-19 பெருந்தொற்றே இதற்குக் காரணம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 March 2021, 14:58