தேடுதல்

‘ஊர்’ நகரில் பல்சமய இறைவேண்டல் ‘ஊர்’ நகரில் பல்சமய இறைவேண்டல் 

ஈராக்கின் ‘ஊர்’ நகரில் பல்சமய இறைவேண்டல்

ஈராக்கில் நாங்கள் அனைவரும், ஒரே குடும்பமாய், நல்லிணக்கத்தோடு, ஒருவர் ஒருவருக்கு உதவிசெய்து, அமைதியில் வாழ்ந்து வருகிறோம் – Sabean Mandean மதப் பெண் Baher

மேரி தெரேசா: வத்திக்கான்

மார்ச் 06, இச்சனிக்கிழமையன்று, இரண்டாவது பயணத் திட்ட நிகழ்வாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டின், நஜாஃப் நகரிலிருந்து, நசிரியா நகருக்கு, ஐம்பது நிமிடங்கள் விமானப்ப பயணம் ஒன்றை மேற்கொண்டார். அங்கிருந்து 5.4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் ஆகிய மூன்று முக்கிய மதங்களின்  பிறப்பிடமான, கல்தேயர்களின் ஊர் (Ur) என்ற நகருக்குக் காரில் சென்றார், திருத்தந்தை. தந்தை ஆபிரகாம், கடவுள் கட்டளைப்படி, தன் சொந்த பூமியான ஊர் என்ற இடத்திலிருந்துதான் (தொ.நூ.11:28-31), கானான் நாட்டிற்குக் குடிபெயர்ந்தார். ஊர் நகரில், மூன்று ஆபிரகாம் மதங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். செப வழிபாடாக நடைபெற்ற இந்நிகழ்வில், தொடக்க நூலிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட, குரான் புனித நூலிலிருந்து ஒரு பகுதி பாடப்பட்டது. 2002ம் ஆண்டில் Bassoraவில் பிறந்த Dawood Ara என்ற கிறிஸ்தவ இளைஞரும், அதே ஆண்டில் அதே நகரில் பிறந்த Hasan Salim என்ற இஸ்லாமிய இளைஞர், Sabean Mandean மதத்தைச் சேர்ந்த Rafah Husein Baher என்ற பெண், நசிரிய பல்கலைக்கழக இஸ்லாமிய பேராசிரியர் Ali Zghair Thajeel ஆகியோர் சான்று பகர்ந்தனர். Rafah Husein Baher அவர்கள், திருத்தந்தையிடம், திருத்தந்தையே, அனைத்து ஈராக்கியர்களை, மன்னிப்போடு ஆசிர்வதியும். Basrah என்ற ஊரில், Najy என்ற Sabean Mandaean மதத்தைச் சார்ந்த ஆண் ஒருவர், தன் வீட்டிற்கு அருகில் வாழ்ந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரை இழந்தார்.  இவ்வாறு ஈராக்கில் நாங்கள் அனைவரும், ஒரே குடும்பமாய், நல்லிணக்கத்தோடு, ஒருவர் ஒருவருக்கு உதவிசெய்து, அமைதியில் வாழ்ந்து வருகிறோம் என்று சான்று பகர்ந்தார். இந்த பகிர்வுகளுக்குப் பின்னர், திருத்தந்தையும் உரையாற்றினார். திருத்தந்தையின் உரைக்குப்பின், ஆபிரகாமின் பிள்ளைகளின் இறைவேண்டல் எழுப்பப்பட்டது. இந்த இறைவேண்டல், இந்நிகழ்வுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியதாகும். பல்சமயப் பிரதிநிதிகள், திருத்தந்தையோடு புகைப்படம் ஒன்றையும் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வை நிறைவுசெய்து, மீண்டும் நசீரியா நகருக்குக் காரில் சென்று, அங்கிருந்து பாக்தாத் நகருக்கு, 50 நிமிட நேர விமானப் பயணம் ஒன்றை திருத்தந்தை மேற்கொண்டார். உள்ளூர் நேரம் பிற்பகல் 2.10 மணிக்கு, பாக்தாத் திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். மார்ச் 06, இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு, அதாவது, இந்திய-இலங்கை நேரம் இரவு 8 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாக்தாத், கல்தேய வழிபாட்டுமுறை புனித யோசேப்பு பேராலயத்திற்குக் காரில் சென்றார். 1952ம் ஆண்டில்     இந்த பேராலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது, 1956ம் ஆண்டில் ஆசிர்வதிக்கப்பட்டது. இப்பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலிதான், திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாள் இறுதி நிகழ்வாகும். இத்திருப்பலிக்குப்பின் பாக்தாத் திருப்பீட தூதரகத்திற்குக் காரில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ். இப்பயணத்தில் திருத்தந்தை குண்டுதுளைக்காத கறுப்புநிற காரிலே பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2021, 14:08