தேடுதல்

Vatican News
விமானப் பயணத்தில், ஊடகவியலாளர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் விமானப் பயணத்தில், ஊடகவியலாளர்களைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

விமானப் பயணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு

மோசூலில், கிறிஸ்தவத் தாய் ஒருவர், தன் மகனைக் கொன்றவர்களை, தான் மன்னித்தது பற்றி பகிர்ந்துகொண்டதைக் கேட்டபோது மனம் உருகினேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து திரும்பிய விமானப் பயணத்தில், தன்னோடு பயணம் மேற்கொண்ட ஊடகவியலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் சொன்னார். தனது வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஈராக் பயணத்தின் ஒவ்வொரு நிலைகளையும் திருத்தந்தை நினைவுகூர்ந்தார். ஷியா இஸ்லாம் பிரிவின் தலைவரான, Al Sistani அவர்கள், ஞானத்தின் மனிதர், மற்றும், கடவுளின் மனிதர் என்றும், மோசூல் நகரில் அழிக்கப்பட்ட ஆலயங்களின் முன் நின்றபோதும், தன் மகனை இழந்த கிறிஸ்தவத் தாயின் உருக்கமான பகிர்வையும், தன் மகனைக் கொன்றவர்களை அவர் மன்னித்தது பற்றியும் அவர் கூறியதைக் கேட்டபோது மனம் உருகினேன் என்று திருத்தந்தை கூறினார். லெபனான் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது பற்றிக் கேட்டபோது திருத்தந்தை இவ்வாறு கூறினார். லெபனான் முதுபெரும்தந்தை ராய் அவர்கள், இந்த ஈராக் திருத்தூதுப் பயணத்தின்போது, பெய்ரூட்டில் பயணம் மேற்கொள்ளுமாறு கெஞ்சிக் கேட்டார். லெபனானுக்குப் பயணம் மேற்கொள்வேன் என்று அவருக்கு எழுதிய ஒரு மடல் வழியாக உறுதியளித்துள்ளேன். ஆயினும், அந்நாடு, இக்காலக்கட்டத்தில் பிரச்சனையில் உள்ளது. லெபனான் நாடு, புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில் மிகத் தாராளமாக உள்ளது என்று பாராட்டிப் பேசினார், திருத்தந்தை. பிறரன்பு, அன்பு, உடன்பிறந்த உணர்வு ஆகியவையே நம் பாதையாக இருக்கவேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

டுவிட்டர் செய்திகள்

“ஈராக் என்றென்றும் என் இதயத்தில் இருக்கின்றது. அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, ஒருவர் ஒருவருக்கு எதிரான பாகுபாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, வருங்காலத்தின் அமைதி மற்றும், வளமைக்காக ஒன்றிணைந்து உழையுங்கள்” என்று இத்திங்களன்று, திருத்தூதுப் பயணம் என்ற ஹாஷ்டாக்குடன் (#ApostolicJourney), தன் டுவிட்டர் பக்கத்திலும் திருத்தந்தை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், மார்ச் 08 இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட, உலக பெண்கள் நாளுக்கென்றும், ஈராக்  (#Iraq), திருத்தூதுப் பயணம் (#ApostolicJourney) ஆகிய இரு ஹாஷ்டாக்குகளுடன், டுவிட்டர் செய்தி ஒன்றையும் திருத்தந்தை வெளியிட்டுள்ளார். “பெண்களே, உங்கள் எல்லாருக்கும், குறிப்பாக, துயரங்கள் மத்தியில் வாழ்வைத் தொடரும் துணிச்சலான ஈராக் பெண்களுக்கு, என் இதயம்கனிந்த நன்றி. பெண்கள் மதிக்கப்படுவார்களாக. பாதுகாக்கப்படுவார்களாக. வாயப்புக்கள் வழங்கப்பட்டு அவர்கள் மதிக்கப்படுவார்களாக” என்று, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தி வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.  

08 March 2021, 15:10