தேடுதல்

பாக்தாத் விமானத் தளத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் பாக்தாத் விமானத் தளத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம்

ஈராக் பன்னாட்டு விமானத்தளத்தில் சென்றிறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அந்நாட்டு பிரதமர் Mustafa al-Kazemi அவர்கள் வரவேற்றார்

மேரி தெரேசா: வத்திக்கான்

நாம் அனைவரும், குறிப்பாக, மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் அனைவரும், ஆவலோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் காத்திருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஈராக் திருத்தூதுப் பயணம், மார்ச் 05, இவ்வெள்ளிக்கிழமை காலையில் துவங்கியது. இவ்வெள்ளி உரோம் நேரம் காலை 6.50 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து, ஈராக் நாட்டிற்கு திருத்தூதுப் பயணத்தை துவக்குவதற்கு முன்னர், அந்த இல்லத்தில், இத்தாலியில் வாழ்கின்ற, ஈராக் நாட்டு புலம்பெயர்ந்த மக்களில் ஏறத்தாழ பன்னிரண்டு பேரைச் சந்தித்துப் பேசினார். அவர்களோடு, திருத்தந்தையின் தர்மப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski அவர்களும், உடனிருந்தார். இவர்களை, உரோம் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பும், Auxilium அமைப்பும் திருத்தந்தையிடம் அழைத்துச் சென்றன. இந்த புலம்பெயர்ந்தோரை ஆசிர்வதித்து, அவர்களிடமிருந்தும் ஆசிரைப் பெற்று, அந்த இல்லத்திலிருந்து, 29 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள உரோம் ஃபியுமிச்சினோ பன்னாட்டு விமானத்தளத்திற்கு காரில் புறப்பட்டார், திருத்தந்தை பிரான்சிஸ். விமான நிலையத்தில் தன்னை வழியனுப்ப வந்திருந்த, திருஅவை மற்றும், இத்தாலிய அரசு பிரதிநிதிகளை வாழ்த்தி, A330 ஆல் இத்தாலியா விமானத்தில், ஈராக் தலைநகர் பாக்தாத்திற்குப் புறப்பட்டார். அப்போது உரோம் நேரம் காலை 7.45 மணியாக, இந்திய-இலங்கை நேரம் பகல் 12.15 மணியாக இருந்தது.

ஈராக் திருத்தூதுப் பயணத்திற்காக மேற்கொண்ட இந்த விமானப் பயணத்தில், உடன்பயணித்த பன்னாட்டு ஊடகவியலாளர்கள் அனைவரையும் திருத்தந்தை வாழ்த்தினார். கோவிட்-19 பெருந்தொற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு, முகக்கவசத்தோடே ஊடகவியலாளர்களிடம் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பயண நிகழ்வுகளில், பெருந்தொற்று விதிமுறைகளின்படி, யாரிடமும் கைகுலுக்க மாட்டேன், ஆயினும், மக்களுக்கு நெருக்கமாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார். பல ஆண்டுகள் மிகவும் துன்புற்றுள்ள இந்நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதை ஒரு கடமை என உணர்ந்தேன் என்றும், திருத்தந்தை கூறினார்.

2,947 கிலோ மீட்டர் தூரம், மற்றும், நான்கு மணி, முப்பது நிமிடங்கள் கொண்ட, இந்த விமானப் பயணத்தில், தான் கடந்து சென்ற கிரேக்கம், சைப்ரஸ், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டன், ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பிய தந்திச் செய்திகளின் வழியாக, அப்பகுதியின் மக்களுக்கு, தன் வாழ்த்தையும், ஆசிரையும் தெரிவித்தார். மார்ச் 05, இவ்வெள்ளி காலையில், இத்தாலிய அரசுத்தலைவர் Sergio Mattarella அவர்களுக்கு அனுப்பிய தந்திச் செய்தியில், மக்கள் மத்தியில் அமைதி மற்றும், உடன்பிறந்த உணர்வை ஊக்குவிக்கும் திருப்பயணியாக ஈராக் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கும் இவ்வேளையில், அன்புமிக்க இத்தாலிய மக்கள், அமைதியிலும், வளமையிலும் வாழ செபிக்கிறேன், மற்றும், வாழ்த்துகிறேன் என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். அரசுத்தலைவர் Mattarella அவர்கள், திருத்தந்தைக்கு நல்வாழ்த்துச் சொல்லி, தந்திச் செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார். புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் ஈராக் திருத்தூதுப் பயணத்தை நிறைவேற்ற முடியாமல் இருந்தது. இப்போது தாங்கள் மேற்கொள்ளும் இப் பயணம், கடுமையாய் துன்புற்றுள்ள அப்பகுதி கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு, தந்தைக்குரிய பாசத்தையும், நெருக்கத்தையும் வெளிப்படுத்தும் என்பதில் உறுதியாய் இருக்கிறேன். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் தொடர்ச்சியாக, ஈராக் பயணம் இடம்பெறுகின்றது. மனித உடன்பிறந்த உணர்வு கூடுதலாக வளர்க்கப்படுவதற்கு, இப்பயணம் உதவும், சவால்நிறைந்த இப்பயணத்தின் நோக்கம் நிறைவேற இத்தாலிய மக்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்.

மேலும், திருத்தந்தை, மார்ச் 04, இவ்வியாழன் மாலையில் உரோம் நகரின் மேரி மேஜர் பெருங்கோவில் சென்று, ஈராக் பயணத்தை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்துச் செபித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணங்களைத் தொடங்குவதற்கு முன்னும், அதை நிறைவுசெய்து திரும்பும் வழியிலும், இந்த பெருங்கோவில் சென்று, அன்னை மரியாவிடம் செபிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2021, 14:47