தேடுதல்

திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம் திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம் 

திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணம், ஒரு முன்தூது

புனித பூமியில் திருத்தந்தையர் செல்லாத அரபு நாடு, ஈராக்காக மட்டுமே இருந்தது. அதுவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நிறைவேற்றப்படுகிறது.

மேரி தெரேசா: வத்திக்கான்

விவிலியத்தில் முக்கியத்துவம் பெற்ற, நெடுங்காலமாய் திருத்தந்தையரின் கனவாக இருந்த, அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த, ஈராக் நாட்டு திருத்தூதுப் பயணத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 05, இவ்வெள்ளிக்கிழமை உரோம் நேரம் காலை 7.30 மணியளவில், இந்திய-இலங்கை நேரம் பகல் 12 மணியளவில் துவக்குகிறார். 2000மாம் ஆண்டு, கத்தோலிக்கத் திருஅவையில் பெரும் யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்படுவதற்கு, ஒரு சில மாதங்களுக்கு முன்னதாக, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், ஈராக் நாட்டிற்குச் செல்ல விழைந்தார். ஆனால், இறுதி நேரத்தில், அவரது பயணம் நிறுத்தப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், 2019ம் ஆண்டு ஜூன் மாதத்தில், கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்களைச் சந்தித்து உரையாற்றியபோது, 2020ம் ஆண்டில், தான் ஈராக் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார். ஆனால் உலக அளவில் பரவிய கோவிட்-19 பெருந்தொற்று, மற்றும், சில காரணங்களால், 2020ம் ஆண்டிலும் திருத்தந்தையால் தன் ஆவலை நிறைவேற்ற முடியவில்லை.  இந்த பெருந்தொற்றால், திருத்தந்தையின் வெளிநாட்டுப் பயணங்கள் எதுவும், கடந்த 15 மாதங்களாக நடைபெறவில்லை. இவ்வாண்டில் முதன் முதலாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 33வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக, ஈராக்கில் மேற்கொள்ளவிருக்கும் பயணம், வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்றும், இது, அந்நாட்டின் எல்லாத் துறையினருக்கும் ஆதரவளிக்கும் என்றும், ஊடகங்கள் ஒருசேர புகழ்ந்துள்ளன. இப்பயணம், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவரான திருத்தந்தை ஒருவர், ஈராக் நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் திருத்தூதுப் பயணமாகும். புனித பூமியில் திருத்தந்தையர் செல்லாத அரபு நாடு, ஈராக்காக மட்டுமே இருந்தது. அதுவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நிறைவேற்றப்படுகிறது.   

ஈராக் வரலாறு

ஈராக் என்றவுடன், அந்நாட்டின் எண்ணெய் வளம், வளைகுடா போர், போன்ற பல விடயங்கள் நம் நினைவுகளில் வந்து போகின்றன. “கலாச்சாரத்தின் தொட்டில்” என்று அழைக்கப்படும், ஈராக் நாடு, வளமையான, அதேநேரம், குழப்பமான ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. இந்நாடு அமைந்துள்ள பகுதியில், மக்கள், வரலாற்றுக்கு முந்தைய செம்பு-கற்காலத்திலேயே வாழ்ந்து வந்துள்ளனர். சுமேரியர், அசீரியர், பபிலோனியர், செலுக்கியர், பார்த்தியர், பெர்சியர், கிரேக்கர், உரோமையர் உட்பட, எண்ணற்ற வல்லரசுகள், ஈராக் நிலப்பகுதியைக் கைப்பற்றி, ஆட்சிசெய்து வந்துள்ளனர். ஏழாம் நூற்றாண்டுக்குப்பின், இப்பகுதி, இஸ்லாமிய உலகத்தின் மத்திய, மற்றும், ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது. எட்டாம் நூற்றாண்டில், Abbasid முஸ்லிம் பேரரசு, பாக்தாத்தை, ஈராக்கின் தலைநகரமாக மாற்றியது. Abbasid முஸ்லிம் பேரரசு, அக்காலத்தில் விளங்கிய, இருபெரும் முஸ்லிம் பேரரசுகளில் ஒன்றாகும். 16ம் நூற்றாண்டில், ஈராக் நிலப் பகுதியை, ஒட்டமான்கள் கைப்பற்றி, முதலாம் உலகப் போர் வரை (1914–18) ஆட்சிசெய்து வந்தனர். தற்போதைய ஈராக் நாடு, ஒட்டமான்களின் மாநிலங்களாக அமைந்திருந்த, பாக்தாத், பஸ்ரா, மொசூல் ஆகிய பகுதிகளைக் கொண்டதாகும்.

முதல் உலகப் போருக்குப்பின், ஈராக்கில், ஒட்டமான்கள் ஆட்சி கவிழ்ந்து, பிரித்தானிய பேரரசு, 1921ம் ஆண்டிலிருந்து, பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தது. இவ்வாறு பல நூற்றாண்டுகளாக, அந்நியரின் ஆதிக்கத்தின்கீழ் வாழ்ந்த ஈராக், 1932ம் ஆண்டில், பிரித்தானிய காலனி ஆதிக்கத்திலிருந்து (1921-1932) சுதந்திரம் அடைந்தது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று தொடங்கும் ஈராக் திருத்தூதுப் பயணம், ஈராக் அரசு உருவாக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவில் இடம்பெறுகிறது. அதாவது, இப்பயணம், 1921ம் ஆண்டில், முதலில் ஈராக் நாடு, பிரித்தானிய மேலாண்மையின் கீழும், பின்னர், ஹாஷிம் அரசப் பரம்பரையைச் சார்ந்த அரசர் முதலாம் Faisal மற்றும், அவரின் வழிவந்தவர்களின்கீழும் ஆட்சி செய்யப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவுறும் காலக்கட்டத்தில் இடம்பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 1958ம் ஆண்டில், ஈராக்கில், பிரித்தானிய காலனி ஆதிக்கமும், முடியாட்சியும் முறியடிக்கப்பட்டுவிட்டாலும், தேசிய அளவில் நிலையற்றதன்மையே நிலவியது. அதற்குப் பத்து ஆண்டுகளுக்குப்பின், அராபிய தேசிய மற்றும், பொதுவுடைமை அமைப்பான, Baʿath கட்சி பலமுறை நடத்திய வன்முறையற்ற ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, அந்நாட்டில் அரச பரம்பரையின் முடியாட்சி வீழ்த்தப்பட்டது, அதைத்தொடர்ந்து அந்நாட்டில் நிலையான தன்மையும் உருவானது.

சதாம் ஹூசேன் ஆட்சி வீழ்ச்சி

ஈராக்கில், பாத் கட்சித் தலைமையில், 1968ம் ஆண்டு முதல், 2003ம் ஆண்டு வரை ஆட்சி நடைபெற்றது. உலக அளவில், சவுதி அரேபியாவிற்கு அடுத்தபடியாக, எண்ணெய் வளத்தை அதிகம் கொண்டிருந்த நாடு ஈராக். 1970களில், அந்நாடு, தன் வளர்ச்சித் திட்டங்களை விரிவுபடுத்தி, அராபிய உலகில், சிறந்த ஆயுதப் படைகளைக் கொண்டிருந்த நாடுகளில் ஒன்றாகவும் விளங்கியது. 1979ம் ஆண்டில், பாத் கட்சியைச் சார்ந்த, சதாம் ஹூசேன் அவர்கள், ஆட்சியைத் தொடங்கினார். அவரது ஆட்சிக் காலத்தில் ஈரான்- ஈராக் போர் (1980–88), மற்றும், பெர்சிய வளைகுடா போர் (1990–91) நடைபெற்றன. இந்தப் போர்கள், ஈராக்கை உலகளாவிய சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தின. குர்தி சிறுபான்மையினர் மற்றும், அந்நாட்டின் பெரும்பான்மை ஷி (Shiʿi) முஸ்லிம் பிரிவினராலும், சதாம் ஹூசேன் அவர்களின் ஆட்சி, 21ம் நூற்றாண்டில் ஆட்டம் கண்டது.

2003ம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையில் நடைபெற்ற ஈராக் போரில், சதாம் ஹூசேன் அவர்கள் வீழ்த்தப்பட்டார்.  நாடும், நிதியளவிலும், சமுதாய அளவிலும் தொய்வடைந்தது. ஈராக்கில், 2003ம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாடும், அதன் கூட்டணிகளும், பாத் கட்சி அரசைக் கவிழ்த்து, இடைக்கால அரசை அமைத்தன. பின்னர், 2005ம் ஆண்டில் நிரந்தர அரசியலமைப்பு அங்கீகரிக்கப்பட்டது. 1974ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதியும், 2005ம் ஆண்டின் அரசியலைமப்பால் உறுதிசெய்யப்பட்டது. தற்போது ஈராக் நாடு, மக்களவை கூட்டாட்சி தத்துவத்துடன் சனநாயக குடியரசாக, நடுவண் அரசால் ஆளப்பட்டு வருகிறது. எனினும், 2014ம் ஆண்டு முதல், 2017ம் ஆண்டு முடிய, ஈராக் மற்றும், சிரியாவின் இஸ்லாம் நாடு என அழைக்கப்படும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம், ஈராக் குடியரசு, தன் பெருமளவான பகுதிகளை இழந்தது. அச்சமயத்தில் அந்நாடு கடுமையான குழப்பநிலையால் துன்புற்றது. தற்போது, அந்நாட்டின் நான்கு கோடி மக்கள், கோவிட்-19 பெருந்தொற்று முன்வைத்துள்ள கடுமையான சவால்களுக்கு மத்தியில், தங்களின் பழைய செல்வாக்கான வாழ்வை அடைவதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

இயற்கை வளம்

பழங்காலத்தில், ஈராக் நிலப்பகுதி, “நதிகளுக்கு இடையேயுள்ள நிலம்” என்று பொருள்படும், மெசபத்தோமியா என அறியப்பட்டது. மெசபத்தோமியா என்ற சொல்லுக்கு, அரபு மொழியில், ஈராக் என்பது ஏறத்தாழ பொருத்தமாக அமைவதால், அதுவே அப்பகுதிக்குப் பெயரிடப்பட்டது. யூப்ரடீஸ், டைக்ரிஸ் ஆகிய இரு நதிகள் பாயும் வளமான வண்டல்மண் நிறைந்த இந்த சமவெளிப் பகுதியில்தான், சுமேரிய, அக்காதிய, பபிலோனிய, அசீரிய உட்பட, உலகின் சில தொன்மையான கலாச்சாரங்கள் பிறந்தன. ஈராக், அரபு உலகில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று. இந்நாட்டிற்கு வடக்கே, துருக்கியும், கிழக்கே ஈரானும், மேற்கே சிரியா மற்றும், ஜோர்டனும், தெற்கே சவுதி அரேபியா மற்றும், குவைத்தும் எல்லைகளாக அமைந்துள்ளன. பெர்சியன் வளைகுடாவின் வட எல்லையில், 58 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையையும் இந்நாடு கொண்டிருக்கின்றது. Al-Qurnahவுக்கு அருகில், யூப்ரடீஸ், டைக்ரிஸ் ஆகிய இரு நதிகள் இணையும் சதுப்பு நிலப் பகுதிகளில் சில, மனிதர் வாழ இயலாதவை. ஈராக்கிலுள்ள Sinjār மலைத்தொடர் மிகவும் புகழ்பெற்றது. இவற்றின் உயரம் 1,356 மீட்டர்களாகும்.

கல்வி, கலாச்சாரம்

ஈராக்கில் 1958ம் ஆண்டு புரட்சிக்குப்பின், அந்நாடு கல்வியிலும், அறிவியலிலும் பெரும் வளர்ச்சி கண்டது. மத்தியக் கிழக்குப் பகுதியில், ஈராக்கில்தான், உயரிய, தரமான அறிவியலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மற்றும், திறமையான பணியாள்கள் இருந்தனர். கல்வியின் எல்லா நிலைகளுக்கும் அரசே நிதியுதவி செய்தது. ஒரு கட்டத்தில், பல்கலைக்கழகப் பட்டதாரிகளில், ஆண்களைவிட பெண்களே அதிகம் இருந்தனர். ஆனால் பாத் கட்சியின் வீழ்ச்சிக்குப்பின், புதிய அரசால் கல்வியில் முற்றிலும் புதிய அணுகுமுறை கையாளப்பட்டது. இன்றும் அந்நாட்டில் கல்வியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. ஈராக்கின் கலாச்சாரத்தைப் பொருத்தவரை, பல்வேறு மக்கள், பல்வேறு வளமையான கலாச்சாரங்களைக் கொண்டிருக்கின்றனர். ஈராக் போர் தொடங்கியதையடுத்து ,மக்களின் அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டது. ஈராக் மக்கள் சமய உணர்வை அதிகம் கொண்டிருந்தாலும், தற்போது சமயச்சார்பற்றபோக்கும் வளர்ந்து வருகிறது. மேற்கத்திய பழக்கவழக்கங்களைப் பின்பற்றவும் மக்கள் ஆரம்பித்துள்ளனர். ஈராக்கில் புகழ்பெற்ற சிற்ப கலைஞர்கள், ஓவியர்கள், மற்றும், கவிஞர்கள் உள்ளனர். அந்நாட்டில், Muḥammad Mahdī al-Jawāhirī, Nāzik al-Malāʾika போன்றோர், அரபு உலகில் மிகவும் புகழ்பெற்ற பெண் கவிஞர்கள் ஆவார்கள். ஈராக்கின் பாக்தாத் நகரில், எட்டு, மற்றும், ஒன்பதாம் நூற்றாண்டுகளின் Abbāsid கலைகளின்  பொற்காலத்தைச் சேர்ந்த சில சிறந்த கட்டடங்கள் உள்ளன. 1923ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய அருங்காட்சியகம், 2003ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஆக்ரமிப்பின்போது சூறையாடப்பட்டது. ஏறத்தாழ 15 ஆயிரம் பொருள்கள் அங்கிருந்து  எடுத்துச் செல்லப்பட்டன. 2015ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, ஈராக்கில், 95 முதல், 98 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். கல்தேய கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ், பிற கிறிஸ்தவ சபையினர், அசீரிய கிறிஸ்தவர்கள் போன்றோர், ஒரு விழுக்காட்டினர். மற்ற மதங்களைப் பின்பற்றுகிறவர்களும் உள்ளனர். அந்நாட்டில் பழங்காலத்திலிருந்தே, கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் நல்லிணக்கத்தோடே வாழ்ந்து வந்துள்ளனர்.     

ஈராக்கின் சிறுபான்மை கிறிஸ்தவர்கள்

விவிலியத்தில், நம்பிக்கையின் தந்தை என போற்றப்படும் ஆபிரகாம் வாழ்ந்த, ஊர் நகரம் ஈராக்கில்தான் உள்ளது. ஈராக்கில், கிறிஸ்தவம், கி.பி. 40ம் ஆண்டில், திருத்தூதர்கள் தோமையார், ததேயுஸ், மற்றும், அவர்களின் மாணவர்களால் விதைக்கப்பட்டது. 1950ம் ஆண்டில் அந்நாட்டின் மக்கள் தொகையில், பத்து முதல் பன்னிரண்டு விழுக்காடாக இருந்த கிறிஸ்தவர்கள், 1987ம் ஆண்டில் 8 விழுக்காடாகக் குறைந்தனர். இந்நாட்டில், கடந்த 20 ஆண்டுகளாக கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது என்றும்,  சதாம் ஹுசேன் அவர்கள் நீக்கப்படுவதற்குமுன், அதாவது 2003ம் ஆண்டு, ஏறத்தாழ, 14 இலட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்போது ஒரு சில ஆயிரமாகவே உள்ளது என்றும், வத்திக்கான் செய்தித்துறை கூறியுள்ளது. ஈராக்கிலுள்ள பல சிறந்த கிறிஸ்தவ பள்ளிகள், மேற்கத்திய துறவு சபைகளால் நடத்தப்படுகின்றன. நாட்டின் மக்களவையில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். நாட்டின் வடக்கே வாழ்கின்ற கிறிஸ்தவர்கள், மத்திய அரசையா, குர்தி இன அரசையா, எதைத் தேர்ந்துகொள்வது என்பதில் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். எதற்கு ஆதரவளித்தாலும் சந்தேகத்தோடு அவர்கள் நோக்கப்படுகின்றனர்.

2003ம் ஆண்டு ஈராக் போருக்குப்பின், அருள்பணியாளர்கள், ஆயர்கள் உட்பட, பல ஈராக் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர், மற்றும், கடத்தப்பட்டனர். இஸ்லாம் தீவிரவாதிகளின் வன்முறையால், கிறிஸ்தவர்கள் இடம்பெயர்ந்தனர், மற்றும், தங்கள், ஆலயங்களைக் கட்டாயமாக மூடினர்.  மறைசாட்சிகளாகவும் சிலர் மரணத்தைத் தழுவினர். அவர்களில் ஒருவர், 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி மறைசாட்சி மரணம் எய்திய அருள்பணி Ragheed Ganni. 2006ம் ஆண்டில், கல்தேய வழிபாட்டுமுறை அருள்பணி Saad Sirop Hanna அவர்கள் கடத்தப்பட்டு, கடும் சித்ரவதைகளுக்கு உள்ளானார். பிணையல்தொகை வழங்கப்பட்டபின் அவர் விடுதலை செய்யப்பட்டார். 2014ம் ஆண்டில் ஐஎஸ் அமைப்பு மொசூல், மற்றும், அதற்கு அருகிலிருக்கும் பல கிறிஸ்தவ கிராமங்களைக் கைப்பற்றி, அங்கிருந்து கிறிஸ்தவர்களைக் கட்டாயமாக வெளியேற வைத்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள், குர்திஸ்தானின் தன்னாட்சி பகுதியான எர்பிலில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் துன்பங்களை எதிர்கொண்டுள்ள ஈராக் கிறிஸ்தவர்களையும், மற்றவர்களையும் சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஈராக்கிற்குச் செல்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ். மார்ச் 04, இவ்வியாழனன்று, ஈராக் மக்களிடம் காணொளிச் செய்தி வழியாகப் பேசியுள்ள திருத்தந்தை, அமைதியின் திருப்பயணியாக வருகிறேன், அமைதி, உடன்பிறந்த உணர்வு, ஒப்புரவு ஆகிய செய்திகளைப் பகிர்ந்துகொள்வதற்காக, இத்திருத்தூதுப்பயணத்தை மேற்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். உங்களைச் சந்திக்க, உங்கள் முகங்களைக் காண, பழங்கால மற்றும், மிகச்சிறந்த கலாச்சாரத் தொட்டிலாகிய, உங்கள் நிலத்தைப் பார்வையிட நெடுங்காலமாய் ஆவலாய் இருந்தேன் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். மார்ச் 05, இவ்வெள்ளியன்று துவங்கி, மார்ச் 08, வருகிற திங்களன்று நிறைவடையும் திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணத்தின் நோக்கம் நிறைவேற இறைவனை மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 March 2021, 15:39