தேடுதல்

பாக்தாத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் பாக்தாத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை: பாக்தாத் நகரில் முதல் நாள் நிகழ்வுகள்

இளையோர், தங்களின் வாழ்வுப் பாதையில், வழிகாட்டும் விண்மீன்களைக் கண்டுகொள்ள திருத்தந்தை அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான்

மார்ச் 05, இவ்வெள்ளிக்கிழமை காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 33வது வெளிநாட்டு திருத்தூதுப் பயணமாக, ஈராக் நாட்டிற்குப் புறப்பட்டார். இந்த திருத்தூதுப் பயணத்தின் வழியாக, புனித பூமியில் அமைந்துள்ள, விவிலியத்தில் முக்கியத்துவம் பெற்ற நாடுகளில், இந்நாள்வரை திருத்தந்தையர் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளாத ஒரே நாடு ஈராக் என்ற குறையும் நீக்கப்பட்டுவிட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மாநகரிலிருந்து நான்கரை மணி நேரம் விமானப் பயணம் மேற்கொண்டு, ஈராக் தலைநகர் பாக்தாத் பன்னாட்டு விமானத்தளத்தில், அந்நாட்டு நேரம், பிற்பகல் சரியாக இரண்டு மணிக்கு காலடி பதித்தார். அந்நேரத்தில், ஈராக் பிரதமர் Mustafa Al-Kadhimi அவர்கள், (முந்தைய பெயர் Mustafa Abdul-Latif Mishatat) திருத்தந்தையை ஆவலோடு இருகரம் நீட்டி வரவேற்றார். அந்த விமான நிலையத்தின் முக்கிய விருந்தினர் அறையில் இவர்கள் இருவரும் சிறிதுநேரம் தனியே கலந்துரையாடினர். அதன்பின்னர், பாக்தாத் அரசுத்தலைவர் மாளிகைக்கு, பாதுகாப்புப் படையினரின் அணி வகுப்போடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குண்டு துளைக்காத காரில் அழைத்து செல்லப்பட்டார். திருத்தந்தை காரில் ஏறுவதற்குச் சென்ற வழியில், மக்கள், ஈராக் மற்றும், வத்திக்கான் கொடிகளுடன், ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தனர். விமானத்தளத்திலிருந்து அரசுத்தலைவர் மாளிகைக்கு, திருத்தந்தை சென்ற சாலைகளில் இளையோர் நின்று அவரை வாழ்த்தினர்.

அரசுத்தலைவர் மாளிகையில் ஈராக் அரசுத்தலைவர் Barham Ahmed Salih Qassim அவர்கள் திருத்தந்தையை வரவேற்றார். அந்த மாளிகையில் நாட்டின் அரசு, தூதரக, மற்றும், சமுதாய அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை உரையாற்றினார். அமைதி மற்றும், மனிதகுல உடன்பிறந்த உணர்வுக்குத் தொண்டாற்றும் இயல்பை, மதம், தன்னிலே கொண்டிருக்கின்றது. கொலை, நாடுகடத்தல், பயங்கரவாதம், அடக்குமுறை போன்ற செயல்களை நியாயப்படுத்துவதற்கு, கடவுளின் பெயர் ஒருபோதும் பயன்படுத்தப்படக் கூடாது என்று கூறினார். இந்த சந்திப்பை முடித்து, பாக்தாத் மீட்பரின் அன்னை மரியா சீரோ கத்தோலிக்க ஆலயத்தில், அந்நாட்டு ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள், வேதியோர் ஆகியோருக்கு உரையாற்றினார், திருத்தந்தை. வன்முறையும், காழ்ப்புணர்வும் மதத்தோடு ஒத்துச் செல்லாதவை என்றும் திருத்தந்தை கூறினார். 2010ம் ஆண்டில், இந்த ஆலயத்தின்மீது, நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், இரு இளம் அருள்பணியாளர்கள், பெண்கள், சிறார் உட்பட 48 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Scholas Occurentes

இத்திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வில், இறுதியாக, பாக்தாத் திருப்பீட தூதரகத்தில், உள்ளூர் நேரம் மாலை 6.30 மணிக்கு, ஈராக்கில் இயங்கும், Scholas Occurentes இளையோர் அமைப்பில் கலந்துகொள்பவர்களைச் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்த சந்திப்பில், இந்த அமைப்பின் இத்தாலிய ஒருங்கிணைப்பாளர் Mario Del Verme அவர்களோடு, ஈராக்கில் பல்வேறு மதங்களைச் சார்ந்த இளையோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின்போது, இளையோர் ஒவ்வொருவரும் தங்களின் வருங்காலக் கனவுகள் பற்றி திருத்தந்தையிடம் எடுத்துரைத்தனர். திருத்தந்தையும், இளையோர் நம்பிக்கையோடு வாழுமாறும், அவர்கள் தங்களின் வாழ்வுப் பாதையில், வழிகாட்டும் விண்மீன்களைக் கண்டுகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார். திருத்தந்தை, பாக்தாத் நகரில் நிறைவேற்றிய முதல் நாள் நிகழ்வுகள் இத்துடன் நிறைவுற்றன.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2021, 14:23