தேடுதல்

Vatican News

குர்திஸ்தானின் எர்பில் நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்

எர்பில் நகரம், உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நகரில், கி.மு.2,300ம் ஆண்டிலேயே மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ஈராக் திருத்தூதுப் பயணத்தின் மூன்றாவது நாளாகிய, மார்ச் 07, இஞ்ஞாயிறன்று, எர்பில், மோசூல், கரகோஷ் ஆகிய நகரங்களில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றினார். இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 6.20 மணிக்கு, பாக்தாத் திருப்பீட தூதரகத்திலிருந்து, குண்டுதுளைக்காத கறுப்புநிற காரில், பாக்தாத் விமான நிலையம் சென்று, எர்பில் நகருக்குப் பயணமானார்.

குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதி, எர்பில் நகரம்

அராபியத்தில் அர்பில், குர்து மொழியில் Hewlêr எனவும் அழைக்கப்படும் எர்பில் நகரம், ஈராக்கிய குர்திஸ்தானின் தன்னாட்சிப் பகுதியின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமுமாகும். 2005ம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதி, ஈராக் நாட்டிற்கு வடகிழக்கே, ஈரானுக்கு கிழக்கே, துருக்கிக்கு வடக்கே, சிரியாவிற்கு மேற்கே அமைந்துள்ளது. இப்பகுதி நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சிரியா நாட்டு எல்லையிலிருந்து முன்னூறு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள எர்பில் நகரம், உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நகரில், கி.மு.2,300ம் ஆண்டிலேயே மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த பழமையான நகரத்தில், பல நூற்றாண்டுகளாக, சுமேரியர், பபிலோனியர், மெதேனியர், உரோமையர், Abbassidகள், ஒட்டமான்கள் உட்பட, பலர் வாழ்ந்து வந்துள்ளனர். ஏறத்தாழ ஒரு இலட்சத்து பத்தாயிரம் சதுர மீட்டர்கள் பரப்பளவுடன், அந்நகரைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து முப்பது மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்நகரை, 2014ம் ஆண்டில், யுனெஸ்கோ நிறுவனம், உலகப் பாரம்பரிய சொத்து இடமாக அறிவித்தது. இந்நகருக்கு உள்ளே பெரிய மசூதி, குர்து துணி அருங்காட்சியகம், எர்பில் கலாச்சார அருங்காட்சியகம், சிரியா மரபு அருங்காட்சியகம் உட்பட, பல முக்கிய இடங்கள் உள்ளன. இந்நகரிலுள்ள புனித யோசேப்பு கல்தேய பேராலயம், மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலய வளாகத்தைச் சுற்றி, அசிரிய கிறிஸ்தவர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்கள், புதிய அரமேய மொழியைப் பேசுகின்றனர். இந்நகரம், கிமு 21ம் நூற்றாண்டிலிருந்து, கிமு 7ம் நூற்றாண்டின் இறுதி வரை, அசிரியப் பேரரசின் முக்கிய நகரமாக இருந்தது. எர்பில் நகரில், அண்மை ஆண்டுகளில், ஐஎஸ் இஸ்லாமிய அரசுக்கு அஞ்சி, மோசூல், கரகோஷ், மற்றும், சில இடங்களிலிருந்து வெளியேறிய 5,40,000 ஈராக்கிய புலம்பெயர்ந்தோர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தவிர, குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதியில், சிரியா நாட்டுப் புலம்பெயர்ந்தோர் முகாம்களும் உள்ளன.

எர்பில் நகரில் வரவேற்பு

எர்பில் நகர் விமான நிலையத்தைச் சென்றடைந்த திருத்தந்தைக்கு, பெண் ஒருவர் மலர்கள் கொடுத்து வரவேற்றார். மக்கள் ஒலிவக் கிளைகளை ஆட்டிக்கொண்டு திருத்தந்தையை வரவேற்றனர். குர்திஸ்தான் அரசுத்தலைவர் Nechirvan Barzani, பிரதமர் Masrour Barzani ஆகிய இருவரும் திருத்தந்தையை வரவேற்று, அவரை, அந்த விமான நிலையத்தின் முக்கிய விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

குர்திஸ்தான் அரசுத்தலைவர் Nechirvan Barzani
குர்திஸ்தான் அரசுத்தலைவர் Nechirvan Barzani

அந்த அறையில் அரசு, சமுதாய, மற்றும், சமயத் தலைவர்கள் ஆகியோர் கூடியிருந்தனர். ஏறத்தாழ 20 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்வில் அரசுத்தலைவர் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். திருத்தந்தையும் தன் எண்ணங்களை அவர்களோடு பகிர்ந்துகொண்டார். அரசுத்தலைவருக்கும், பிரதமருக்கும் வெள்ளிப் பதக்கங்களைப் பரிசாக அளித்தார். பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எர்பில் நகரிலிருந்து 86 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, மோசூல் நகருக்கு 35 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.

07 March 2021, 15:02