தேடுதல்

மியான்மார் நாட்டில் காவல்துறையினர் முன் மண்டியிட்டு விண்ணப்பித்த அருள்சகோதரி Ann Nu Thawng மியான்மார் நாட்டில் காவல்துறையினர் முன் மண்டியிட்டு விண்ணப்பித்த அருள்சகோதரி Ann Nu Thawng  

திருத்தந்தை - நானும் மியான்மார் தெருக்களில் மண்டியிடுகிறேன்

மியான்மார் நாட்டிலும், பாரகுவாய் நாட்டிலும் அமைதி திரும்புவதற்கு திருத்தந்தை விடுத்துள்ள விண்ணப்பங்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டிற்கு நம்பிக்கை தரும் எண்ணத்துடன், அங்கு போராடிவரும் பல இளையோர், தங்கள் உயிரை இழந்து வருகின்றனர் என்றும், ஒவ்வொரு நாளும் அங்கு நடைபெறும் வேதனைகள் நிறுத்தப்படவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மார்ச் 17, இப்புதனன்று வழங்கிய மறைக்கல்வி உரையின் இறுதியில் மீண்டும் ஒருமுறை விண்ணப்பித்தார்.

மியான்மார் நாட்டிற்காக மீண்டும் ஒரு விண்ணப்பம்

இராணுவம், மற்றும் காவல்துறையினர் முன்பாக சாலையில் மண்டியிட்டு, அருள் சகோதரி Ann Nu Thawng அவர்கள் விண்ணப்பித்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், "'வன்முறையை நிறுத்துங்கள்' என்ற வேண்டுதலுடன், நானும், மியான்மார் தெருக்களில் மண்டியிடுகிறேன். 'உரையாடலை மேற்கொள்ளுங்கள்' என்று கூறி, என் இரு கரங்களையும் விரித்து வேண்டுகிறேன்" என்ற சொற்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உணர்வுப்பூர்வமான விண்ணப்பத்தை விடுத்தார்.

இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதியிலிருந்து மியான்மார் இராணுவம் அந்நாட்டின்மீது சுமத்தியுள்ள இராணுவ ஆட்சியை எதிர்த்து, மியான்மார் மக்கள், குறிப்பாக, இளையோர், அந்நாட்டில் மேற்கொண்டுவரும் போராட்டங்களில், இதுவரை, 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இராணுவம் தன் அடக்குமுறை நிலைப்பாட்டை விடுத்து, உரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், மியான்மார் ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்களும், தொடர்ந்து பலமுறை விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரகுவாய் நாட்டிற்காக விண்ணப்பம்

அத்துடன், பாரகுவாய் நாட்டில் உருவாகியிருக்கும் பதட்ட நிலைகளைக் குறிப்பிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைக்கல்வி உரையின் இறுதியில், அந்நாட்டிற்காக, மற்றுமொரு விண்ணப்பத்தை முன்வைத்தார்.

Caacupé புதுமைகளின் அன்னையாம் மரியாவின் பரிந்துரையால், பாரகுவாய் நாட்டில், உரையாடல் வழியே நல்ல முடிவுகள் எடுக்கப்படவேண்டும் என்று செபிப்பதாகவும், வன்முறையினால் எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்விண்ணப்பத்தில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 March 2021, 11:35