தேடுதல்

Vatican News
மெக்சிகோ பாப்பிறை கல்லூரி மாணவர்களுக்கு உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் மெக்சிகோ பாப்பிறை கல்லூரி மாணவர்களுக்கு உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

கனிவு, ஒப்புரவு, உடன்பிறந்த நிலையுடன் உழைக்க அழைப்பு

திருத்தந்தை : ஒருவர் ஒருவரோடு ஒப்புரவாகவும், நீதியான உலகைக் கட்டியெழுப்புதில் தங்களை அர்ப்பணிக்கவும், 'கடவுளோடு ஒப்புரவாகுங்கள்' என்ற அழைப்பை விடுத்து, உதவுங்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவனின் பார்வையை ஒத்ததாய், நம் பார்வையும், கனிவு, ஒப்புரவு, மற்றும் உடன்பிறந்த நிலையுடன் கூடிய உணர்வுகளால் நிரப்பப்பட்டதாக இருக்கவேண்டும் என மார்ச் 29, இத்திங்கள் காலை, தன்னைத் திருப்பீடத்தில் சந்தித்த மெக்சிகோ பாப்பிறை கல்லூரி மாணவர்களிடம் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரிலுள்ள மெக்சிகோ பாப்பிறை கல்லூரியில் பயிலும் மாணவர்களை, இத்திங்களன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டில் மெக்சிகோ நாட்டில், தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன எனவும், வத்திக்கான் பெருங்கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் நிறைவேற்றப்படும் குவாதலூப்பே அன்னை மரியா திருவிழாக் கொண்டாட்டங்கள் வழி அது புதுப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

வன்முறைகள், சமூக, பொருளாதார சரிநிகரற்ற தன்மைகள், இலஞ்ச ஊழல், நம்பிக்கை இழத்தல், குறிப்பாக இளையோர் நம்பிக்கையிழந்து வாழ்தல், போன்ற நிலைகளால் துன்புறும் உலகிற்கு, கனிவுடனும், ஒப்புரவின் கருவியாகவும், உடன்பிறந்த உணர்வு நிலையை ஊக்குவிப்பவர்களாகவும் அருள்பணியாளர்கள் செயல்பட வேண்டியதை வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அருள்பணியாளர்கள் பின்பற்றும் கனிவின் பாதை, எவரையும் ஒதுக்கி வைக்காமல், அனைவரையும் வரவேற்பதாய், ஒரே இடத்தில் நிற்காமல், பிறரன்புடன், மக்களை நோக்கி அடியெடுத்து வைத்து சேவையாற்றுவதாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் அன்னைக்குரிய கனிவுநிறை அன்புடன் செயல்பட, அன்னை மரியா நமக்கு எடுத்துக்காட்டாக உள்ளார் எனக் கூறினார்.

ஒரு நாட்டின் பல்வேறு கலாச்சாரங்கள், மதப் பின்னணிகள் என்ற அழகிய வண்ணங்களைக்கொண்டு பல வண்ண பின்னல் ஒன்றை உருவாக்கும்போது, அனைத்து மக்களும், அவர்கள் எத்தகைய வேறுபட்ட பின்னணிகளைக் கொண்டிருந்தாலும் இணைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

மக்கள், ஒருவர் ஒருவரோடு ஒப்புரவாகவும், நீதியான உலகைக் கட்டியெழுப்புதில் தங்களை அர்ப்பணிக்கவும், 'கடவுளோடு ஒப்புரவாகுங்கள்' (2 கொரி 5:20) என்ற அழைப்பை அவர்களுக்கு விடுத்து, உதவ வேண்டியது திருஅவைப் பணியாளர்களின் கடமை என்பதை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்வு நிலை கண்ணோட்டத்துடன் செயல்படவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

நம் பொதுவான இல்லமாகிய இவ்வுலகை மதிக்கவும், புதியதோர் உலகை கட்டியெழுப்பவும், உடன் பிறந்த உணர்வுடன் கூடிய பங்கேற்பு அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் ஒவ்வொருவரின் குறைபாடுகளையும், உலகம் தரும் சோதனைகளையும், நம்மை மாற்றியமைக்க வேண்டிய தேவைகளையும் உணர்ந்தவர்களாக செயல்படவேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

மேலும், இதே நாளில், கியூபா நாட்டின் வத்திக்கானுக்கான புதிய தூதர் René Juan Mujica Catelar அவர்கள், தன் நம்பிக்கைச் சான்றிதழ்களை திருத்தந்தையிடம் சமர்ப்பித்து, பொறுப்பேற்றுக் கொண்டார்.

29 March 2021, 14:00