தேடுதல்

அன்னை மரியாவின் மௌன மொழி, மிகவும் அர்த்தமுள்ளது

அயர்லாந்தின் Knock கிராமத்தில், 142 ஆண்டுகளுக்குமுன், புனித யோசேப்பு, நற்செய்தியாளர் புனித யோவான் ஆகியோர் அருகிலிருக்க, அன்னை மரியா மௌனமாக காட்சியளித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அயர்லாந்து நாட்டில் பல ஆண்டுகளாக தேசியத் திருத்தலமாக விளங்கிய Knock அன்னை மரியா திருத்தலம், மார்ச் 19, இவ்வெள்ளி மாலையில், திருநற்கருணை மற்றும், மரியா பன்னாட்டுத் திருத்தலமாக, அதிகாரப்பூர்வமாக உயர்த்தப்பட்ட நிகழ்விற்கு காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த திருத்தலத்தின் முக்கியமான இந்த தருணத்தில், உங்களோடு இருப்பதற்கு, இந்த ஊடகத்தை ஒரு வாய்ப்பாக, மகிழ்ச்சியோடு பயன்படுத்துகிறேன் என்று, அயர்லாந்து கத்தோலிக்கரிடம் கூறியுள்ள திருத்தந்தை, 1879ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி, புனித யோசேப்பு, திருத்தூதர் புனித யோவான் ஆகியோரோடு, புனித கன்னி மரியா, கிராமத்து மக்கள் சிலருக்கு காட்சியளித்தார் என்று கூறினார்.

142 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற இந்த காட்சியைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்ற, அயர்லாந்தின் புகழ்பெற்ற திருப்பயணத் தலங்களில் ஒன்றாக, Knock திருத்தலம் மாறியுள்ளது என்றுரைத்துள்ள திருத்தந்தை, அயர்லாந்து மக்கள், தாங்கள் வாழும் இடங்களில், தங்களின் நம்பிக்கை, மற்றும், Knock அன்னை மரியா பக்தியைப் பரப்பி வருகின்றனர் என்றும் கூறினார்.

மறைப்பணி மக்கள்

அயர்லாந்து நாட்டின் அருள்பணியாளர்கள் பலர், தொலைதூர நாடுகளுக்கு நற்செய்தியின் மறைப்பணியாளர்களாகச் சென்றுள்ளனர், அவர்கள் இந்த அன்னை மரியா மீது பக்தியைத் தொடர்ந்து காத்துவருகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, நீங்கள் மறைப்பணி மக்கள் என, அயர்லாந்து நாட்டினரைப் புகழ்ந்து பேசினார்.

அமைதியின் மிகப்பெரும் மதிப்பு

இந்த காட்சியில், மரியாவின் கரங்கள், இறைவேண்டல் முறையில் விரித்தபடி இருந்தது,

செபத்தின் முக்கியத்துவத்தையும்,  இந்த திருத்தலத்திற்குச் சென்று திரும்பும்போது, எதிர்நோக்கின் செய்தியை எடுத்துச்செல்லவேண்டும் என்பதையும், நமக்கு காட்டுகிறது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

Knock கிராமத்தில் அன்னை மரியா காட்சியளித்தபோது, அவர் எதுவுமே பேசவில்லை, அவரது மௌன மொழி, நாம் கொண்டிருக்கும் மாபெரும் பொருள்பொதிந்த மொழியாக உள்ளது என்றும், அமைதியின் மிகப்பெரும் மதிப்பை, Knock திருத்தலம் நமக்கு செய்தியாக வழங்குகிறது என்றும் திருத்தந்தை கூறினார்.

அனைவரையும் வரவேற்கும் பொறுப்பு

இந்த திருத்தலம், பன்னாட்டுத் திருத்தலமாக உயர்த்தப்பட்டுள்ளவேளை, உலகின் எப்பகுதியிலிருந்தும் இங்கு வரும் திருப்பயணிகளை இருகரம் விரித்து வரவேற்குமாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்வுகொண்ட செப அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் அவர்களை, சகோதரர், சகோதரிகளாக அங்கீகரிப்பதைத் தவிர, வேறு எதையும் தான் கேட்கவில்லை என்றும் அயர்லாந்து கத்தோலிக்கரிடம் கூறியுள்ளார்.

Knockல் அன்னை மரியா

142 ஆண்டுகளுக்குமுன், 1879ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி, Knock என்ற கிராமத்தில், புனித யோசேப்பு, நற்செய்தியாளர் புனித யோவான், வானதூதர்கள், கடவுளின் செம்மறி ஆகியோர் புடைசூழ, அன்னை மரியா மௌனமாகத் தோன்றினார். அந்த இடத்தில் இத்திருத்தலம் எழுப்பப்பட்டுள்ளது. புனித கன்னி மரியாவின் கணவரான புனித யோசேப் பெருவிழாவன்று இத்திருத்தலம், பன்னாட்டு திருத்தலமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அயர்லாந்தில், 2018ம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற உலக குடும்பங்கள் மாநாட்டிற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சமயத்தில் Knock திருத்தலத்திற்கும் சென்று, அங்கு நண்பகல் மூவேளை செபத்தையும் செபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2021, 14:01