தேடுதல்

பாக்தாத் விமான நிலையத்தில் பிரியாவிடை பாக்தாத் விமான நிலையத்தில் பிரியாவிடை 

மனித உடன்பிறப்புநிலையின் பாதை முக்கியமானது

மனித உடன்பிறப்புநிலை என்ற அறிக்கையால் தூண்டப்பட்டு, 2020ம் ஆண்டில், அனைவரும் உடன்பிறந்தோர் என்ற திருமடலை எழுதினேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மார்ச் 08, இத்திங்களன்று, பாக்தாத் நகரிலிருந்து உரோம் நகருக்குத் திரும்பிய விமானப் பயணத்தின்போது நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், 2019ம் ஆண்டில், அபு தாபியில் பல்சமய கூட்டம் ஒன்றில் கையெழுத்திடப்பட்ட மனிதகுல உடன்பிறப்புநிலை என்ற அறிக்கை பற்றியும் விளக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2019ம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி, அபு தாபியில், அல்-அசாரின் முஸ்லிம் பெரிய குரு அகமது அல் தாயிப் அவர்களோடு தான் கையெழுத்திட்ட இந்த அறிக்கை, ஆறு மாதங்களாக, அல் தாயிப் அவர்களோடு சேர்ந்து தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்டது என்றும், அத்தயாரிப்பு காலத்தில், இறைவேண்டல், சிந்தனை, அறிக்கைத் திருத்தங்கள் ஆகியவை இடம்பெற்றன என்றும், திருத்தந்தை கூறினார்.

உலக அளவில் மனித உடன்பிறப்புநிலையை ஊக்குவிப்பதற்கு இந்த அறிக்கை முதல் முயற்சியாக இருந்தது என்றும், இந்த அறிக்கையால் தூண்டப்பட்டு, 2020ம் ஆண்டில், மனித உடன்பிறப்புநிலையை மையப்படுத்திய, “அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற திருமடலை தான் எழுதியதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

மனித உடன்பிறப்புநிலையின் பாதை முக்கியமானது என்றும், இந்த இரு ஏடுகளும்,  மனித உடன்பிறப்புநிலையைத் தேடுவதில், ஒரே திசையை நோக்கிச் செல்வதால், இவையிரண்டும் கருத்தூன்றி வாசிக்கப்படவேண்டும் என்றும் திருத்தந்தை, கேட்டுக்கொண்டார்.

ஊடகவியலாளர்களிடம் திருத்தந்தை
ஊடகவியலாளர்களிடம் திருத்தந்தை

“மனிதர், மதத்தால் உடன்பிறப்புக்கள் அல்லது, படைப்பால் சமமானவர்கள்” என்று, ஈராக்கின் ஷியா இஸ்லாம் பிரிவின் தலைவர் al-Sistani அவர்கள் கூறியதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, உடன்பிறப்புநிலை என்பது, சமத்துவமாகும், அது கலாச்சாரத்தின் பாதையாகவும் இருக்கின்றது என்று, தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

மனித உடன்பிறப்புநிலை பற்றிய திருஅவையின் சிந்தனையும், குறிப்பாக, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கப் போதனைகளோடு மாறியுள்ளது என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்குத் துணிச்சல் இல்லை என்று சிலரும், திருஅவை கோட்பாடுகளுக்கு எதிராகச் செல்கிறேன் என்று சிலரும் குறை கூறுகின்றனர், ஆனால் இவை, பல்சமய உரையாடலை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் எதிர்படும் இடையூறுகளில் ஒன்றாகவும் உள்ளன என்று கூறினார்.

ஆயினும், திருஅவையில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள், எப்போதும் இறைவேண்டல், கலந்துரையாடல், ஆலோசனை கேட்பது, சிந்தித்துப் பார்ப்பது போன்றவை வழியாக இடம்பெறுகின்றன என்றும், திருத்தந்தை, விமானப்பயணத்தில் ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2021, 15:19