தேடுதல்

திருத்தந்தையுடன், கர்தினால் ஆஞ்செலோ தெ தொனாத்திஸ் - கோப்புப் படம் திருத்தந்தையுடன், கர்தினால் ஆஞ்செலோ தெ தொனாத்திஸ் - கோப்புப் படம் 

பாப்பிறை கட்டடங்கள், கலாச்சாரக் கூடங்களாக மாற உத்தரவு

புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவிலுடன் இணைக்கப்பட்டுள்ள கட்டடங்களை, கலாச்சாரக் கூடங்களாக பயன்படுத்துவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உத்தரவு வழங்கியுள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவிலுடன் இணைக்கப்பட்டுள்ள கட்டடங்களை, அருங்காட்சியகமாகவும், கலாச்சாரக் கூடங்களாகவும் பயன்படுத்துவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உத்தரவு வழங்கியுள்ளார்.

உரோம் மறைமாவட்டத்தில் தன் பிரதிநிதியாகப் பணியாற்றும் கர்தினால் ஆஞ்செலோ தெ தொனாத்திஸ் அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள ஒரு மடலில், வரலாற்று பாரம்பரியம் நிறைந்த இந்தக் கட்டடங்கள், வருங்காலத் தலைமுறையினருக்கு நம் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதற்கென பயன்படுத்தப்படுவது அவசியம் என்று கூறியுள்ளார்..

வரலாற்றில், பல நூற்றாண்டுகளாக, கத்தோலிக்கத் திருஅவை, கலைப்படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது என்றும், இறைவனுக்கு உரிய மாண்பை வழங்குவதற்கும், மதநம்பிக்கையை வளர்ப்பதற்கும், கலை வடிவங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மடலில் கூறியுள்ளார்.

கலையின் மீது ஆர்வம் கொண்டிருப்பதால் மட்டுமல்ல, இன்றையச் சூழலில், பழம்பெரும் கலாச்சாரப் பாரம்பரியங்களுக்கு ஆபத்தும், சவால்களும் பெருகிவருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று, திருத்தந்தை தன் மடலில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

உரோமைய ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கலைக் கருவூலங்களின் அழகும், முக்கியத்துவமும் மக்களைச் சென்றடையவேண்டும் என்ற ஆவலில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மடலில் கூறியுள்ளார்.

இலாத்தரன் ஒப்பந்தம், உரோம் நகர ஆளுமை, வத்திக்கான் நாட்டின் ஆளுமை ஆகிய அனைத்தையும் இணைத்து, இந்தக் கட்டடங்களின் பயன்பாடுகள் தீமானிக்கப்படும் என்றும் திருத்தந்தை இம்மடலில் தெளிவுபடுத்தியுள்ளார்.

தன சார்பில் உரோம் மறைமாவட்டத்தை வழிநடத்திவரும் கர்தினால் தெ தொனாத்திஸ் அவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி கூறி, திருத்தந்தை இம்மடலை நிறைவு செய்துள்ளார்.

இவ்வுலகில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொணர்வதற்கு, கலையும், அழகியலும் பயன்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருவது, குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 March 2021, 12:55