தேடுதல்

திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயண நிறைவு

அமைதி மற்றும், அன்பின் அடையாளமான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரசன்னம், அனைத்து ஈராக்கியர்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் – அரசுத்தலைவர் Salih

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 05, இவ்வெள்ளிக்கிழமை முதல், மார்ச் 07, இஞ்ஞாயிறு முடிய, ஈராக் நாட்டில், தனது 33வது வெளிநாட்டு திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டு, மார்ச் 08, இத்திங்களன்று, வத்திக்கான் திரும்பினார். உரோம் நேரம் பகல் 12.44 மணியளவில், உரோம் சம்ப்பினோ விமானத்தளத்தில் வந்திறங்கிய திருத்தந்தை, வத்திக்கானுக்குத் திரும்பிய வழியில், உரோம் மேரி மேஜர் பெருங்கோவில் சென்று, அன்னை மரியாவிற்கு, ஏராளமான மலர்கள் சாற்றி, நன்றி தெரிவித்தார்.[ Photo Embed: உரோம் மேரி மேஜர் பசிலிக்காவில் நன்றி ]

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 08, இத்திங்கள் உள்ளூர் நேரம் காலை 7 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம், இத்திங்கள் காலை 9.30 மணிக்கு, பாக்தாத் திருப்பீடத் தூதரகத்தில், விசுவாசிகளின் பங்கேற்பின்றி திருப்பலி நிறைவேற்றினார். பின்னர், அந்த திருப்பீடத் தூதரகத்தில், இந்நாள்களில் தனக்கு நல்வரவு அளித்து கவனித்துக்கொண்ட, ஏறத்தாழ முப்பது பேருக்கு நன்றி சொல்லி ஆசிர் அளித்தார். இத்திருத்தூதுப் பயணத்தைக் குறிக்கும், கலைவேலைப்பாடுகள் நிறைந்த பதக்கம், மற்றும், மொசைக் வேலைப்பாடுகள் கொண்ட, தன் தலைமைப் பணியின் இலச்சினை ஆகிய இரண்டையும், அவ்வில்லத்திற்குப் பரிசாக அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாக்தாத் விமானத்தளத்தில் பிரியாவிடை

பாக்தாத் திருப்பீட தூதரகத்திலிருந்து குண்டுதுளைக்காத, கறுப்புநிற காரில் பாக்தாத் விமானத்தளம் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஈராக் அரசுத்தலைவர்  Barham Salih அவர்களும், அவரது துணைவியாரும் வரவேற்றனர். விமான நிலையத்தின் முக்கிய விருந்தினர் அறையில் இவர்களோடு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர், திருத்தந்தையை உரோம் நகருக்கு அழைத்து வருவதற்காக காத்திருந்த, A330 ஆல் இத்தாலியா விமானம் வரை, சிவப்பு கம்பள விரிப்பில் அழைத்துச் சென்றார், அரசுத்தலைவர் Barham Salih. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அங்கு கூடியிருந்த எல்லாருக்கும் நன்றி சொல்லி உரோம் நகருக்குப் புறப்பட்டார். அப்போது உள்ளூர் நேரம் இத்திங்கள் காலை 9.54 மணியாக இருந்தது. 5 மணி 15 நிமிடங்கள் கொண்ட இந்த விமானப் பயணத்தில், துருக்கி, கிரேக்கம், அல்பேனியா, இத்தாலி ஆகிய நாடுகளின் வான்பரப்பில் விமானம் பறந்துசெல்கையில், அந்நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு செபமும், வாழ்த்தும் கலந்த தந்திச் செய்திகளை அனுப்பவும் திருத்தந்தை மறக்கவில்லை. ஈராக் அரசுத்தலைவர் Barham Salih அவர்களுக்கு அனுப்பிய தந்திச் செய்தியில், அந்நாட்டினர் தனக்கு அளித்த இனிய வரவேற்பிற்கு நன்றி தெரிவித்திருப்பதோடு, அந்நாட்டில், அமைதி, ஒற்றுமை, மற்றும், வளமை ஆகியவை மலர, தான் எல்லாம்வல்ல கடவுளை இறைஞ்சுவதாகவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

ஈராக் அரசுத்தலைவர், திருத்தந்தை
ஈராக் அரசுத்தலைவர், திருத்தந்தை

 

ஈராக் அரசுத்தலைவரின் டுவிட்டர்

ஈராக் அரசுத்தலைவர் Barham Salih அவர்கள், இத்திங்கள் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு, தன் டுவிட்டர் பக்கத்தில், திருத்தந்தைக்கு நன்றி சொல்லி, செய்தி ஒன்றையும் பதிவுசெய்துள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாக்தாத், நஜாஃப், ஊர், நினிவே, எர்பில் ஆகிய பகுதிகளில் நம் விருந்தினராக இருந்தார். நம் நாட்டுடன் தோழமையுணர்வு மற்றும், மனிதாபிமானம் நிறைந்த மிகப்பெரும் செய்தியைக் கொண்டுவந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வாழ்த்துவோம். அமைதி மற்றும், அன்பின் அடையாளமான அவரது பிரசன்னம், அனைத்து ஈராக்கியர்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற சொற்கள், ஈராக் அரசுத்தலைவரின் டுவிட்டர் செய்தியில் வெளியாயின.

08 March 2021, 14:47