தேடுதல்

முஸ்லிம் மூத்தோர் அவை முஸ்லிம் மூத்தோர் அவை 

முஸ்லிம் மூத்தோர் அவையின் அறிக்கை

பல ஆண்டுகள் அழிவு, மற்றும், போருக்குப்பின், ஈராக் மக்களின் காயங்கள் குணப்படுத்தப்பட, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, திருத்தூதுப் பயணம் உதவும் – முஸ்லிம் அவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ஈராக் திருத்தூதுப் பயணத்தையொட்டி, அந்நாட்டு முஸ்லிம் மூத்தோர் அவை, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. திருத்தந்தையின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈராக் திருத்தூதுப் பயணம், ஈராக் பகுதியிலும், உலகம் முழுவதிலும், வன்முறைக்குப் பலியானவர்களோடு திருத்தந்தையின் தோழமையுணர்வை வெளிப்படுத்தும் செய்தியாகவும், அமைதியை ஊக்குவிக்க மிகப்பெரும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. பல ஆண்டுகள் அழிவு, மற்றும், போருக்குப்பின், ஈராக் மக்களின் காயங்கள் குணப்படுத்தப்பட, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, திருத்தூதுப் பயணம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். அதேநேரம், இப்பயணம், ஈராக் மற்றும், அதைச் சுற்றியுள்ள பகுதியில், சகிப்புத்தன்மை மற்றும், நல்லிணக்கம் நிறைந்த, ஒளிமயமான வருங்காலத்திற்கு, நம்பிக்கையை வழங்குகிறது. பல சவால்கள் நிலவும் இக்காலக்கட்டத்தில், இப்பயணம் இடம்பெறவேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தி இருப்பது, அவர், மனிதகுல உடன்பிறந்த உணர்வு மீது வைத்துள்ள முழு நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், காழ்ப்புணர்வு, பிரிவினைவாதம், ஆயுதமோதல்கள் ஆகியவற்றின் மத்தியில் சமத்துவத்தைத் தாங்கிப் பிடிக்க, திருத்தந்தையின் விருப்பத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. அமைதியை ஊக்குவிக்க திருத்தந்தை தொடர்ந்து உழைத்து வருகிறார் என்றும், இந்த முஸ்லிம் மூத்தோர் அவை, தன் அறிக்கையில் திருத்தந்தையை பாராட்டியுள்ளது. மேலும், இந்த அவையின் பொதுச் செயலர் Sultan Al Remeithi அவர்கள் கூறுகையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முஸ்லிம் உலகில் மேற்கொண்டுள்ள பல்வேறு பயணங்கள், கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே உரையாடலையும், நட்பையும் வலுப்படுத்தவே பணியாற்றியுள்ளது. இதே நோக்கத்திற்காக சோர்வின்றி உலகெங்கும் பயணம் மேற்கொள்ளும், அலி-அசாரின் பெரிய குருவும், முஸ்லிம் மூத்தோர் அவையின் தலைவருமான Ahmed El-Tayeb அவர்கள் பற்றியும் இவ்வாறே கூறலாம். 2019ம் ஆண்டு பிப்ரவரியில், இந்த இரு மாமனிதர்களும், மத அடையாளங்களும், அரபு ஐக்கிய அமீரகத்தில் சந்தித்து மனித உடன்பிறந்தஉணர்வு நிலை என்ற அறிக்கையில் கையெழுத்திட்டு வெளியிட்டனர் என்று எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 March 2021, 14:34