தேடுதல்

ஈராக் அரசுத்தலைவர் Barham Saleh திருத்தந்தைக்கு பரிசுகளை வழங்குகிறார் ஈராக் அரசுத்தலைவர் Barham Saleh திருத்தந்தைக்கு பரிசுகளை வழங்குகிறார் 

அரசுத்தலைவர் Barham Salih அவர்களின் வரவேற்புரை

திருத்தந்தையே, எங்களின் காயங்களைக் குணப்படுத்தி வருகிறோம். தாங்களும் எங்களோடு சேர்ந்து எங்களைக் குணப்படுத்துகிறீர்கள் - ஈராக் அரசுத்தலைவர்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஈராக்கில், மெசபத்தோமியா பூமியில், இறைவாக்கினர்கள், மற்றும், விண்ணக மதங்களின் நிலத்தில் திருத்தந்தையே, தங்களை வரவேற்கிறோம். அமைதியின் புகலிடமான பாக்தாத் மட்டுமல்ல, Najaf, Mosul, Erbil, Qaraqosh ஆகிய நகரங்களும் வரவேற்கின்றன. இறைவாக்கினர்களுக்கெல்லாம் இறைவாக்கினரான ஆபிரகாம் பிறந்த, மிகப் பழமையான Ur நகரும் வரவேற்கின்றது.அமைதி, சமுதாய நீதி, ஏழ்மை அகற்றல், ஆகியவற்றுக்கான உமது அழைப்பும், உரையாடல், நல்லிணக்க வாழ்வு, மனித உடன்பிறந்தநிலை ஆகியவற்றை ஊக்குவிக்க தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் பாராட்டுக்குரியவை. எங்களின் அழைப்பை ஏற்று இங்கு வந்தது, ஈராக் மக்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் அக்கறையைக் காட்டுகின்றது. வன்முறை, பயங்கரவாதம், கொடூரங்கள் போன்ற புயல்கள் ஈராக்கை அடித்துச் சென்றிருந்தாலும், நாடு தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், யஜிதிகளும் அருகருகே வாழ்ந்து வருகின்றனர். ஆலயங்களும் மசூதிகளும் அருகருகே உள்ளன. இந்த பூமியின் உப்பாகத் திகழும் கிறிஸ்தவர்கள், நாட்டின் துயரங்களில் உடன் இருந்தவர்கள். மத்தியக் கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்கள் இன்றி நினைத்துப் பார்க்க முடியாது. கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள வாழ்க்கைநிலை, உலகிற்கு அமைதியும், ஒருமைப்பாடும் அவசியம் என்பதை உணர்த்தியுள்ளது. தங்களின் வருகையை, ஒரு வரலாற்று வாய்ப்பாக நாங்கள் உணர்கிறோம். "சமய உரையாடலுக்கு ஆபிரகாம் இல்லம்" என்ற தலைப்பில் நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியை ஆசீர்வதித்தருளும். திருத்தந்தையே, எங்களின் காயங்களைக் குணப்படுத்தி வருகிறோம். தாங்களும் எங்களோடு சேர்ந்து குணப்படுத்துகிறீர்கள். தங்களின் வருகையை ஈராக்கியர்களாகிய நாங்கள் பெருமையோடு நினைக்கின்றோம், வருகைக்கு மிக்க நன்றி. இவ்வாறு ஈராக் அரசுத்தலைவர் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2021, 15:07