தேடுதல்

திருத்தந்தையை வரவேற்கும் ஈராக் மக்கள் திருத்தந்தையை வரவேற்கும் ஈராக் மக்கள் 

திருத்தந்தையின் பயணத்திற்காக, ஈராக் புரட்சிக்குழு போர் நிறுத்தம்

பாக்தாத், நவீன ஈராக்கின் தலைநகரம் மட்டுமல்ல, மத்திய காலங்களில், Sunni இஸ்லாம் பிரிவினர் அனைவருக்கும் மையமாகவும் விளங்கியது

மேரி தெரேசா: வத்திக்கான்

ஈராக்கில் செயல்பட்டு வருகின்ற ஷியா புரட்சிக்குழு ஒன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ஈராக் திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு, ஒருதலைச் சார்பான இடைக்கால போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. Guardians of Blood Brigade என்று அழைக்கப்படும் இந்த புரட்சிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின்போது, எந்தவிதமான ஆயுத தாக்குதல்களையும் நிறுத்தி வைக்கிறோம், இதனை, இமாம் al-Sistani அவர்களை மதிப்பதன் அடையாளமாகவும், அராபிய விருந்தோம்பலின் பெயரிலும் ஆற்றுகின்றோம் என்று கூறப்பட்டுள்ளது. Ayatollah Sistani அவர்கள், ஷியா இஸ்லாம் பிரிவில் முக்கியமான தலைவர்களில் ஒருவராவார். அராபியத்தில், "Saraya Awliya al-Dam" என்றழைக்கப்படும் இந்த புரட்சிக்குழுவே, கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி, ஈராக்கின் எர்பில் நகரில் அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலைமையில் அமைந்துள்ள இராணுவத் தளத்தைத் தாக்கியது. இத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும், குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஈராக்கில் பாதுகாப்பு

இதற்கிடையே, திருத்தந்தை ஈராக்கில் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றும் மூன்று நாள்களில், எந்தவித அசம்பாவிதங்களும் இடம்பெறாமல் இருப்பதற்காக, ஈராக் அரசும், தன் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஈராக்கின் உள்துறை மற்றும், பாதுகாப்பு அமைச்சகங்களின் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படைகளும், தேசிய பாதுகாப்பு அமைப்பு, உளவியல் துறை ஆகியவற்றின் ஆட்களும், திருத்தந்தை செல்லுகின்ற இடங்கள், மற்றும் சாலைகளில் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், 24 மணி நேரமும் மிகுந்த விழிப்புடன் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஈராக் பிரதமர் Mustafa al-Kazemi அவர்கள், இவ்வியாழன் இரவில் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஈராக் மக்களாகிய நாங்களும், அரசும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம். சுமேரியர், பபிலோனியர், அசீரியர், இறைவாக்கினர்கள், மற்றும், கலாச்சாரங்களின் நிலமாகிய மெசபத்தோமியா, பொதுவான மனித விழுமியங்களைக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். ஈராக் மக்கள் திருத்தந்தையை வரவேற்பதன் அடையாளமாக, பாக்தாத் நகரின் தெருக்களும் ஆலயங்களும், திருத்தந்தையின் உருவப்படங்கள் மற்றும், வத்திக்கான் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மசூதி வளாகத்திலும், வத்திக்கான் கொடியை பார்க்க முடிகின்றது. மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டில் முதலில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றிய நகரம் பாக்தாத். இந்நகரம், நவீன ஈராக்கின் தலைநகரம் மட்டுமல்ல, மத்திய காலங்களில், Sunni இஸ்லாம் பிரிவினர் அனைவருக்கும் மையமாகவும் விளங்கியது. இந்நகரம், வரலாறு, மதம் ஆகியவற்றின் சிறப்பையும் கொண்டுள்ளது.  இந்நகரம், 762ம் ஆண்டில் Caliph Al-Mansour அவர்களால் உருவாக்கப்பட்டு, Abbasid பேரரசின் புதிய தலைநகரமாகவும் மாறியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2021, 14:57