தேடுதல்

மீட்பின் அன்னை பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர், துறவிகளுடன் திருத்தந்தை மீட்பின் அன்னை பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர், துறவிகளுடன் திருத்தந்தை 

ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியருக்கு உரை

ஈராக்கில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்கள், இச்சமுதாயத்தில், கடுகு விதைகளாக வாழ, உங்கள் முயற்சிகளைத் தொடரும்படி கேட்டுக்கொள்கிறேன் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மதிப்பிற்குரிய ஆயர்களே, அன்பு அருள்பணியாளர்களே, துறவியரே, சகோதரர்களே, சகோதரிகளே,

ஒரு தந்தையின் பாசத்துடன் உங்கள் அனைவரையும் நான் அரவணைக்கிறேன். தன் இறை பராமரிப்பின் வழியே, நம் சந்திப்பை உருவாக்கித்தந்த ஆண்டவருக்கு  நன்றி கூறுகிறேன். ஆண்டவருக்கும், அவரது திருஅவைக்கும் பிரமாணிக்கமாக இருப்பதற்கு, தங்கள் குருதியினால் விலைகொடுத்த சகோதரர்கள், சகோதரிகள் ஆகியோரின் இரத்தத்தால் புனிதமடைந்துள்ள, மீட்பின் அன்னை பேராலயத்தில் நாம் கூடியிருக்கிறோம். அவர்களது தியாகத்தின் நினைவு, சிலுவையின் சக்தி மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையைப் புதுப்பிக்கட்டும்.

ஆயர்களாக, அருள்பணியாளர்களாக, துறவியராக, மறைக்கல்வி ஆசிரியர்களாக, மற்றும், பொதுநிலைத் தலைவர்களாக, கிறிஸ்துவின் விசுவாசிகள் கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் கவலைகள் ஆகியவற்றில் நீங்கள் பங்கேற்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருநாளும் சந்திக்கும் இறைமக்களின் தேவைகளும், மேய்ப்புப்பணி சார்ந்த சவால்களும் இந்த பெருந்தொற்று காலத்தில் இன்னும் கூடுதலாகியுள்ளன. துவக்ககாலம் முதல் இந்த நாட்டில் பிரசன்னமாகியிருக்கும் திருஅவையின் மீது நீங்கள் கொண்டுள்ள திருத்தூதுப்பணி ஆர்வம், ஒருபோதும், அடைக்கப்படவோ, குறைக்கப்படவோ கூடாது. நம்மைச் சுற்றி பரவியிருக்கும் மனத்தளர்ச்சி என்ற தொற்றுக்கிருமியினால் நாம் பாதிக்கப்படுவது மிக எளிது. இந்தக் கிருமியை ஒழிக்க, நமக்குத் தேவையானது, தினசரி செபமும், நமது பணியில் பிரமாணிக்கமும். இந்த நோய் தடுப்பு மருந்தின் வழியே நாம் நற்செய்தியின் மகிழ்வைப் பகிர்ந்துகொள்ள, புதுப்பிக்கப்பட்ட சக்தியுடன் முன்னேறிச் செல்வோம்.

இந்த நம்பிக்கைச் செய்தி, இவ்வுலகிற்கு மிக அதிகமாகத் தேவைப்படுகிறது! நற்செய்தியின் மகிழ்வால் மாற்றமடைந்த வாழ்வே, கிறிஸ்துவைப் பறைசாற்றும் மிகச்சிறந்த சாட்சி என்பதை நாம் ஒருபோதும் மறவாதிருப்போமாக. இந்நாட்டில் திருஅவை துவங்கிய வரலாற்று காலம் முதல், இயேசுவின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை, ஒருவரையொருவர் 'தொற்றியுள்ளதை' நாம் காண்கிறோம்.

ஒவ்வொருநாள் வாழ்விலும் துன்பங்களைச் சந்திப்பது, ஈராக் நாட்டு விசுவாசிகளின் அனுபவம். போர், பெரும் இன்னல், சக்தியற்ற அடிப்படை கட்டமைப்பு, பொருளாதார பாதுகாப்பற்ற நிலை ஆகிய காரணங்களால், கிறிஸ்தவர்கள் உட்பட, இந்நாட்டு மக்கள் பலர், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் புலம்பெயர்ந்து வாழும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இத்தருணங்களில், மக்களுடன் தங்களையே இணைத்துக்கொண்ட ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். ஈராக்கில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்கள், இச்சமுதாயத்தில், கடுகு விதைகளாக (காண்க. மத். 13:31-32) வாழ, உங்கள் முயற்சிகளைத் தொடரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சுயநலத்தையும், போட்டி மனப்பான்மையையும் தவிர்த்து, உடன்பிறந்த உணர்வில் வாழவும், ஒருவர் ஒருவரைப் பேணிக்காக்கவும், கிறிஸ்துவின் அன்பு நம்மை அழைக்கிறது. இவ்வேளையில், நான், கம்பளம் என்ற உருவகத்தை எண்ணிப்பார்க்கிறேன். ஈராக்கில், வரலாற்று சிறப்புமிக்க வழிபாடு மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சபையும், தனிப்பட்ட வண்ணம் கொண்ட கயிறாக உள்ளது. பல்வேறு வண்ணம் கொண்ட கயிற்றினை இணைத்து ஒரு கம்பளமாக உருவாக்கும் கலைஞன், கடவுள்.

அந்தியோக்கு நகரின் புனித இஞ்ஞாசியார் கூறிய அறிவுரையை நாம் மனதில் ஏற்போம்: "உங்களிடையே இருக்கும் எதுவும், உங்களைப் பிரிக்காதிருப்பதாக... ஒரே இறைவேண்டல், ஒரே மனம், அன்பிலும், மகிழ்விலும் நிறைந்த ஒரே நம்பிக்கை" (Ad Magnesios, 6-7: PL 5, 667). சபைகளுக்கிடையிலும், பங்கு மற்றும் மறைமாவட்டங்களுக்கிடையிலும் பாலங்கள் அமைக்க, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

திருஅவையின் மறைப்பணியை முன்னெடுத்துச் செல்ல, அனைவருக்கும் தனிப்பட்ட பங்கு உண்டு. நம்மிடையே, அவ்வப்போது எழும் புரிந்துகொள்ளாமையின் காரணமாக, உடன்பிறந்த நிலை என்ற கம்பளியை நெய்யமுடியாமல், முடிச்சுகள் விழுகின்றன. ஆனால், கூடுதலான அன்பாலும், அருளாலும், இந்த முடிச்சுக்களை அவிழ்க்க இயலும்.

இவ்வேளையில், என் சகோதர ஆயர்களுக்கு சிறப்பான சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். நமது ஆயர் பணியானது, கடவுளோடு, இறைமக்களோடு மற்றும், அருள்பணியாளர்களோடு நெருங்கியிருப்பதில் அடங்கியுள்ளது. அருள்பணியாளர்களுடன் நெருக்கமாக ஒன்றித்திருங்கள். அவர்கள், உங்கள் வடிவில், ஒரு மேலாண்மை அதிகாரியை அல்ல, மாறாக, அவர்கள் மீது அக்கறை கொண்ட ஒரு தந்தையைக் காணவேண்டும்.

அன்பு அருள்பணியாளர்களே, துறவியரே, மறைக்கல்வி ஆசிரியர்களே, மற்றும் அருள்பணித்துவ வாழ்வுக்கு பயிற்சிபெற்று வருவோரே, நீங்கள் யாவரும், இறைவனின் குரலுக்குச் செவிமடுத்து, சிறுவன் சாமுவேலைப் போல, "இதோ! அடியேன்" (1 சாமு. 3:4) என்று பதில் கூறியிருக்கிறீர்கள். அந்த உங்கள் பதிலிறுப்பு, ஒவ்வொரு நாளும் உங்களைப் புதுப்பித்து, வழிநடத்திச் செல்வதாக.

நம் பணியில் நிர்வாகம் ஒரு முக்கிய கூறாக இருப்பினும், நமது நேரத்தை, கூட்டங்கள் போடுவதிலும், அறையில் அமர்ந்து வேலை செய்வதிலும் செலவிடாமல், மக்களைச் சந்திப்பதில் அதிகமாகச் செலவிடவேண்டும். குறிப்பாக, மற்றவர்களால் ஒதுக்கிவைக்கப்படும் இளையோர், முதியோர், நோயுற்றோர், வறியோர் ஆகியோருக்கு நாம் அதிக நேரத்தைச் செலவிடவேண்டும். மக்களின் பணியாளர்களாக இருங்கள், நிர்வாகப் பணியாளர்களாக அல்ல.

பத்து ஆண்டுகளுக்கு முன், இந்தப் பேராலயத்தில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சகோதரர்கள், சகோதரிகளைப் பற்றி மீண்டும் ஒருமுறை குறிப்பிட விரும்புகிறேன். இவர்களை அருளாளர்களாக உயர்த்தும் பணிகள் துவங்கியுள்ளன. வெறுப்பையும், வன்முறையையும் ஊக்குவித்து, போரைத் தூண்டுவதோ, இரத்தம் சிந்துவதோ, உண்மையான மத படிப்பினைகளுக்கு முரணானவை (காண்க. Fratelli Tutti, 285) என்பதை, இவர்களது மரணங்கள் நமக்கு வலிமையாக நினைவுறுத்துகின்றன. வன்முறையாலும், பெரும் இன்னல்களாலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும், அவர்கள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை இப்போது நினைவுகூர விழைகிறேன்.

நாளை, ஊர் நகரில், பல்வேறு மதத் தலைவர்களைச் சந்திக்கும்போது, இறைவனின் குழந்தைகள் நடுவே, அமைதியையும், ஒற்றுமையையும் வளர்ப்பது ஒன்றே மதங்களின் முக்கிய நோக்கம் என்பதை பறைசாற்றுவேன். அமைதியைக் கொணர்வதற்கு நீங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்காக நான் நன்றி கூறுகிறேன்.

இவ்வேளையில், நான் இளையோரை சிறப்பாக எண்ணிப்பார்க்கிறேன். உலகெங்கும், குறிப்பாக, இந்நாட்டில், இளையோர், வாக்குறுதி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றிற்கு அடையாளமாக விளங்குகின்றனர். இங்கு உங்களிடம் விலைமதிப்பற்ற, பழமை வாய்ந்த புதைபொருள் கருவூலங்கள் மட்டுமல்ல, எதிர்காலத்தின் கணக்கிட இயலாத கருவூலமும் உள்ளது: அதுதான் இளையோர்! இந்தக் கருவூலத்தைப் பாதுகாப்பது, உங்கள் கடமை. இந்நாட்டில் பல ஆண்டுகள் நிலவிவரும் மோதல்களால், இளையோரின் பொறுமை, அதிகமாக சோதிக்கப்பட்டுள்ளது. இவர்களை நம்பிக்கையில் வளர்ப்பது உங்கள் கடமை.

சகோதரர்களே, சகோதரிகளே, மீட்பின் வரலாற்றுடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ள இந்நாட்டில், உங்கள் திருமுழுக்கு, மற்றும் உறுதிப்பூசுதல் வழியாகவும், பின்னர், உங்கள் அருள்பொழிவு, அல்லது, துறவற அர்ப்பணம் வழியாகவும், நீங்கள், மறைபரப்புப்பணியில் சீடர்களாக அனுப்பப்பட்டிருக்கிறீர்கள். எதிர்ப்புகள் நடுவிலும், மறைசாட்சிகளின் குருதியால் சக்திபெற்று, உங்கள் சாட்சியம் ஈராக் நாட்டில் ஒளிவீசட்டும்.

மீட்பின் அன்னை மரியாவும், திருத்தூதரான புனித தோமாவும் உங்களுக்காகப் பரிந்துபேசி, உங்களை என்றும் காப்பார்களாக! உங்கள் அனைவரையும் நான் அன்புடன் ஆசீர்வதிக்கிறேன். எனக்காக இறைவேண்டல் செய்ய கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2021, 14:49