தேடுதல்

Vatican News
மோசூல் நகரில் இராணுவ வீரருடன் சிறுமி மோசூல் நகரில் இராணுவ வீரருடன் சிறுமி   (Fotografico Vatican Media)

புது ஒளியைக் கொணர்ந்த ஈராக் நாட்டு திருத்தூதுப் பயணம்

ஆபிரகாம் பிறந்த நாட்டுக்கு, திருத்தந்தை ஒருவர், முதல்முறையாகச் சென்றது, அங்கு வாழும் கிறிஸ்தவர்களுக்கு மாபெரும் உந்துசக்தியாக அமைந்தது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கடந்த பத்தாண்டுகளாய் போரினால் காயமுற்றிருக்கும் ஈராக் நாட்டு மக்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகையால், புது ஒளியைக் கண்டுள்ளனர் என்றும், மீண்டும் வாழ விரும்பும் ஆவலுடன் அவர்கள் தங்கள் வாழ்வைத் தொடர்கின்றனர் என்றும் வத்திக்கான் செய்தித்துறையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வத்திக்கான் செய்தித்துறையின் ஆசிரியர் குழுமத்தில் ஒருவரான Massimiliano Menichetti அவர்கள், திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தில் பங்கேற்றதன் பயனாக எழுதியுள்ள தலையங்கப் பகுதியில் இவ்வாறு கூறியுள்ளார்.

மோசூல் நகரில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு இராணுவ வீரருக்கும், ஒரு சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பை, ஒரு காட்சியாக தான் கண்டதை மையப்படுத்தி, Menichetti அவர்கள் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்.

தன் இடுப்பைச் சுற்றி வெடிகுண்டுகளையும், கையில் ஒரு துப்பாக்கியையும் வைத்திருந்த அந்த இராணுவ வீரர், தன்னை நெருங்கி வந்த சிறுமியை தூக்கியபோது, அச்சிறுமி அவரைப்பார்த்து புன்னகை செய்ய, அந்த வீரரும் பதிலுக்குச் புன்னகை செய்த காட்சி, அந்த நாட்டுக்கு நம்பிக்கை தரும் ஓர் அடையாளமாக இருந்ததென்று Menichetti அவர்கள் தன் கட்டுரையில் கூறியுள்ளார்.

இச்சிறுமியை இராணுவ வீரர் தூக்கிப்பிடித்திருந்த இடத்திற்குப், பின்புலத்தில், குண்டுகளால் சிதைக்கப்பட்டிருந்த வீடுகளும், கட்டடங்களும் இருந்தன என்றும், அந்தச் சூழல், அவ்விருவரின் புன்னகையை இன்னும் கூடுதல் பொருளுள்ளதாகச் செய்தது என்றும் Menichetti அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரகாம் பிறந்த நாட்டுக்கு, திருத்தந்தை ஒருவர், முதல்முறையாகச் சென்றது, அங்கு வாழும் கிறிஸ்தவர்களுக்கு மாபெரும் உந்துசக்தியாக அமைந்தது என்றும், அத்துடன், அந்நாட்டில் வாழும் பெரும்பான்மை முஸ்லிம்கள், மற்றும் சிறுபான்மை யாசிதி இன மக்கள் அனைவருக்குமே புத்துணர்வை வழங்கிய ஒரு பயணமாக அமைந்தது என்றும், Menichetti அவர்கள் தன் கட்டுரையில் கூறியுள்ளார்.

இதுவரை பல ஆண்டுகளாய் ஈராக் நாட்டை, மோதல்கள் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்களின் இடமாகக் கூறிவந்த உலக ஊடகங்கள், முதல்முறையாக, அந்நாட்டில் வாழும் மக்களை உலகினர் கவனத்திற்குக் கொணரவும், அந்நாட்டில் வரவேற்பு, பாடல்கள், மகிழ்வு இவை உள்ளன என்பதை உணர்த்தவும் முயன்றன என்று Menichetti அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணத்தின் இறுதி நிகழ்வாக எர்பில் திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற்ற திருப்பலியில், ஈராக் மக்கள், குர்திஸ்தான் பகுதி மக்கள், மற்றும் சிரியாவிலிருந்து அந்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் புலம்பெயர்ந்தோர் அனைவரும் இணைந்து செபித்தது, அமைதியும், ஒப்புரவும் கொண்ட மாறுபட்டதோர் ஈராக் நாடும், மாறுபட்டதோர் உலகமும் சாத்தியமே என்பதை உணர்த்தியது என்ற கருத்துடன், Menichetti அவர்கள் தன கட்டுரையை நிறைவு செய்துள்ளார்.

17 March 2021, 13:00