தேடுதல்

Vatican News
குருத்து ஞாயிறு திருப்பலியின்போது - 280321 குருத்து ஞாயிறு திருப்பலியின்போது - 280321  (ANSA)

புனித வாரம் முழுவதும் நம்மைத் தொடர்ந்துவரும் ஆச்சரியங்கள்

திருத்தந்தை : இயேசு காலத்து மக்கள் இயேசுவை வியந்து பார்த்தார்களேயொழிய, அந்த வியத்தகுச் செயல்களால் தாங்கள் கவரப்பட்ட அவர்கள் அனுமதிக்கவில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலிய உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பகல் 2 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலினுள் உள்ள திருத்தந்தையர் திருப்பலி மேடைக்கு பின்புறமுள்ள கோவிலில், சிறிய அளவில், குருத்தோலை பவனியைத் துவக்கி, பின்னர், கர்தினால்களுடன் இணைந்து, குருத்தோலை ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டைப்போல், இந்த ஆண்டும் பெருமளவான விசுவாசிகளின் பங்கேற்பின்றி, அமைதியான முறையில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இத்திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரையின் முக்கிய கருத்துக்களை, இதோ உங்களுக்குத் தருகிறோம்:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே,

ஒவ்வோர் ஆண்டும் இந்த குருத்து ஞாயிறு திருவழிபாடு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. எருசலேமில் நுழையும் கிறிஸ்துவை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நாம், அவர் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாவதையும், சிலுவையில் அறையப்படுவதையும் காண்கிறோம். புனித வாரம் முழுவதும் நம்மைத் தொடர்ந்துவரும் இந்த ஆச்சரியம் குறித்து சிறிது ஆழமாக உற்று நோக்குவோம்.

துவக்கத்திலிருந்தே இயேசு நம்மை ஆச்சரியத்திலாழ்த்துகிறார். மக்கள் மிகவும் உயரிய வரவேற்பை கொடுக்க, அவரோ, கழுதையின் மீது ஏறி வருகிறார். பாஸ்கா திருவிழாவின்போது, தங்களை விடுவிக்கவல்ல வல்லமையுள்ளவராக மக்கள் அவரை எதிர்நோக்கியிருக்க, அவரோ, தன்னையே பலியாக்கி பாஸ்காவை நிறைவுச் செய்கிறார். உரோமையர்களை வாள் கொண்டு வெற்றி காண மக்கள் விரும்பும்போது, அவரோ சிலுவையை கையிலெடுக்கிறார்.

ஓசன்னா என்று பாடிய மக்கள், சிலுவையில் அறையுமென கத்துமளவிற்கு என்ன நடந்தது? அவர்கள், மெசியாவைக் குறித்த தப்பெண்ணங்களில் மூழ்கிப் போயிருந்தார்கள். அம்மக்கள் இயேசுவை வியந்து பார்த்தார்களேயொழிய, அந்த வியத்தகுச் செயல்களால் தாங்கள் கவரப்பட அவர்கள் அனுமதிக்கவில்லை.

இன்றும், எண்ணற்ற மக்கள், இயேசுவை, வியந்து பார்க்கின்றனர். அவர் எடுத்துரைத்த நல்லவைகளைக் குறித்து, அவர் அன்பாலும் மன்னிப்பாலும் நிறைந்திருந்ததைக் குறித்து, அவரின் வாழ்வு எடுத்துக்காட்டு இவ்வுலக வரலாற்றை மாற்றியுள்ளதைக் குறித்து வியந்து நோக்குகின்றனர். ஆனால், அவர்களின் வாழ்வில் அந்த வியப்பும், பாராட்டும், எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. அவரை வியந்து பார்த்தால் மட்டும் போதாது, அவரின் வழிகளில் நடக்க முன்வரவேண்டும்.

நம் ஆண்டவர் குறித்தும் அவரின் பாஸ்கா குறித்தும் நம்மை ஆச்சரியப்பட வைப்பது என்ன? தன்னைத் தாழ்த்தியதன் வழியாக அவர் மகிமையை அடைந்தார். துன்பதுயர்களையும், மரணத்தையும் ஏற்றுக்கொண்டதன் வழியாக, அவர் வெற்றி வாகைச் சூடினார். நாமோ நம் வெற்றியின் பாதையில் இத்தகைய நிலைகளை தூர ஒதுக்கி வைக்கவே பார்ப்போம். புனித பவுல் கூறுவதுபோல், இயேசுவோ, 'தம்மையே வெறுமையாக்கி.....தம்மையே தாழ்த்திக்கொண்டார்' (பிலிப். 2:7-8). எல்லாம் வல்லவர் தன்னை ஒன்றுமில்லாதவராக்கியது, உண்மையிலேயே ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றுதான்.

அனைத்துமறிந்த வார்த்தையானவர், சிலுவையிலிருந்து நமக்கு மௌனத்தில் கற்பிக்கிறார். மன்னருக்கெல்லாம் மன்னர் சிலுவை மரத்தில் முடிசூட்டப்படுகிறார். அனைத்துலகிற்கும் ஆண்டவர், அனைத்தும் களையப்ப்பட்டு, மகிமைக்குப் பதிலாக, முட்களால் முடிசூட்டப்படுகிறார். மனித உரு எடுத்த நன்மைத்தனம் இங்கு அவமானப்படுத்தப்பட்டு, அடிக்கப்படுகிறது. இந்த அவமானங்களையெல்லாம் என் கடவுளே நீர் ஏன் தாங்க வேண்டுமென ஆவல்கொண்டிர்?

அவர் நமக்காக இதை ஏற்றுக்கொண்டார். நம் துன்பதுயரங்கள், மற்றும் மரணத்தின்போது நம்மைக் கைவிடாமல் நமதருகில் இருக்கவேண்டும் என்பதற்காக, இதையெல்லாம் செய்தார். நம்மை மீட்கும்படியாக, நம் துயரங்களின், துன்பங்களின் ஆழத்தில் இறங்கும் வண்ணம், தான் சிலுவையில் ஏற்றப்பட தன்னையேக் கையளித்தார். நம்மைப்போன்று அனைத்துத் துன்பங்களையும் அனுபவித்து, அவைகளை மீட்டு உருமாற்றினார். கடவுள் நம்மருகேயிருக்கிறார், அவர் தான் வெற்றி வீரர். ஆனால் இந்த குருத்தோலையின் வெற்றி, சிலுவை மரத்தை தாண்டிச் செல்லவேண்டும். ஏனெனில், குருத்தோலையும் சிலுவையும் ஒன்றுக்கொன்று பிரிக்கமுடியாதவை.

நமக்கு தினசரி வாழ்வில் மன்னிப்பையும், புதிய வாழ்வுக்குரிய வாய்ப்பையும் தரும் நிலை குறித்து வியந்து, அவரைப் பின்பற்றும் வரத்தை வேண்டுவோம். அது குறித்து மகிழ்ச்சியுடன் பேசுவோம். வியத்தகு நிலைகளால் அனுபவங்களைப் பெறாத விசுவாசம், அருளின் அதிசயங்களை கண்டுகொள்ள முடியாததாகிறது. அந்த விசுவாசத்தால், வாழ்வு தரும் உணவை ருசி பார்க்கவோ, வார்த்தையானவருக்கு செவிமடுக்கவோ, நம் சகோதரர் சகோதரிகளின் அழகை புரிந்துகொள்ளவோ, இயற்கை எனும் கொடையின் அழகை இரசித்து பாராட்டவோ இயலாது. இந்தப் புனித வாரத்தில் சிலுவையை நோக்கி நம் பார்வையை உயர்த்தி, வியந்து ஏற்கும் அருளை வேண்டுவோம்.

இயேசுவின் பாடுகள் குறித்து தியானித்துக்கொண்டிருந்தபோது, தன் உடன் சகோதரர்கள் அழாமலிருந்தது குறித்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தார், அசிசியின் புனித பிரான்சிஸ். நாம் என்ன செய்கிறோம்? நாம் கடவுளின் அன்பால் கவரப்பட்டுள்ளோமா? அவரைக் குறித்து வியந்து பாராட்டி பின்பற்றத் தவறியுள்ளோமா? நம் துயர்களும், எதிர்பார்ப்பு ஏமாற்றங்களும் நம்மை முடக்கியுள்ளனவா? இறைவனின் செயலகள் குறித்து வியந்து பாராட்டும் அருளை தூய ஆவியாரிடமிருந்து பெறும் வகையில் நம்மைத் திறக்காமல் உள்ளோமா?

இறைவனை வியந்து நோக்குவதிலிருந்து மீண்டும் துவங்குவோம். சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி, 'எவ்வளவு தூரம் என்னை அன்புகூர்கிறீர்? என்னை விலைமதிப்பவற்றவனாய் நடத்துகிறீரே?' என்று அவரிடம் பேசுவோம். வாழ்வு என்பது, நாம் எவ்வளவு கொண்டிருக்கிறோம் என்பதிலோ, நாம் என்ன சாதித்தோம் என்பதிலோ அல்ல, மாறாக நாம் அன்பு கூரப்படுவதை உணர்வதிலும், நாம் பிறரை அன்புகூர்வதில் கிட்டும் மகிழ்விலும் அடங்கியுள்ளது. சிலுவையில் அறையுண்ட இயேசுவில் நாம், ஒதுக்கப்பட்ட ஒருவரை, தள்ளி வைக்கப்பட்ட ஒருவரை சந்திக்கிறோம். இது குறித்து வியப்பில் ஆளும் நாம், உலகில் ஒதுக்கப்பட்டவர்களாய், தள்ளிவைக்கப்பட்டவர்களாய் வாழும் ஒவ்வொருவரிலும் இயேசுவைக் காண முன்வரவேண்டும். இயேசு உயிழந்தபோது, அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், இயேசு உயிர் துறந்ததைக் கண்டு, “இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்என்று கூறியதை இன்றைய நற்செய்தி வாசகம் காண்பிக்கிறது. ஆம். அவர் அன்பில் இறந்ததை அந்த நூற்றுவர் தலைவர் கண்டார். அவர் தாங்கொண்ணா துயர்களை அனுபவித்தார், ஆனாலும் அவர் நம்மை அன்புகூர்வதை நிறுத்தவில்லை. இதுவே, இயேசு குறித்து வியந்து நோக்க வைக்கிறது. அவரால் மரணத்தைக்கூட அன்பால் நிரப்பமுடியும். தான் இதுவரை கண்டிராத ஓர் அன்பை சிலுவை மரணத்தில் கண்டதன் வழியாக நூற்றுவர் தலைவர் இறைவனைக் கண்டுகொண்டார். இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்என்ற அவரின் வார்த்தைகளுடன் பாடுகளின் படலம் நிறைவுறுகின்றது. இயேசுவின் புதுமைகளையும், வல்ல செயல்களையும் எண்ணற்றோர் வியப்புடன் பார்த்து, அவரை இறைமகனாக ஏற்றுக்கொண்டதை நாம் விவிலியத்தில் பார்க்கிறோம். ஆனால், இயேசுவோ அவர்கள் பேசவேண்டாம் என அவர்களை அமைதியாக்கினார். ஏனெனில், கடவுளை  உலக கண்ணோட்டத்துடன் கூடிய ஆச்சரியத்தில் அவரை நோக்குவதிலும், இறைவனின் வல்லசெயல்கள் குறித்த அச்சத்திலும் அவர்கள் நிலைத்திருக்க அவர் விரும்பவில்லை. ஆனால், சிலுவையின் அடியில் அப்படியல்ல, அவரே தன்னை வெளிப்படுத்தியுள்ளார். ஆயுதங்களற்ற அன்பால் நம்மை ஆளும் இறைவன் நம்மை வியப்பிலாழ்த்துகிறார். நம் இதயங்களையும், மனங்களையும் வியப்பால் நிரப்புகிறார். வியப்பால் நிரப்பப்பட்டவர்களாக நாம், சிலுவையில் அறையப்பட்டிருக்கும் இயேசுவை உற்று நோக்கி, “நீர் உண்மையாகவே இறைமகன். நீர் எம் இறைவன்' என நாமும் கூறுவோம். ஆமென்.

28 March 2021, 13:00