தேடுதல்

Vatican News
பாக்தாத், கல்தேய வழிபாட்டு முறை, புனித யோசேப்பு பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் பாக்தாத், கல்தேய வழிபாட்டு முறை, புனித யோசேப்பு பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்  (AFP or licensors)

புனித யோசேப்பு பேராலயத்தில் திருத்தந்தையின் மறையுரை

பேறுபெற்றோர் என்ற சொற்களில், முழுமையான புரட்டிப்போடுதல் நடைபெறுகிறது. ஏழையர், துயருறுவோர், துன்புறுத்தப்படுவோர் ஆகியோர் பேறுபெற்றவர் என்று அழைக்கப்படுகின்றனர் - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாக்தாத் நகரில் அமைந்துள்ள கல்தேய வழிபாட்டு முறை, புனித யோசேப்பு பேராலயத்தில், மார்ச் 6, இச்சனிக்கிழமை மாலையில், திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் வழங்கிய மறையுரையின் சுருக்கம்:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே,

இன்றைய இறைவாக்கு, நமக்கு, ஞானம், சாட்சியம், வாக்குறுதிகள் ஆகியவற்றைப் பற்றி பேசுகின்றது. இந்நாட்டில், மிகப்பழம் காலத்திலிருந்தே ஞானம் பயிரிடப்பட்டுள்ளது. ஞானத்தைத் தேடுவது, ஆண், பெண் இருவரையும் ஈர்த்துள்ளது. வசதியுடையோர், ஞானத்தை பெறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் பெறுவதும், வசதியில்லாதவர்கள், ஞானம் அடைவதிலிருந்து ஒதுக்கிவைக்கப்படுவதும் அடிக்கடி நடைபெறுகிறது. நம் காலத்தில் இன்னும் கூடுதலாக வளர்ந்துள்ள இந்த பாகுபாடு, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

இந்தக் கண்ணோட்டத்தை, ஞான நூல் புரட்டிப்போடுகிறது. எளியோர்க்கு இரக்கங்காட்டி அவர்களைப் பொறுத்தருள்வார்; வலியோரை வன்மையாகத் தண்டிப்பார் (சாலமோனின் ஞானம் 6:6). உலகின் கண்களில், குறைவாகக் கொண்டிருப்போர் தூக்கியெறியப்படுகின்றனர், அதிகமாக கொண்டிருப்போர் ஆதாயங்கள் பெறுகின்றனர். கடவுளிடம் அப்படியல்ல: சக்தி மிக்கவர்கள் அதிகம் சோதிக்கப்படுகின்றனர், நலிந்தோர் கடவுளின் ஆதாயங்களைப் பெறுகின்றனர்.

இந்தப் புரட்டிப்போடுதலை, ஞானத்தின் உருவான இயேசு, நற்செய்தியில் நிறைவு செய்கிறார். தன் முதல் மறையுரையில், பேறுபெற்றோர் என்ற சொற்களில், இந்தப் புரட்டிப்போடுதலை செய்துகாட்டுகிறார். இங்கு, முழுமையான புரட்டிப்போடுதல் நடைபெறுகிறது. ஏழையர், துயருறுவோர், துன்புறுத்தப்படுவோர் ஆகியோர் பேறுபெற்றவர் என்று அழைக்கப்படுகின்றனர்.

இயேசு கூறும் இவ்வழியில் நடப்பதால் நான் அடையும் இலாபம் என்ன? அவர் விடுக்கும் அழைப்பை ஏற்பது, பயனுள்ளதா? அந்த அழைப்பு, ஞானம் நிறைந்தது. இயேசுவின் அழைப்பு, அன்பில் ஊன்றியிருப்பதால், அது உலகின் கண்களில் வலுவற்றதாகத் தெரிந்தாலும், உண்மையில் அது, எப்போதும் வெல்கிறது. அது, சிலுவையில், பாவத்தைவிட வலிமையாகவும், கல்லறையில், சாவை வென்றதாகவும் அமைந்தது. இந்த அன்பே, நம்மிடையே பல மறைசாட்சிகளை இறுதிவரை நிலைநிறுத்தியது. கடந்த காலத்தைவிட, சென்ற நூற்றாண்டில் நாம் மிக அதிகமான மறைசாட்சிகளைப் பெற்றுள்ளோம். மறைசாட்சிகளாக உயிர்நீத்த நம் சகோதரர்கள், சகோதரிகளுக்கு அன்பே சக்தியைத் தந்தது. திருத்தூதர் பவல் கூறியுள்ளதுபோல், "அன்பு ஒருபோதும் அழியாது" (1 கொரி. 13:8)

பேறுபெற்றோர் விழுமியங்களை எவ்விதம் நடைமுறைப்படுத்துவது? இந்த விழுமியங்கள், நம்மிடம், பெரும் சாதனைகளை ஆற்றும்படி கேட்கவில்லை. நம் ஒவ்வொருநாள் வாழ்வில், சாட்சிகளாக வாழும்படி கேட்கின்றன. அவ்வப்போது சாகசங்கள் புரிவதால், பேறுபெற்றோராக வாழ இயலாது, ஒவ்வொரு நாளும் சாட்சிகளாக வாழ்வதே பேறுபெற்றோரின் வழி. சாட்சிய வாழ்வே இவ்வுலகை மாற்றும். இயேசு அவ்வாறு வாழ்ந்தார். அன்பினால் உருவாகும் அந்தச் சாட்சியத்தைப்பற்றி புனித பவுல் இன்றைய முதல் வாசகத்தில் எடுத்துரைத்தார்.

"அன்பு பொறுமையுள்ளது" (1 கொரி. 13:4) என்று, பவுல் துவக்குகிறார். இது, நாம் எதிர்பாராத ஓர் அடைமொழி. அன்பை, நன்மைத்தனம், தாராள மனம், நற்செயல்கள் ஆகியவற்றால் விவரிப்பதற்குப் பதில், அனைத்திற்கும் மேலாக, அன்பு பொறுமையுள்ளது என்று புனித பவுல் கூறுகிறார். கடவுள் மனிதர் மீது காட்டிய பொறுமையைப்பற்றி விவிலியம் முதலில் கூறுகிறது. வரலாறு முழுவதும் மனிதர்கள் தவறிழைத்தபோது, கடவுள் பொறுமை காத்தார். பொறுமையுள்ள இந்த அன்பு, எரிச்சலுக்கு இடம்கொடாமல், மீண்டும், மீண்டும் துவங்கும். சலிப்போ, மனத்தளர்வோ அடையாமல், தொடர்ந்து செல்லும். தீமைக்கு முன், சரண் அடையாது, விட்டுக்கொடுக்காது. அன்பு கொண்டோர், சிலுவையின் வெற்றி என்ற ஞானத்தைக் கொண்டு, தீமைக்கு நன்மையால் பதில் தருவர். "அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்." (1 கொரி. 13:7)

எதிர்ப்புகள் வரும்போது நாம் என்ன செய்கிறோம்? இருவகையான சோதனைகள் நமக்குள் எழுகின்றன. முதல் சோதனை, ஓடிவிடுவது. இரண்டாவது சோதனை, கோபத்துடன், வலிமையுடன் பதிலிறுப்பது. கெத்சமனியில் சீடர்கள் இவ்விதம் பதிலிறுத்தனர். பேதுரு தன் வாளை எடுத்தார். ஓடிப்போவதோ, கோபம் கொள்வதோ எதையும் சாதிக்கவில்லை. இயேசுவோ, தன் அன்பால், பொறுமையான சாட்சியத்தால், வரலாற்றை மாற்றினார். இந்தப் பாதையைத் தேர்ந்துகொள்வோரை, இறைவன் ஆசீர்வதிக்கிறார்.

நம் முதுபெரும் தந்தை ஆபிரகாமை நோக்குவோம். அவருக்கு எண்ணிலடங்கா சந்ததிகள் உண்டு என்று ஆண்டவர் வாக்களித்தார். ஆனால், ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் வயது முதிர்ந்த காலத்தில் ஒரு வாரிசும் இல்லை. இருப்பினும், இருவரும் பொறுமை காத்ததால், முதிர்ந்த வயதில் அவர்கள் வழியே கடவுள் அற்புதங்களைச் செய்தார்.

மோசேயை நோக்குவோம். அவர் வழியே இஸ்ரயேல் மக்களை விடுவிக்கப்போவதாக கடவுள் கூறுகிறார். அவ்விதம் விடுவிப்பதற்கு, மோசே பார்வோனிடம் பேசவேண்டும் என்று பணிக்கிறார். வாய்ச்சொல்லில் வலிமையற்றிருந்த மோசே வழியே, கடவுள் தன் வாக்குறுதிகளை நிறைவு செய்தார்.

நம் அன்னை மரியாவை நோக்குவோம். சட்டப்படி குழந்தையைப் பெறமுடியாத அவரை, இறைவனின் தாயாகும்படி கடவுள் அழைத்தார். பேதுருவை நோக்குவோம். ஆண்டவரை மறுதலித்த அவர் வழியே, ஏனைய சீடர்களை திடப்படுத்தினார் இறைவன்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, அவ்வப்போது நாம் பயனற்றவர்களாக, உதவி இல்லாதவர்களாக உணரக்கூடும். அவ்வேளைகளில், நாம், மனம் தளர்ந்துவிடக்கூடாது. நம் வலுவற்ற நிலையின் வழியே, கடவுள் அற்புதங்களை ஆற்றுகிறார்.

இன்றைய வழிபாட்டில் 'பேறுபெற்றோர்' என்ற சொல்லை எட்டுமுறை கேட்டோம். நாம் இவ்வுலகில் நெருக்கடிகளைச் சந்திக்கும்போது, தவறி விழும்போது, இயேசுவால் 'பேறுபெற்றோர்' என்று ஆசீர்வதிக்கப்படுகிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது.

அன்பு சகோதரியே, அன்பு சகோதரனே, உங்கள் கரங்களைக் காணும்போது, அவை ஒன்றுமில்லாமல் இருப்பதாகத் தெரிகிறது. அவ்வேளையில் மனம் தளரவேண்டாம். பேறுபெற்றோர் என்ற ஆசீர் உங்களுடையது. உங்கள் பெயர்கள் ஆண்டவரின் உள்ளத்தில் எழுதப்பட்டுள்ளன, விண்ணகத்தில் எழுதப்பட்டுள்ளன!

இன்று, நான் உங்களோடு இணைந்து கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். மிகப்பழங்காலம் முதல் இங்கு ஞானம் பிறந்தது. அதன் கனிகளாக, பலர் சாட்சிகளாக வாழ்ந்தனர். அவர்களைப்பற்றி ஊடகங்கள் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும், அவர்கள் கடவுளின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள்.

07 March 2021, 14:52