தேடுதல்

Vatican News
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு தடுப்பூசிகள் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு தடுப்பூசிகள்   (ANSA)

புனித வாரத்தில், 1,200 ஏழைகளுக்கு தடுப்பூசிகள்

வத்திக்கானில் கடந்த சனவரியில் தடுப்பூசிகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டபோது, அவை முதலில், புனித பேதுரு வளாகத்தைச் சுற்றி வாழ்கின்ற ஐம்பது வீடற்றோர்க்கு வழங்கப்பட்டன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானின் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு தடுப்பூசி வழங்கும் குழுவின் பத்து உறுப்பினர்களை, மார்ச் 26, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1200 ஏழைகளுக்கு தடுப்பூசிகள்

மேலும், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதில் ஒருவரும் ஒதுக்கப்பட்டுவிடக்கூடாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விடுத்துவரும் எண்ணற்ற விண்ணப்பங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, சமுதாயத்தில் மிகவும் நலிந்த மக்களுக்கு, புனித வாரத்தில், தடுப்பூசிகள் வழங்கவிருப்பதாக, திருத்தந்தையின் தர்மப்பணி அலுவலகம் அறிவித்துள்ளது.

வத்திக்கானின் கோவிட்-19 குழு வழியாக, Lazzaro Spallanzani மருத்துவமனையால் வழங்கப்பட்டு, திருப்பீடத்தால் வாங்கப்பட்ட Pfizer-BioNTech தடுப்பூசிகள், சமுதாயத்தில் மிக வறியோர், மற்றும், மிகவும் ஒதுக்கப்பட்டவர்கள் என, 1,200 பேருக்கு, வருகிற உயிர்ப்பு ஞாயிறுக்குள் வழங்கப்படும் என்று, அந்த அலுவலகம் அறிவித்துள்ளது.

இத்தகைய ஏழை மக்களுக்கு மருத்துவ சிகிச்சை, மற்றும், தடுப்பூசிகள் வழங்கப்படுவதற்கு, நிதியுதவிகளுக்கும் விண்ணப்பித்துள்ள இந்த அலுவலகம், அந்த உதவிகளை, திருத்தந்தையின் பிறரன்பு வங்கிக்கணக்குக்கு (www.elemosineria.va) இணையம் வழியாக செலுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

வத்திக்கானில் கடந்த சனவரியில் தடுப்பூசிகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டபோது, திருத்தந்தையின் வேண்டுகோளின்பேரில், முதலில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தைச் சுற்றி வாழ்கின்ற, ஏறத்தாழ ஐம்பது வீடற்றோர்க்கு வழங்கப்பட்டது.

திருத்தந்தைக்கும், வத்திக்கானில் பணியாற்றுவோருக்கும் வழங்கப்பட்ட அதே தடுப்பூசிகள், வருகிற புனித வாரத்தில், வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில், 1,200 ஏழைகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

26 March 2021, 14:59